என் மலர்
நீலகிரி
- நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் ஊர் திரும்பினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஊட்டி:
சென்னை மதுராந்தகத்தை சேர்ந்தவர்கள் அருணகிரி(45), சம்பத்(40), செந்தில்(48), சத்தியா(35), பூவனம்(45). உறவினர்களான இவர்கள் 5 பேரும் விடுமுறையையொட்டி சில தினங்களுக்கு முன்பு நீலகிரிக்கு சுற்றுலாவுக்கு வந்தனர்.
பின்னர் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று மீண்டும் ஊர் திரும்பினர். இவர்களது கார் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் காரில் இருந்தவர்கள் அலறி சத்தம் போட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த தனியார் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய 5 பேரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள், மருத்துவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- பொதுமக்கள் அருகில் நடந்து சென்று பிரதமர் மோடி அவர்களை பார்த்து கையசைத்தார்.
- பிரதமர் மோடி காரை விட்டு இறங்குவார் என்பதை சற்றும் எதிர்பாராத பொதுமக்களும், பாரதிய ஜனதாவினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
ஊட்டி:
பிரதமர் மோடி இன்று முதுமலை யானைகள் முகாமுக்கு வந்தார். பின்னர் அவர் மசினகுடிக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டுச் சென்றார்.
இதையறிந்த பழங்குடியின மக்கள் ஏராளமானோர் மசினகுடி சந்திப்பில் திரண்டு நின்றனர். அவர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து, பாரம்பரிய இசையை இசைத்தபடி பிரதமர் மோடியை வரவேற்றனர். மேலும் ஏராளமான பாரதிய ஜனதாவினரும் அங்கு திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் காரில் சென்ற மோடி காரை நிறுத்தும்படி கூறினார். பின்னர் பொதுமக்கள் அருகில் நடந்து சென்று அவர்களை பார்த்து கையசைத்தார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சுமார் 2 நிமிடங்கள் அங்கு நின்ற பிரதமர் மோடி அதன்பின் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி காரை விட்டு இறங்குவார் என்பதை சற்றும் எதிர்பாராத பொதுமக்களும், பாரதிய ஜனதாவினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அவர்கள் பிரதமர் மோடி வாழ்க என கோஷமிட்டனர். பிரதமரின் இந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.
- சுற்றுலா பயணிகள் கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது.
ஊட்டி,
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சாகச விளையாட்டுக்கள் அடங்கிய கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சுற்றுலாத்துறையும் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்கவும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் சாகச விளையாட்டுக்களை சுற்றுலா தலங்களில் கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. இதன் ஒருபகுதியாக படகு இல்லத்தில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்லும் வகையில் 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு மாத காலத்தில் முடியும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த பணிகள் முடிந்து இந்த தொங்கு பாலம் திறக்கபட்டால் அது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும். இதன் மேல் இருந்து படகு இல்லத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.
- பொம்மன், பெள்ளியை பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
- பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம் என்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு இன்று பிரதமர் மோடி வந்தார்.
அவர் அங்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர்.
பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமரிடம் தாங்கள் பேசியதும், பிரதமர் தங்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து பெள்ளி கூறியதாவது:-
பிரதமர் நேரில் வந்து எங்களை சந்தித்ததே பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அவர் எங்களை நேரில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பிரதமர் காப்பகத்திற்குள் காரில் வந்ததும், காரை விட்டு இறங்கி நேராக எங்களை நோக்கி வந்தார்.
வந்ததும், எங்கள் இருவரின் கைகளையும் பற்றி உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறினார்.
பின்னர் எங்களிடம், ரகு, பொம்மி யானையை எப்படி வளர்த்தீர்கள். யானைகள் உங்களிடம் எப்படி பழகியது. எவ்வாறு உங்களுடன் இணைந்து பழக தொடங்கியது என பல்வேறு தகவல்களை கேட்டு எங்களுடன் உரையாடினார்.
அதற்கு நாங்கள், இந்த 2 குட்டி யானைகளையும் எங்களது பிள்ளை போல் பாவித்து வளர்த்ததாக தெரிவிக்கவே, அதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.
மேலும் நீங்கள் வளர்த்தது போல யாரும் யானைகளை இப்படி பராமரித்தது இல்லை. கேரள, கர்நாடகாவில் கூட இது போன்று யாரும் பராமரித்தது இல்லை.
அந்த ஆவணப்படத்தில் நீங்கள் யானை குட்டிகளை பராமரிப்பதற்கு பட்ட கஷ்டங்களை தெரிவித்தது, அதற்காக நீங்கள் செய்த தியாகங்களை எல்லாம் அதில் பார்த்தேன். அதை பார்த்தவும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.
பிரதமர் படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு எங்களுடன் உரையாடியது பெருமையாக இருந்தது.
அத்துடன் எங்கள் இருவரையும் பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். அதற்கு அவர் நீங்கள் கட்டாயம் டெல்லி வர வேண்டும் என்றார்.
ரகு, பொம்மி யானைகளுடன் நீங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்களா? என கேட்டார். நாங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறோம் என்றோம்.
நாங்கள் பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம். அவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து நீங்கள் மனு அளியுங்கள். நான் அவரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என உறுதியளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
- மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டி கர்நாடக தோட்டக்கலை துறை பூங்காவில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனையொட்டி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் பாத்திகளில், 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தொங்கு பாலத்தில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா நடுவே அமைக்கப்பட்ட கட்டமைப்பு வளையத்தில் பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த பிரபலமான இந்த பூங்கா சுற்றிலும் காணப்படும் அழகால் சூழப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.
புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சிதரும் இடமாக கர்நாடக பூங்கா அமைந்துள்ளது. பசுமைக்கு மத்தியில் அமைதியை இங்கு அனுபவிக்கலாம். 38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கர்நாடக தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம், எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.
நீலகிரிக்கு வரும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மலர் படுக்கைகளுடன் பல புல்வெளிகளும் உள்ளன. இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவின் முக்கிய சிறப்பம்சமாக பூங்காவின் நர்சரி குடிலில் 50 ஆயிரம் வெவ்வேறு தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ணமயமான மற்றும் அழகான மனதை கவரும் மலர்கள் உள்ளன. இங்கு மூலிகைகளுக்கான தனி பிரிவுவும் உள்ளது. பூங்காவின் நர்சரி குடிலில் உள்ள மலர்கள் அழகாய் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுகின்றது.
+3
- யானைகளுக்கு கொடுக்கப்படக்கூடிய உணவு வகைகள் குறித்தும், அவற்றை பராமரித்து வரும் முறை குறித்தும் பாகன்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
- காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார்.
ஊட்டி:
பிரதமர் மோடி இன்று காலை மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்தார்.
அங்கு புலிகள் காப்பகத்தை பார்வையிட்டார். பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளை அவர் வாகனத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றி பார்த்தார்.
பின்னர் பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் காலை 10.30 மணிக்கு முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வந்தார்.
அங்கு முகாமில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பிரதமர் மோடி பார்வையிட்டு அந்த யானைகளுக்கு கரும்பு, பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை நேரில் பார்வையிட்டதுடன் அந்த யானைகளுக்கும் பழங்கள் வழங்கினார்.
மேலும் தாயில்லா குட்டி யானைகளை பராமரித்த தம்பதியும், ஆஸ்கர் விருதினை வென்ற ஆவணப்படத்தில் இடம் பிடித்தவர்களுமான பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
அப்போது அவர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவப்படுத்தினார். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
தெப்பக்காடு யானைகள் முகாமில் மூத்த பாகன்களாக பணியாற்றி வரும் திருமாறன், மாரிக்கன், மாறன், குள்ளன், தேவராஜ் ஆகிய 5 பேரை சந்தித்து, அவர்களிடம் காட்டு யானைகளை பிடிக்கும்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து கேட்டறிந்தார். யானைகளுக்கு கொடுக்கப்படக்கூடிய உணவு வகைகள் குறித்தும், அவற்றை பராமரித்து வரும் முறை குறித்தும் பாகன்களிடம் கேட்டறிந்தார்.
டி 23 புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட மீன் காளன், பொம்மன், மாதன் ஆகியோரிடம் பேசி, அந்த புலியை பிடித்தது குறித்தும், அதனை பராமரித்து வருவது குறித்தும் கேட்டறிந்தார். முகாமில் சிறப்பாக பணியாற்றி வரும் 12 கள பணியாளர்களுக்கும், 8 முன் கள பணியாளர்களுக்கும் பிரதமர் மோடி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பின்னர் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்களுடன் புலிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிரதமர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, கலெக்டர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி மீண்டும் மைசூர் செல்வதற்காக தெப்பக்காடு முகாமில் இருந்து மசினகுடியில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் தளத்திற்கு காரில் வந்தார். அப்போது அவருக்கு பாரம்பரிய உடை அணிந்த பழங்குடியின மக்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார். பின்னர் மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் பிரதமர் மோடி மைசூர் சென்றார்.
அழிவின் பட்டியலில் இருந்த புலிகளை காக்கும் நோக்கில் கடந்த 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் புராஜெக்ட் டைகர் திட்டம் என்ற புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு இந்த மாதத்துடன் 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து புலிகள் காப்பகங்களிலும் 50-வது ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்ட பொன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே இன்று மைசூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கர்நாடக அரசு சார்பில், புலிகள் பாதுகாப்பு திட்ட 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
பிரதமர் வருகையையொட்டி முதுமலை, கூட லூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி சங்கர் தலைமையில், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் மேற்பார்வையில் 1700 போலீசார் பிரதமர் நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த பிரதமர், வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு அளித்து மகிழ்ந்தார்.
- பிரதமர் வருகையையொட்டி முதுமலை, கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
முதுமலை:
கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடி, முதுமலை வந்தடைந்தார்.
இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த பிரதமர், வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு அளித்து மகிழ்ந்தார். முகாமில் பராமரிக்கப்படும் யானைகளை பார்வையிட்டார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார். ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் அவர் பார்வையிட்டார்.
டி23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய பழங்குடியின வனத்துறை ஊழியர்களை பிரதமர் சந்திக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி முதுமலை, கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார்.
- பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை வந்தடைந்தார்.
- பிரதமர் வருகையையொட்டி, மசினக்குடியில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதுமலை:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை வந்தடைந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
T23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய பழங்குடியின வனத்துறை ஊழியர்களை பிரதமர் சந்திக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி, மசினக்குடியில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது.
- கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் கரடிகள் கிராமத்துக்குள் உலா வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குமுன் வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- பிரதமர் மோடி மலை மாவட்டமான நீலகிரி கூடலூர் தெப்பக்காட்டிற்கு வந்து பாகன் தம்பதியை சந்திக்க உள்ளார்.
ஊட்டி,
பிரதமர் மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். அங்கு அவர் யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.
ெதாடர்ந்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியை பாராட்டுவதோடு, படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளையும் பார்வையிடுகிறார்.
பிரதமரின் நீலகிரி வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்க மாவட்ட பா.ஜ.கவினர் தயாராகி வருகின்றனர்.
முதுமலை வரும் பிரதமருக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், பிரதமர் மோடி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். ஓலைகுடிசையில் இருந்தவர்களுக்க கான்கிரீட் வீடு கொடுத்து அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார கடன் கொடுத்துள்ளார்.
ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜல்ஜீவன் திட்டம் ஊரக பெண்களின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. முன்பு, அவர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தலையில் பானைகளை சுமந்து வீடு திரும்ப வேண்டியிருந்தது.தற்போது, ஜல்ஜீவன் திட்டத்தால், குடிநீர் வீட்டு வாசலிலேயே கிடைப்பதால், அவர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது.
எந்த ஒரு அரசியல் தலைவரும் சாதாரண சாமானிய மக்களை சந்திக்க வந்ததில்லை.
தற்ேபாது பிரதமர் மோடி மலை மாவட்டமான நீலகிரி கூடலூர் தெப்பக்காட்டிற்கு வந்து பாகன் தம்பதியை சந்திக்க உள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. முதுமலை வரும் பிரதமருக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமை தாங்கினார்.
- ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் ஊட்டிக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் குறுகிய நகரமான ஊட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனையடுத்து ஊட்டி சேரிங்கிராசில் சுற்றுலா மேக்ஸி கேப் ஒட்டுநர்கள் சங்கம் சார்பில் ஊட்டி நகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமையில் சுற்றுலா வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
பின்னர் அவர் கூறும் போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். அதிக வாடகை வசூலிக்க கூடாது. சுற்றுலா பயணிகள் தவறவிடும் செல்போன்கள் மற்றும் பொருட்களை கண்டெடுத்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
- பிரதமர் வருகையை முன்னிட்டு, முதுமலை, கூடலூர், மசினகுடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி:
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகிறார்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மசினகுடிக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலமாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு முறை மற்றும் பாதுகாப்பு முறைகளை கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார்.
பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடும் பிரதமர், தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டுகிறார்.
முதுமலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் கார் மூலமாக மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, முதுமலை, கூடலூர், மசினகுடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேற்குமண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் நீலகிரிக்கு வந்துள்ளனர்.
கூடலூர், முதுமலை, உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடலூர், மசினகுடி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
அங்கு போலீசார் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதிகளில் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மாநில எல்லைகளிலும், மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் அங்குள் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி அங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது இருந்தால் உடனே போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.
முதுமலை வனப்பகுதி என்பதால் பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதுமலை வரும்போது அவரை காண மக்களுக்கு அனுமதியில்லை.
ஊட்டியில் இருந்து மசினகுடி வருபவர்கள் பொக்காபுரம் சந்திப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல கூடலூரில் இருந்து வருபவர்கள் தொரப்பள்ளி பகுதியிலேயே நிறுத்தப்படுவார்கள்.
பிரதமரின் வருகையை அடுத்து நேற்று மாலை முதல் கூடலூர்-மைசூரு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. அரசு பஸ்கள் மட்டுமே பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் முதுமலை சாலையில் இன்று மாலை முதல் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனசோதனை சாவடி வழியாக பொது மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல இன்று மாலை 4 மணி முதல் நாளை காலை 10.30 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல மாவட்டத்தில் அமைந்துள்ள கக்கநல்லா, தொரப்பள்ளி சோதனை சாவடி வழியாகவும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த நேரத்தில் நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லவும், கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும் மாற்று பாதையாக கூடலூர்-தேவர்சோலை, பாட்டவயல்-சுல்தான் பத்தேரி வழியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்க தளத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. எம் 17 ரக ஹெலிகாப்டரில் பிரதமர் பயணிப்பதால், அந்த ரக ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள மேல் ஹம்மனஹள்ளியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு மசினகுடிக்கு வந்தது. அங்கிருந்து மீண்டும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
3 முறை ஹெலிகாப்டர் இந்த தளத்தில் ஏறி, இறங்கி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளும், ஆய்வு செய்தனர்.






