என் மலர்
நீலகிரி
- ஊட்டி கிரசன்ட் பள்ளியின் வெள்ளிவிழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி கிரசன்ட் பள்ளியின் வெள்ளிவிழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் உமர் பரூக் வரவேற்றார். தமிழக கவர்னரின் நேர்முக செயலாளர் ஆனந்தராவ் விஸ்ணுபாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் வண்ண வண்ண உடையில் கலை நிகழ்ச்சிகள், கலை இலக்கியம், நாட்டுபற்று என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
- ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார்.
ஊட்டி
கடந்த 1819-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன் தற்போதுள்ள ஊட்டியை கட்டமைத்து, நவீனப்படுத்தி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினாா்.
இவா் ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சாா்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கலைத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
புத்தகத் திருவிழாவை நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடா்ந்து, 'ஊட்டி 200 என்ற லோகோவை' வெளியிட்டார். தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார். விழாவில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித்தவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். இதுதவிர கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.
இதில், ஜான் சல்லீவன் நவீன ஊட்டி உருவாக எடுத்த முயற்சி, நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், வனத் துறையின் மூலம் வன விலங்குகள் பாதுகாப்பது குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, நீலகிரி வரையாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கிய புத்தக திருவிழாவினை காண நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள், புத்தக பிரியர்கள் என அனைவரும் புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர்பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சரவணன் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் கொமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவரது மனைவி சத்யா (37). இவர்களுக்கு கவுதம் (18), நந்தகுமார் (16) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சரவணனும், இவரது தோழி மகாலட்சுமி என்ற பெண்ணும் பங்குதாரராக சேர்ந்து நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தனர்.
இந்த நிறுவனத்தில் பொதுமக்களுக்கு கடனாக வட்டிக்கு பணம் கொடுப்பது, பின்னர் பணத்தை வட்டியுடன் வசூல் செய்வது, கமிஷன் அடிப்படையில் இருவரும் இந்த பணத்தை பங்கு போட்டு, மேலும் கடன் கொடுப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து வந்தனர். சரவணன், இதைத்தவிர அரிசி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சரவணனை மர்ம கும்பல் கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதிக்கு கடத்திச் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து அந்த அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன சரவணன், செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு என்னை கடத்தி வந்து அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறாங்க, எப்படியாவது பணத்தை ஏற்பாடு பண்ணுங்க, இல்லை என்றால் என்னை உயிருடன் விடமாட்டாங்க என வீட்டில் உள்ள தனது மனைவி சத்யாவிடம் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு செய்து வந்தார். மேலும் சரவணன் தனது பங்குதாரர் மகாலட்சுமியிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பணம் கொண்டு தருகிறோம் என கடத்தல் கும்பலிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கடத்தல் கும்பல் 3 நாட்களாக அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி நேற்று சரவணனை கொலை செய்து உடலை அறையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை விடுதி மேலாளர் இது குறித்து வாழவந்திநாடு கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தார். சரவணன் உடலில் பலத்த காயங்கள் இருந்தது. அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது பற்றி கிராம நிர்வாக அலுவலர், வாழவந்திநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சரவணனிடம், அவருக்கு தெரிந்த நாமக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அணுகி பெரிய அளவில் பணம் தருகிறேன். இந்த பணத்தை நிதி நிறுவனம் மூலம் வட்டிக்கு விட்டு அதில் கிடைக்கும் வட்டி பணத்தை கமிஷன் அடிப்படையில் இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அதன்படி முதற்கட்டமாக அந்த நபர் 20 லட்சம் ரூபாயை சரவணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பேசியபடி சரவணன் இந்த பணத்திற்கான வட்டி அந்த நபரிடம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
அதற்கு சரவணன், தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் கட்டவில்லை என கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால், இருவருக்கும் கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பல முறை கேட்டும் பணத்தை கொடுக்காததால் அந்த நபர் ஆள் வைத்து சரவணனை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் சத்யா, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அங்கு தனது கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.
தொடர்ந்து ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உறவினர்கள் திரண்டுள்ளதால், பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்புக்காக ஆஸ்பத்திரி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மேலும் வீடு முழுவதும் கியாஸ் புகை பரவி அந்த பகுதியை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
- கியாஸ் கசிவு ஏற்பட்டு, கியாஸ் நிறுவன கிளர்க் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காரக்கொரை கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி கண்ணம்மாள்(வயது58).
கோபால் அங்குள்ள வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்களது ஊரில் பண்டிகை என்று தெரிகிறது.
இதற்காக கண்ணம்மாள் இன்று வீட்டில் காலையிலேயே சமையலில் ஈடுபட்டார். அப்போது கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எரியவில்லை. இதனால் என்ன கோளாறு என்று பார்த்தார்.
அப்போது கியாஸ் சிலிண்டர் காலியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து மாட்ட முடிவு செய்தார்.
இதற்காக தனது வீட்டின் அருகே வசித்தும் வரும் கியாஸ் நிறுவனத்தில் கிளர்க்காக பணியாற்றி வரும் நடராஜ்(53) என்பவரை அழைத்தார்.
அவரும் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று சிலிண்டரை மாற்றி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மேலும் வீடு முழுவதும் கியாஸ் புகை பரவி அந்த பகுதியை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
வீட்டிற்குள் கியாஸ் பரவியதும் கோபாலும், கண்ணம்மாளும் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று இருந்து கொண்டனர். நடராஜூம் வீட்டின் அறைக்குள் சென்று விட்டார்.
இதற்கிடையே கண்ணம்மாளின் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து அருவங்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் நடராஜ், கண்ணம்மாள் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நட்ராஜ் உயிரிழந்தார்.
கண்ணம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியாஸ் கசிவு ஏற்பட்டு, கியாஸ் நிறுவன கிளர்க் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.
- குஞ்சப்பனையில் இருந்து கோழிக்கரை வரை பஸ் இயக்கம் தொடங்க உள்ளது
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை–யொட்டி கோழிக்கரை, செம்மநாரை உள்பட 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.
பஸ்
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து குஞ்சப்பனை வந்து, அங்கிருந்து பஸ் மூலம் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தங்கள் கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று குஞ்சப்பனையில் இருந்து கோழிக்கரை வரை பஸ் இயக்கம் தொடங்க உள்ளது. இதனையொட்டி இன்று குஞ்சப்பனையில் இருந்து செம்மனாரை வரை அரசு பஸ் சோதனை ஓட்டம் நடந்தது.இந்த சோதனை ஓட்டத்தின் போது பஸ்சில் பழங்குடியின கிராம மக்கள், குழந்தைகள் உற்சாகத்துடன் பஸ்சை வரவேற்று அதில் பயணம் ெசய்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். விரைவில் இந்த பஸ் பயன்பாட்டுக்கு வரும்.இந்த பஸ்சானது தினமும் காலை, மதியம், இரவு என 3 முறை தொடர் பஸ் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
- கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.
- ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.
இவ்வாறு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் வெறும் மழை நீரை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது விளைநிலங்களுக்கு அருகே செல்லும் ஓடை நீரையே பெரிதும் நம்பி உள்ளனர்.
இந்த ஓடைகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தூர்வாரப்படுவது வழக்கம். கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகளை தூர் வாரி, பராமரிப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் கோத்தகிரி பகுதியில் செல்லும் ஓடைகளை நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காக்கா சோலை பகுதியில் செல்லும் நீரோடையை தூர்வார சுமார் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 1500 மீட்டர் நீளத்திற்கு தூர் வாரி ஓடை சுத்தம் செய்யப்பட்டது.
சுமார் 30 அடி அகலமும், சராசரியாக 10 அடி ஆழத்திற்கு ஓடை தூர் வாரும் பணி நேற்று நிறைவடைந்தது.மேலும் ஒரு சில பகுதிகளில் ஓடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.
- கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குளு, குளு காலநிலையை கொண்ட நீலகிரி மாவட்டத்திலும் பகலில் கோடை வெப்பமும், இரவில் அதிக பனிப்பொழிவும் நிலவுகிறது.
கூடலூர், முதுமலை, மசினகுடி, பந்தலூரில் அனல் காற்று வீசுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள பசும்புற்கள், புதர்கள் காய்ந்து விட்டது. மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ பரவாமல் இருக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, கார்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகளை அமைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மசினகுடி அருகே மரவகண்டி ஏரி, ஆச்சக்கரை பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது.
அப்பகுதியில் மூங்கில்கள் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.எங்கு பார்த்தாலும் தீ மற்றும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், வருவாய், வனத்துறையினர் விரைந்து வந்து அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதனால் கூடலூரில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். நாலாபுறமும் தீ வேகமாக பரவிக்கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து 10 ஏக்கர் பரப்பளவில் மூங்கில்கள், புதர்கள் எரிந்து சாம்பலானது. மொத்தத்தில் கூடலூர், மசினகுடி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி காட்டு தீயால் எரிந்து நாசமானது.இதேபோல், குன்னூர், கோத்தகிரி பகுதியில், பல இடங்களில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் அணைத்தனர்.
மலைப்பாதை மற்றும் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் புகை பிடித்து வீசுவது. இடத்தை ஆக்கிரமிக்க தீ வைப்பது போன்றவை காட்டுத்தீ ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளதால், வருவாய், வனம், உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- 4 வட்டாரங்களில் ஆறு மாத குழந்தைகள் 859 பேர் பிறப்பு எடை குறைவாக உள்ளனர்
- 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைத்த–ளாவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் ஆறு மாத குழந்தைகள் 859 பேர் பிறப்பு எடை குறைவாக உள்ளனர். மேலும் 6 மாதம் முதல் 6 வயது உள்ள குழந்தைகளில் 1,453 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு கண்காணிப்பு அட்டைகள் வழங்கப்பட்டு மாதந்தோறும் எடை மற்றும் உயரம் எடுக்கப்பட்டு குழந்தைகள் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.
மேலும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்ட–கத்தில் குழந்தை–களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ உணவு 56 நாட்களுக்கு தினசரி ஒரு சதவீதம் உண்ணும் வகையில் வழங்கப்படுகிறது. எனவே தாய்மார்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணி குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வேலகுமாரி, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
- ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
நாளை காலை 10 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நீலகிரி முதலாவது புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.
பப்பாசி குமரன் பதிப்பகத்தின் தலைவர் வயிரவன் அறிமுக உரையாற்றுகிறார். திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேச உள்ளார்.
மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் நாட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.
6-ந் தேதி எழுத்தாளர் இமயத்தின் வாழ்க்கைதான் இலக்கியம் சிறப்புரை, பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியும், பாபு நிஸாவின் கரோக்கி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
7-ந் தேதி திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதியின் சிறப்புரையும், பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமாரின் மழைத்துளிகள் சொல்லி சென்ற கதை குறித்து பேசுகிறார். இதுதவிர பெண்களுக்கு பெரிதும் மனநிறைவு தருவது குடும்ப பொறுப்பே, சமுதாய பொறுப்பே என்ற தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது.
9-ந் தேதி வரலாற்று நாவல் ஆசிரியர் ஸ்ரீமதி வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் குறித்து பேசுகிறார். மணிஹட்டி சிவாவின் படுகா நடனமும் நடக்கிறது. 10-ந் தேதி சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பூனையும், பாற்கடலும் குறித்து பேசுகிறார்.
தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித் தவர்கள் பங் கேற்று சிறப்புரை யாற்றுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
14-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
நாளை முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
11 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, 1 மணிக்கு பட்டிமன்றங்கள் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
- வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- முகேஷ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால் மாணவி, தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இவரது வீட்டின் அருகே வசித்து வருபர் முகேஷ்(வயது19). சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த முகேஷ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியான மாணவி, தனது தாய் வீட்டிற்கு வந்ததும், நடந்த சம்பவங்களை கூறி அழுதார். இதை கேட்டு பதறிபோன அவர் சம்பவம் குறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு முகேஷ் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கல்லூரி சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது.
- கல்லூரி மாணவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது. இங்கு திடீரென நேற்று காட்டுத் தீ பரவியது. இதனையடுத்து கல்லூரியில் அமர்ந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் புகை வருவதை கண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டுக்குள் தீ பரவிக் கொண்டிருந்தது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது.
- வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது
கோத்தகிரி
கோத்தகிரியில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று அரசு மருத்துவமனை கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி, பெண்கள் மகப்பேறு பகுதி என பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு ரத்த வங்கி கட்டிடமும், பிணவறை கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டது. நாளுக்குநாள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளின் வருகையும், வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பழைய அவசர சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை போக்கும் விதமாக அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கட்டிட பணியானது மேலும் விரைவாக முடிக்க வேண்டி கடந்த சில வாரங்களாக இரவும், பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணி வேகமாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.






