என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் தூய்மை பணி இயக்கம்
- பெரம்பலூரில் தூய்மை பணி இயக்கம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பிலான தூய்மை பணி இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,நகர் மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தூய்மை பணிகள் நடைபெற்று வரும் மதரஸா ரோடு, வடக்குமாதவி ரோடு, சாமியப்பா நகர், எளம்பலூர் ரோடு, மதனகோபாலபுரம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூய்மைப் பணியினை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத் தூய்மையை பேணிக்காப்பது நமது கடமை என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை சேகரித்து தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதிகளில் சுமார் 75 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடக்கி வைத்தார். நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






