என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் பேருந்து நிலையம் எல்லை பகுதியில் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் நெடுஞ்சாலைத் துறையினர் அகரம்சீகூர் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைந்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அளவீடு செய்து, அடையாளம் வைத்தனர். இதனால் அவருக்கு சாதகமாகவும், வியாபாரிகளை பாதிக்கக்கூடிய வகையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, அதை கண்டித்து அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் சார்பில் நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மதியம் 12 மணி வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால், வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு வந்த குன்னம் உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன், மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை(புதன்கிழமை) அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் அரியலூர்-அகரம் சீகூர் எல்லை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






