என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்று தனது மகனை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு அப்பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து முத்துலட்சுமியின் வீட்டை முற்றுகையிட்டது.

    சிறிது நேரத்தில் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி தனது மகனை தூக்கிக் கொண்டு வீட்டின் மறுபுறம் வழியாக வெளியேறி தப்பி ஓடினார்.

    தொடர்ந்து வீட்டுக்குள் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும், பிற பொருட்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. பாக்கு மரங்கள் சேதம் இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து ஊருக்குள் காட்டு யானை வருவதால் தோட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாலம்வயல், ஒற்றவயல் உள்ளிட்ட இடங்களில் தோட்டத்துக்குள் புகுந்து விநாயகன் காட்டு யானை நேற்று பாக்கு மரங்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பல மாதங்களாக பயிர்கள், வாகனங்களை காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

    • தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது.
    • வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம குன்னூர் அருகே உள்ளது கிளிஞ்சாடா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் வீடுகளில், ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது. வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

    கிளிஞ்சடா கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் நேற்று தனது மாட்டினை மேய்ச்சலுக்காக அங்குள்ள புல்வெளியில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பசுமாட்டினை தாக்கி கொன்றது. மாடு கத்தும் சத்தம் கேட்டு, குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர்.

    அப்போது சிறுத்தை ஒன்று மாட்டினை அடித்து கொன்று இழுத்து ெசன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே சிறுத்தை அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கேரள எல்லையை ஒட்டிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல முக்கிய சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

    கூடலூர் அருகே புறமணவயல் ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 66-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நேற்று காலை முதல் இன்று காலை வரை நீடித்த மழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அங்கிருந்த 66 குடும்பத்தினரை மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.

    இதேபோல் பந்தலூர் அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தவித்தனர். அங்கிருந்த 15 குடும்பத்தினர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், முதுமலை அருகே தெப்பக்காடு வனப்பகுதியில் உள்ள மாயாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மாயாற்றின் குறுக்கே கூடலூர்-மசினகுடி பகுதிகளை இணைக்கும் தரைப்பாலம் செல்கிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியது.

    அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றது. இதையடுத்து கூடலூர்-மசினகுடி தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் கடும் குளிரும் நிலவி வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 19 செ.மீ, கூடலூரில் 18, பந்தலூரில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

    நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பிவருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை நீர்மட்டம் 42 அடியை எட்டியதையடுத்து குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தச்சமலை, தோட்டமலை உள்பட மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. சூறைக்காற்று, மழையின் காரணமாகவும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    காற்றின் வேகம் அதிகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    • 24 மணி நேரத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. 5-வது நாளாக இன்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் அடிப்பதால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    இது தவிர பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- அவலாஞ்சி-106, அப்பர் பவானி-105, பந்தலூர்-98.2, சேரங்கோடு-96, தேவலா-64, கூடலூர்-58, குந்தா-51, அப்பர் கூடலூர்-42. பாடந்தொரை-44, பாலகொலா-38.

    • காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
    • காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது.

    இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.

    இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ஒரு குட்டியும் வந்தது.

    காட்டெருமைகள் மேய்ந்து கொண்டே சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தது.

    இதனை அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பார்த்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனசரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், விரைந்து வந்தனர்.

    கம்பி வேலியில் சிக்கி தவித்த காட்டெருமை குட்டியை மீட்டு அதற்கு தேவையான பால் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் குட்டியை தாயுடன் சேர்க்க முடிவு செய்து, தேயிலை ேதாட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.அப்போது சிறிது தொலைவில் காட்டெரு மைகள் கூட்டமாக நிற்பதை பார்த்தனர். இதையடுத்து அருகில் கொண்டு காட்டெருமையை குட்டியை விட்டனர். தாயிடம் காட்டெருமை குட்டி சேரும் வரை அங்கு நின்று கண்காணித்தனர்.குட்டி தாயிடம் சேர்ந்து உற்சாகத்துடன் சென்றதை பார்த்து விட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

    • காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
    • வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனசரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    நடு ஹட்டி கிராமத்ைதயொட்டிய தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனசரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர். பின்னர் காட்டெருமை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தேயிலை தோட்டம் வழியாக செல்லும் மின்கம்பி, அறுந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்ட பகுதியில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அப்போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை எதிர்பாரத விதமாக மின்சார கம்பியில் மோதி இறந்துள்ளது என்றனர்.

    இதையடுத்து வனத்துறையினர் இன்று காலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • அமைச்சா் ராமசந்திரன் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
    • நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.

    இதில் வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் பங்கேற்று வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆனந்தகுமாா், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தன்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டு, இதனை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

    இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், பிறதுறைகள் மூலமும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட உள்ளது. நெகிழி இல்லா நீலகிரி மாவட்டமாக தொடா்ந்து நீடிக்க அனைத்து துறை அலுவலா்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, நகா்மன்ற தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகீம் ஷா, உதகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, ஊட்டி நகராட்சி ஆணையா் காந்திராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், சுனிதா நேரு, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

    • ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
    • மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும், மரங்கள் விழுந்தும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி லவ்டேல் அருகே கெரடா சாலையில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்துள்ளது. ஊட்டி காந்தல் பகுதியில் வீடுகள் சேதம் அடைந்தது.

    இந்த பகுதிகளை நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் லவ்டேல் ெரயில்வே பாலம், எல்கில் முருகன் கோவில் செல்லும் வழி, ராகவேந்திரா கோவில் முன்புறம் ஆகிய இடங்களில் மரம் விழுந்து மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு உள்ள பகுதிகளை பார்வையிட்டும், உடனே இவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்கிடவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    அப்போது அவருடன் மாவட்ட துணை செயலாளரும், ஊட்டி நகர மன்ற துணைத் தலைவருமான ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகராட்சி தலைவர் வானீஸ்வரி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, நகர துணை செயலாளர் ரீட்டா, மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, விஷ்ணு பிரபு, ரகுபதி, கஜேந்திரன், அபுதாகீர், தியாகு உட்பட கழக நிர்வாகிகள் மஞ்சனக்கொரை ஸ்டான்லி, வெங்கடேஷ், குரூஸ், ஆட்டோ பாபு, குமார், நடராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    • பந்தலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அம்பலமூலா அருகே வட்டகொல்லியில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.
    • தொடர் மழைக்கு அங்கு பயிரிட்டிருந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

    5-வது நாளாக இன்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் அடிப்பதால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கரியமலை, குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்வோர் மிகவும் பாதிப்படைந்தனர்.

    பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வராமல் தவித்தனர்.

    இன்று காலை 6 மணியளவில் மஞ்சூர்-ஊட்டி சாலையில் சாம்ராஜ் நகர் எஸ்டேட் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி, மஞ்சூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் புன்னம்புழா, மாயாறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பந்தலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அம்பலமூலா அருகே வட்டகொல்லியில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன. தொடர் மழைக்கு அங்கு பயிரிட்டிருந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

    அம்பலமூலாவில் இருந்து கரிக்குற்றி வழியாக கொட்டநாடு செல்லும்சாலை மற்றும் மணல்வயல் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மழை மற்றும் காற்றினால் தமிழகம் குடியிருப்பு, பிங்கா் போஸ்ட் சாலையில் மற்றும் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்தன. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மின்துறை ஊழியா்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

    எமரால்டை அடுத்த முள்ளிக்கொரை உள்பட குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

    இது தவிர பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி, தலைக்குந்தா, கல்லட்டி, தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. நேற்று ஒரே நாளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் 22 மரங்கள் சாலைகளில் விழுந்தன. மழைக்கு இதுவரை 17 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 24 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    • அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் கூடலூர் 2-ம் மைல், வன துர்க்கையம்மன் உள்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். முன்னதாக வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்களுக்கு வழங்கினர்.

    ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்திர காளியம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில் உள்பட பல்ேவறு அம்மன் கோவில்களில் நேற்று பூஜை நடந்தது.

    • 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அத்துடன் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது.

    இதனால் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது. இதனால் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்படுவதால் தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். மேலும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

    செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட வேண்டும். எக்ஸோ கன்சோல் 200 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

    இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊட்டி காந்தல் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
    • சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டது.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவரும் நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.


    இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு அவர்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், நகர மன்ற உறுப்பினரும், பாசறை மாவட்ட செயலாளருமான அக்கீம்பாபு, நகரமன்ற உறுப்பினர் லயோலோகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

    ×