என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஊட்டியில் கடந்த சில தினங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
    • ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் அமைந்துள்ளது.

    ஊட்டி:

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு விட்டதால் மக்கள் குளுமையான பகுதியான ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    ஊட்டியில் கடந்த சில தினங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் அங்குள்ள இதமான கால நிலையை அனுபவித்து வருகிறார்கள்.

    மேலும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது. அவர்கள் அங்குள்ள மலர்களையும், இயற்கை அழிகனையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

    ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் அமைந்துள்ளது. இந்த படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்தனர்.

    பின்னர் அங்குள்ள ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக படகு சவாரி செய்தனர். அப்போது ஏரியின் அழகையும், அங்குள்ள நிலவிய சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அங்குள்ள ஐ லவ் ஊட்டி முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தையொட்டிய கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதேபோல் பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது.

    • ஒரு சில மாணவ-மாணவிகளுக்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.
    • விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி நடந்த பிளஸ்-2 கணித தேர்வில் ஒருசில மாணவ-மாணவிகளுக்கு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேரை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், தாசில்தார் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சோிங்கிராஸ், ரெயில் நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை பினாயில் ஊற்றி அழித்தனர்.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் மீன்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கபபட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டம் இல்லாததால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வருவதால், இங்கு வந்து சேர 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் மீன்கள் அழுக அதிக வாய்ப்புகள் உள்ளன.

    எனவே பொதுமக்கள் மீன்களை சரிபார்த்து நல்ல மீன்களை மட்டுேம வாங்க வேண்டும். இதேபோல் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனத்தை பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார்.
    • முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வரும் பிரதமர், பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகிறார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரித்து வரும் பாகன்களுக்கு இடையேயான பாசபிணைப்பை வைத்து தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை மும்பையை சேர்ந்த கார்த்தகி இயக்கி இருந்தார்.

    கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை தி எலிபெண்ட்ஸ் விஸ்பரர்ஸ் படம் பெற்றது.

    இதையடுத்து படத்தின் இயக்குனர், படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் பிரபலம் அடைந்தனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசும் வழங்கினார்.

    இந்த நிலையில் ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளியை பாராட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் முதுமலைக்கு வருகிறார்.

    முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வரும் அவர், பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுகிறார்.

    இதனை அடுத்து பொம்மன், பெள்ளி தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வீட்டு முன்பு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர்களை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • அதிவிரைவுப்படை போலீசாரும் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வனப்பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • சோதனை சாவடிகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ஊட்டி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார்.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலமாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு முறை மற்றும் பாதுகாப்பு முறைகளை கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார்.

    பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார்.

    பின்னர் புலிகள் காப்பகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, புலிகளின் பாதுகாப்பு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

    முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை மாலை 4 மணிக்கு பிறகு கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூர் செல்லும் சாலை, தெப்பக்காடு வழியாக மசினகுடி செல்லும் சாலைகளில் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    நாளை மறுநாள் பிரதமர் முதுமலைக்கு வந்து செல்லும் வரை இந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 எஸ்.பிக்கள் அடங்கிய போலீஸ் பாதுகாப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதுதவிர அதிவிரைவுப்படை போலீசாரும் முதுமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வனப்பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் நீலகிரிக்குள் வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.

    அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.

    இதுதவிர நீலகிரி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது தடையை மீறி டிரோன்கள் இயக்கி வருகிறார்களா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி, வாகன தணிக்கை தீவிரமாக நடக்கிறது. சோதனை சாவடிகளில் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
    • ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் நிலவும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் தொடர் விடுமுறை வேறு சேர்ந்து கொள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

    ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரத்தில் வழக்கத்தை விட இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் காட்சி கோபுரங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மலை சிகரம் மற்றும் பாறைகளில் நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் நீலகிரியில் விளைந்த பழங்கள், மலைக்காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதிக வாகனங்கள் சென்று வந்ததில் சிகரத்திற்கு செல்ல கூடிய சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. ஒரு நபருக்கு ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் நவீன தொலைநோக்கிகள் மூலம் குன்னூர் நகரம், வெலிங்டன், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை, முக்கூர்த்தி அணை உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.

    • பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
    • சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, சுற்றிதிரிந்தது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை விளங்குகிறது. இங்குள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றது. பின்னர் அந்த அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவல் வெளியே பரவியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால், பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காண்பித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே இதே பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றது.

    இது தவிர அங்குள்ள சாலையில் தினமும் கரடிகள், முள்ளம் பன்றிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வனத்துறையினர் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன
    • பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

    குன்னூர்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து, குன்னூர் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளன.

    இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இதை சுவைக்க காட்டுயானைகள் படையெடுக்கின்றன. அவை குழுக்களாக பிரிந்து பல்வேறு தோட்ட பகுதியில் உலா வருகின்றனர்.

    குறிப்பாக பர்லியார் பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அங்குள்ள மரங்களில் இருந்த பலாப்பிஞ்சுகளை காட்டுயானைகள் ருசித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் ரகுமான்கான் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி அரவேனு பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்ததை கண்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அரவேனுவை சேர்ந்த ரவி என்பதும், அவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • முகாமுக்கு டாக்டர் பவிஷ் தலைமை தாங்கினார்.
    • ரத்த பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரையில், தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைப்படி நீலகிரி மாவட்ட மருத்துவரணி சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு டாக்டர் பவிஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ராமச்சந்திரன், சுப்பிரமணி, உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து மலைசிகரம் வரை வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது.
    • அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஜீப், காரில் பயணித்து வருகிறோம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு செல்வது வழக்கம். பலர் சொந்த வாகனங்களில் வருவார்கள்.

    சொந்த வாகனம் இல்லாதோர், ஊட்டியில் இருந்து பஸ் மூலமாக தொட்டபெட்டாவிற்கு வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து மலைசிகரம் வரை வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மலைசிகரத்தை பார்த்து மகிழ்ந்து சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு இயக்கப்பட்டு வரும் வாகனம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படுவதில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் ஊட்டிக்கு வரும் நாங்கள் அங்கிருந்து பஸ்சில் தொட்டபெட்டா சதுக்கத்திற்கு வந்து, அங்கிருந்து வனத்துறை இயக்கும் வாகனத்தில் பயணித்து வந்தோம்.

    ஆனால் கடந்த சில தினங்களாக வாகனங்கள் வருவது குறித்து முறையான அறிவிப்புகள் வருவதில்லை. இதன் காரணமாக நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    மேலும் வனத்துறை வாகனம் இயக்கப்படுவது குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஜீப், காரில் இங்கு பயணித்து வருகிறோம். எனவே வனத்துறை முறையான அறிவிப்பு வெளியிட்டு வாகனத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.
    • பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் மோடி வருகிறார்.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு செல்கிறார்.

    அங்கு ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிப்பதோடு, அவர்களை பொன்னாடை போர்த்தியும் கவுரவிக்க உள்ளார்.

    தொடர்ந்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளையும் அவர் பார்வையிடுகிறார்.

    பின்னர் யானைகள் முகாமுக்கு செல்லும் பிரதமர் மோடி, யானைகள் பராமரிக்கும் முறை, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

    மேலும் யானை பாகன்களுடன் கலந்துரையாடி, வளர்ப்பு யானைகளுக்கு கரும்பும் வழங்குகிறார்.

    பின்னர் முதுமலை வனத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு செல்லும் பிரதமர் புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.

    முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் பிரதமர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.

    இதற்கிடையே முதுமலைக்கு பிரதமர் வருவதையொட்டி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று முதுமலைக்கு வந்தனர்.

    அவர்கள் முதுமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் மசினகுடியில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினர்.

    இந்த ஆய்வின்போது நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், முதுமலை புலிகள் காப்பக கள துணை இயக்குனர் வித்யா உள்பட பலர் இருந்தனர்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 எஸ்.பிக்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் முதுமலை மற்றும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர்.

    பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மைசூரில் இருந்து முதுமலை வர உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதவிர சோதனை சாவடி, அடர்ந்த வனப்பகுதி, மலையேற்றம் செல்லும் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதுமலை வனப்பகுதி என்பதால் அதிவிரைவுப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.

    மேலும் அங்குள்ள விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளை வனத்திற்குள் அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டது.

    ×