search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி கர்நாடக பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண மலர்கள்
    X

    ஊட்டி கர்நாடக பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண மலர்கள்

    • 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
    • மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி கர்நாடக தோட்டக்கலை துறை பூங்காவில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனையொட்டி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் பாத்திகளில், 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தொங்கு பாலத்தில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா நடுவே அமைக்கப்பட்ட கட்டமைப்பு வளையத்தில் பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த பிரபலமான இந்த பூங்கா சுற்றிலும் காணப்படும் அழகால் சூழப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

    புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சிதரும் இடமாக கர்நாடக பூங்கா அமைந்துள்ளது. பசுமைக்கு மத்தியில் அமைதியை இங்கு அனுபவிக்கலாம். 38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கர்நாடக தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம், எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    நீலகிரிக்கு வரும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மலர் படுக்கைகளுடன் பல புல்வெளிகளும் உள்ளன. இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவின் முக்கிய சிறப்பம்சமாக பூங்காவின் நர்சரி குடிலில் 50 ஆயிரம் வெவ்வேறு தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ணமயமான மற்றும் அழகான மனதை கவரும் மலர்கள் உள்ளன. இங்கு மூலிகைகளுக்கான தனி பிரிவுவும் உள்ளது. பூங்காவின் நர்சரி குடிலில் உள்ள மலர்கள் அழகாய் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுகின்றது.

    Next Story
    ×