search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    16 வயது சிறுமிக்கு 35 வயது வாலிபருடன் டும்... டும்... மணமகளின் தாய் கைது
    X

    16 வயது சிறுமிக்கு 35 வயது வாலிபருடன் டும்... டும்... மணமகளின் தாய் கைது

    • குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
    • குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.

    வேப்பந்தட்டை:

    இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 16 வயது மகளை 35 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் காளி. கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 40). இந்த தம்பதியரின் 16 வயது சிறுமிக்கு சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல் (35) என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜூன் மாதம் 13ந் தேதி உற்றார் உறவினர்கள் புடை சூழ தடபுடலாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை மோப்பம் பிடித்துக்கொண்டு சக்திவேல் சிறுமியுடன் வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனால் குடும்பத்தில் வறுமை சூழும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலின சமமின்மை காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையும் சிறிது காலத்திலேயே கசந்து போகிறது. மேலும் குழந்தை திருமணத்தால் சிறுமிகளுக்கு பிரசவத்தின்போது உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

    Next Story
    ×