என் மலர்
நீலகிரி
- அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.
- அவலாஞ்சி அணைக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. அணைகள், ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அணைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பைக்கார அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.இதற்கிடையே கிளன்மாா்கன் அணையின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவா் பலவீனமாக இருப்பதால் அணை உடையும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு அந்த அணையில் மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
குந்தா அணையிலிருந்து டனல் வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் நீா்வரத்து அதிகரித்து பில்லூா் அணைக்கு திறந்து விடப்பட்டது. அவலாஞ்சி அணைக்கு 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே மின் உற்பத்திக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அவலாஞ்சி அணை ஒரிரு நாளில் நிரம்பி திறக்கப்படும் என தெரிகிறது.
- விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது.
- வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது.
கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
- மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கூடலூர்-மசினகுடி இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
- எடக்காடுஹட்டி பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், பந்தலூா், கூடலூா், ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
கூடலூர் பகுதிகளில் பெய்த மழையால் குனில், இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
மழையுடன் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாண்டியாறு, புன்னம்புழா, மாயாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கூடலூர்-மசினகுடி இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இன்றும் மாயாற்றில் அதிகளவில் வெள்ளம் செல்வதால் கூடலூர்-மசினகுடி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட நகர பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி-அவலாஞ்சி சாலையில் எமரால்டு பகுதியிலுள்ள காந்திகண்டி என்ற இடத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டங்கள், கேரட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அடித்து செல்லப்பட்டது.
அதேபோல, எடக்காடுஹட்டி பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஊட்டி, வண்டிசோலை பகுதியில் ராட்சத மரம் சாலை மற்றும் மின்கம்பம் மீது விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன், தேசிய பேரிடா் மீட்பு படை அதிகாரி சந்தோஷ்குமாா் தலைமையிலான 2 குழுக்களுடன் மின் வாரிய ஊழியா்களும் இணைந்து மரத்தை அகற்றினா்.
ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான புதுமந்து சாலை, மான் பூங்கா ஆகிய பகுதிகளில் விழுந்த மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. பாா்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் பகுதியில் மின் கம்பங்கள் மீது அவ்வப்போது மரங்கள் விழுவதால் அங்கிருந்து குடிநீா் விநியோகம் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- கேரட் கழுவும் தொட்டியில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.
- ரஞ்சன் மிஸ்ராவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தியில் கேரட் கழுவும் எந்திரங்கள் அதிகளவில் உள்ளன. கேரட் கழுவும் பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன்மிஸ்ரா(34) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக இவரை காணவில்லை. நண்பர்கள் அக்கம்பக்கம் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஊருக்கு சென்றிருக்கலாம் என நினைத்து விட்டனர்.
நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கேரட் கழுவும் தொட்டியில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து கேத்தி போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டது மாயமான ரஞ்சன்மிஸ்ரா என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அவர்கள், ரஞ்சன் மிஸ்ரா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதனால் அவர் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யாராவது அவரை கொன்று தொட்டியில் வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ரஞ்சன் மிஸ்ராவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியை பீகாரில் விட்டு விட்டு, அவர் மட்டும் ஊட்டியில் தங்கி வேலை பார்த்ததும் விசாரணையில் தெரியவந்தது.
- 90 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர்.
- தொடர் மழையால் மாலை நேரத்தில் வாசகர்கள் நூலகத்தில் இல்லை.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் கிளை நூலக கட்டிடம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 46 ஆண்டுகள் பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் உள்ளதாக வாசகர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தொடர் மழையால் நூலகத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு நூலகர் கிளமெண்ட், ஊழியர் ஆரோன் ஆகியோர் நூலக பதிவேடுகளை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நூலக கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இதை கண்ட நூலகர் மற்றும் ஊழியர் அச்சத்தில் வெளியே ஓடிவந்தனர். தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தில் இருந்த புத்தகங்கள் நனைந்தது. தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்துக்குள் சேதமடைந்து உள்ள 90 ஆயிரம் புத்தகங்களை பாதுகாப்பாக வெளியே எடுப்பது குறித்து ஆலோசித்தனர். பின்னர் நூலகத்தில் இருந்த கணினிகள் உள்ளிட்ட பதிவேடுகள் வெளியே எடுக்கப்பட்டு மற்றொரு கட்டிடத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டது. பின்னர் இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்த புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தொடர் மழையால் மாலை நேரத்தில் வாசகர்கள் நூலகத்தில் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.
ஊட்டி :
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமான ஒன்று ஆகும். இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ளன.
சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் உள்ளன. இந்த நிலையில் சிம்ஸ் பூங்கா பசுமைக்குடிலில், பச்சை ரோஜா வளர்க்கப்பட்டு வருகிறது. பூங்கா நிர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது.
தற்போது பசுமைக்கு டியில் வளர்க்கப்பட்டு வந்த செடியில் ஒரு பச்சை ரோஜா மலர்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர். கடந்த காலங்களில் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டது. நாளடைவில் அதன் வளர்ச்சி தடைபட்டது. தற்போது வெளியில் இருந்து பச்சை ரோஜா செடி கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் சீதோஷண நிலைக்கு ஏற்ப பச்சை ரோஜா நாற்றுக்களை பூங்கா முழவதும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர்.
- அரசு நிர்ணயத்துள்ள இடம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இடமாகும்.
- கோவிலின் புனிதத் தன்மை அழிந்து விடும் என்பதால் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்
அரவேணு, கோத்தகிரி பழங்குடியின கோத்தர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து அய்யனோர் அம்மனோர் கோவில் முன்பு 60-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கூறும்போது, உழவர் சந்தை அமைப்பதற்கு அரசு நிர்ணயத்துள்ள இடம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இடமாகும். இங்கு எங்களுடைய பூர்வீக கோவில் அமைந்துள்ளதால் உழவர் சந்தை அமைக்க கூடாது. இது குறித்து அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகிகளிடம் பல முறை மனு அளித்துள்ளோம். எனவே இந்த பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கு நாங்கள் ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் நிலம் எங்களுக்கே வழங்கப்பட வேண்டும். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நாங்கள் போராட்டங்கள் நடத்துவோம். கோவிலின் புனிதத் தன்மை அழிந்து விடும் என்பதால் இந்த இடத்தில் உழவர் சந்தை கட்ட நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அரசு உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
- அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பல மடங்கு
இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நேற்று முன் தினம் காலை முதலே நீர்வரத்து பெருமளவு அதிகரித்தது. இந்நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேகமாக உயர்ந்து வருகிறது
முன்னதாக அணை திறக்கப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும் மின்வாரிய தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
குந்தாஅணை திறந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டதால் கெத்தை அணையின் நீர் மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- பசு மாட்டின் மீது மண் சரிந்து விழுந்து மாடு உயிர் இழந்தது.
- குன்னூர் வட்டாட்சியர் , வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள லோயர் குரூஸ் பெட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அதனை தனது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இதில் பசு மாட்டின் மீது மண் சரிந்து விழுந்து மாடு உயிர் இழந்தது. இதனைக் கேள்விப்பட்ட குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பசு மாட்டின் உரிமையாளர் ராஜூவுக்கு ஆறுதல் கூறினர். இதையடுத்து குன்னூர் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் பசுமாட்டை இழந்த விவசாயி ராஜூவுக்கு குன்னூர் சப்-கலெக்டர் சிவகுமார் ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அருகில் துணை வட்டாட்சியர் நந்தகோபால், அலுவலர் சாரதா மற்றும் வருவாய் அலுவலர்கள் இருந்தனர்.
- சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரதீசை கைது செய்தனர்.
கூடலூர்
பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் ரதீஸ் (வயது 20). இவர் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். இதில் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சித்ரா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரதீசை கைது செய்தனர்.
- அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
- பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.
அரவேணு
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சிறந்த தூய்மை கிராமத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சிறந்த தூய்மை கிராமமாக கோடநாடு ஊராட்சியை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடநாடு ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக கவனம் செலுத்தி முழுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையான கிராமமாக விளங்கி வருகிறது.
பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது. சுகாதார பணிகள் இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறந்த தூய்மை கிராமமாக பரிந்துரைக்கப்பட்ட கோடநாடு கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அருண்மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கிய பகுதிகள் தூய்மையாக உள்ளதா, குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டப்பட்டு இருக்கிறதா மற்றும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், உதவி இயக்குனர் (ஊராட்சி) சாம் சாந்தகுமார், ஊராட்சி தலைவர் சுப்பி காரி, ஊராட்சி செயலர் சதீஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். சிறந்த தூய்மை கிராமமாக தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு ரூ.7 லட்சம் நிதி வழங்கி ஊக்குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் கோத்தகிரி ஜக்கலோடை, நாரகிரி கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 3-வது கிராமமாக மிளிதேனில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்ணயம் செய்ய வேண்டும் ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் பில்லன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும். விவசாய நிலங்களை அழித்து சொகுசு விடுதிகள், பங்களாக்கள் கட்டுவதை தடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலை நம்பியுள்ள விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேயிலை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். முடிவில் ராமதாஸ் நன்றி கூறினார்.






