search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் எங்களை நேரில் வந்து பார்த்து பேசியது பெருமையாக உள்ளது-பாகன் தம்பதி பேட்டி
    X

    பிரதமர் எங்களை நேரில் வந்து பார்த்து பேசியது பெருமையாக உள்ளது-பாகன் தம்பதி பேட்டி

    • பொம்மன், பெள்ளியை பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
    • பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம் என்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு இன்று பிரதமர் மோடி வந்தார்.

    அவர் அங்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர்.

    பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமரிடம் தாங்கள் பேசியதும், பிரதமர் தங்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து பெள்ளி கூறியதாவது:-

    பிரதமர் நேரில் வந்து எங்களை சந்தித்ததே பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அவர் எங்களை நேரில் வந்து சந்திப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பிரதமர் காப்பகத்திற்குள் காரில் வந்ததும், காரை விட்டு இறங்கி நேராக எங்களை நோக்கி வந்தார்.

    வந்ததும், எங்கள் இருவரின் கைகளையும் பற்றி உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறினார்.

    பின்னர் எங்களிடம், ரகு, பொம்மி யானையை எப்படி வளர்த்தீர்கள். யானைகள் உங்களிடம் எப்படி பழகியது. எவ்வாறு உங்களுடன் இணைந்து பழக தொடங்கியது என பல்வேறு தகவல்களை கேட்டு எங்களுடன் உரையாடினார்.

    அதற்கு நாங்கள், இந்த 2 குட்டி யானைகளையும் எங்களது பிள்ளை போல் பாவித்து வளர்த்ததாக தெரிவிக்கவே, அதை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.

    மேலும் நீங்கள் வளர்த்தது போல யாரும் யானைகளை இப்படி பராமரித்தது இல்லை. கேரள, கர்நாடகாவில் கூட இது போன்று யாரும் பராமரித்தது இல்லை.

    அந்த ஆவணப்படத்தில் நீங்கள் யானை குட்டிகளை பராமரிப்பதற்கு பட்ட கஷ்டங்களை தெரிவித்தது, அதற்காக நீங்கள் செய்த தியாகங்களை எல்லாம் அதில் பார்த்தேன். அதை பார்த்தவும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.

    பிரதமர் படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு எங்களுடன் உரையாடியது பெருமையாக இருந்தது.

    அத்துடன் எங்கள் இருவரையும் பிரதமர் டெல்லிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். அதற்கு அவர் நீங்கள் கட்டாயம் டெல்லி வர வேண்டும் என்றார்.

    ரகு, பொம்மி யானைகளுடன் நீங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறீர்களா? என கேட்டார். நாங்கள் இன்னமும் தொடர்பில் இருக்கிறோம் என்றோம்.

    நாங்கள் பிரதமரிடம் எங்கள் பகுதிக்கு சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டுள்ளோம். அவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து நீங்கள் மனு அளியுங்கள். நான் அவரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என உறுதியளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×