என் மலர்
நீலகிரி
- ஜீப்பை ரகு அதிவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
- விபத்தில் ஜீப் பலத்த சேதம் அடைந்தது.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் இருந்து ஆரோட்டுப்பாறைக்கு ஜீப் ஒன்று சென்றது. ஜீப்பை ரகு(19) என்பவர் ஓட்டினார். அவர் அதிவேகமாக ஜீப்பை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் ஜீப் மோதியது. இதில் ரகு பலத்த காயமடைந்தார்.
மேலும் அவருடன் சென்ற நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ஜீப் பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து நியூகோப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
- வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.
கூடலூர்
கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
இதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 45), மணிகண்டன் (40) மற்றும் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த சுதாகரன் (36) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரக யுவராஜ்குமார் கைதான 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.
- தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டத்தால் தினசரி பூங்கா பணிகள் முடங்கி கிடக்கிறது.
- புல்வெளி மைதானத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தினசரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால், தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று உண்ணாவிரதம், கஞ்சி தொட்டி திறப்பு மற்றும் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்புதல் என முத்தரப்பு போராட்டத்தை கையில் எடுத்தனர். இதன்படி ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பினர்.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் மலர்கண்காட்சி தடையில்லாமல் நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டத்தால் தினசரி பூங்கா பணிகள் முடங்கி கிடக்கிறது.
மேலும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தோட்டக்கலை துறை ஊழியர்களின் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை செய்வதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் தான் பணிக்கு திரும்புவோம் என்று ஊழியர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர். இதனால் மலர் கண்காட்சியை ஒப்பந்த முறையில் பணியாளர்களை வைத்து நிறைவேற்றலாமா என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் போராட்டத்தால் தாவரவியல் பூங்காவில் தினசரி பணிகள் தடைபட்டுள்ளது. புல்வெளி மைதானத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் சீசன் தொடங்கி இருப்பதால் தினசரி 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தற்போது தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். பூங்கா ஊழியர்கள் கோரிக்கை குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கலெக்டர் மூலமாக அறிக்கையை அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை தமிழக அரசு இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் வேறு வழியில்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் உள்ள குப்பைகளை அதிகாரிகளே அகற்றி வருகின்றனர். நேற்று காலை 8 மணி அளவில் மழைக்கு மத்தியில் குடைகளை பிடித்தவாறு உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், பாலசங்கர், அனிதா மற்றும் அதிகாரிகள் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினர்.
- ஏலக்காய் தோட்டத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
- புதர் மறைவில் இருந்த காட்டுப்பன்றி திடீரென சுந்தரமூர்த்தியை தாக்கியது.
கூடலூர்
நீலகிரி கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அள்ளூர்வயல் தனியார் எஸ்டேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் சிக்மாயாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் நேற்று வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்த காட்டுப்பன்றி திடீரென சுந்தரமூர்த்தியை தாக்கியது. இதில் அவருக்கு இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வனத்துறையினரும், பொதுமக்களும் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் வைக்கும் பணி நடந்து வருகிறது
- 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நீலகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் கைத்தளா பகுதியில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெறுகிறது. இதை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்லும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் சாலையோரங்களில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை அரவேனு கீழ் கைத்தளா பகுதியில் உள்ள குறுகிய வளைவை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால், அந்த இடத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை கைத்தளாவில் நில அளவை செய்ததில், நெடுஞ்சாலை இடத்தில் வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் சாலை மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளதால், தாங்களாகவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் அப்பகுதியில் உள்ள 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஜக்கனாரை ஊராட்சி தலைவர், கீழ் கைத்தளா பகுதியில் அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்றாக வேறு பகுதியில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
- தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது.
- ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பெருமைக்குரியதாகும். இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது ஒரு வரலாற்று சிறப்பு என்றே கூறலாம்.இன்றைய தினம் இத்தலார் பகுதியில் 2 புதிய மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வளரினம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூ ரியில் 150 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டும் சேர்ந்து மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு 99 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மடிக்க ணினி மற்றும் பாடப்புத்த கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 13 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறிய மாவட்டமான இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை வருகிற ஜூலை மாதம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மா.சுப்பி ரமணியன் மாணவ- மாணவிக ளுக்கான தனி உடற்பயிற்சி கூடத்தினையும் திறந்து வைத்து பார் வையிட்டார்.
- பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்
ஊட்டி
பயிர் கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடிக்கு உரிய தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று கூறி பணியாளர்கள், செயலாளர் பொதுப்பணி நிலைத்திறன் அமைப்பில் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
- சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.
நீலகிரி
முதுமலை பெண்ணையில் பொம்மதேவர் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடினர். பொம்மதேவர் கோவில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை பகுதியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன்செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வ கோவிலான பொம்ம தேவர் கோவில் வனப்பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொம்ம தேவருக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல குடும்பங்கள் சன்னக்கொல்லி பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பொம்மதேவர் கோவில் திருவிழா பெண்ணை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 2-வது நாள் காலை 10 மணிக்கு அருள்வாக்கும், தொடர்ந்து தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.
- அறை முன்பதிவு செய்து வங்கி கணக்கு எண் மூலமாக சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர்.
- ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனின்போது, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களை மகிழ்விப்பதற்காக கோடை விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
ஊட்டியில் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் அறை முன்பதிவு செய்வார்கள் என்பதை தெரிந்துகொண்ட மோசடி பேர்வழிகள், இங்கு ஏற்கனவே உள்ள ஓட்டல்கள் அல்லது ஓட்டல்களே இல்லாமல் ஏதாவது ஒரு பெயரில் ஓட்டல்கள் இருப்பது போல ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வார்கள்.
மேலும், சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஊட்டியில் அறை உள்ளதா என்று கூகுளில் யாராவது தேடினால், இவர்கள் போலியாக உருவாக்கிய முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்கள் முதலில் வரும்படி செய்துவிடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து அறை முன்பதிவு செய்து வங்கி கணக்கு எண் மூலமாக சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர். அதன் பின், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். புகார் அளித்தால்தான் முழு உண்மை நிலவரம் தெரியவரும். இதுவரை சுமார் 10 ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் ஏமாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து வலைதள நிறுவனத்துக்கு புகார் அளித்து, அந்த போலி இணையதள முகவரியை நீக்கம் செய்ய அறிவுறுத்தி கடிதம் அளித்துள்ளோம். அதேபோல, இணையதளம் மூலமாக பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் அந்த ஓட்டலை தரைவழி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால் நம்பிக்கைக்குரிய செயலிகள் மூலமாக அறை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- வாலிபரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தார்.
ஊட்டி,
ஊட்டி தாவரவியல் பூங்காவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவரை சோதனை செய்தபோது, அவரிடம் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் தோடர் மந்து பகுதியை சேர்ந்த நோட்டஸ் குட்டன் (வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோல் மேல் கூடலூர் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
- புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
- சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நடக்கிறது.
இந்தநிலையில் மஞ்சூர் அடுத்த எடக்காடு ஆடமனை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதை பார்த்த விவசாயிகள் சத்தம் போட்டு விரட்டினர். மேலும் சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை உலா வருவதால், வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
- பள்ளியையொட்டிய சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
- குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டி மனு அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள புனித மரியன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலை பள்ளிக்கு வரும் போதும், மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் போதும் சரியான நடைபாதை இல்லாததால் வாகனங்கள் அதிகம் வரும் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் அதிக அளவு உள்ளது.
பள்ளியை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் தான் குழந்தைகள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக கூறி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த விடாமல் குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டியும் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டியும் நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோருக்கும் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது.






