search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: பந்தலூரில் வெள்ளத்தில் மூழ்கிய வாழை பயிர்கள்
    X

    நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: பந்தலூரில் வெள்ளத்தில் மூழ்கிய வாழை பயிர்கள்

    • பந்தலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அம்பலமூலா அருகே வட்டகொல்லியில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.
    • தொடர் மழைக்கு அங்கு பயிரிட்டிருந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

    5-வது நாளாக இன்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் அடிப்பதால் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கரியமலை, குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்வோர் மிகவும் பாதிப்படைந்தனர்.

    பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வராமல் தவித்தனர்.

    இன்று காலை 6 மணியளவில் மஞ்சூர்-ஊட்டி சாலையில் சாம்ராஜ் நகர் எஸ்டேட் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி, மஞ்சூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் புன்னம்புழா, மாயாறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பந்தலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அம்பலமூலா அருகே வட்டகொல்லியில் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன. தொடர் மழைக்கு அங்கு பயிரிட்டிருந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

    அம்பலமூலாவில் இருந்து கரிக்குற்றி வழியாக கொட்டநாடு செல்லும்சாலை மற்றும் மணல்வயல் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மழை மற்றும் காற்றினால் தமிழகம் குடியிருப்பு, பிங்கா் போஸ்ட் சாலையில் மற்றும் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்தன. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மின்துறை ஊழியா்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

    எமரால்டை அடுத்த முள்ளிக்கொரை உள்பட குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. ஒரு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

    இது தவிர பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின் விநியோகமும், குடிநீா் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி, தலைக்குந்தா, கல்லட்டி, தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. நேற்று ஒரே நாளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் 22 மரங்கள் சாலைகளில் விழுந்தன. மழைக்கு இதுவரை 17 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 24 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    Next Story
    ×