என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின் றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், நாமக்கல் மோகனூர் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தின், இயக்கமும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வரு கிறது. இந்த அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை காவல் கண்காணிப் பாளர் சுபாஷினி, ஆய்வா ளர் நல்லம்மாள் தலைமை யிலான போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    போலீசார் வந்தபிறகு, அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் கள் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலக கோப்பு களை துருவித்துருவி விசா ரணை நடத்தினர். அலுவல கத்தில் பணியில் இருந்த அனைத்து பணியாளர் களிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.

    மாலை தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கு கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ. 85,900 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
    • நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

    நாமக்கல்:

    கோடை காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - தஞ்சாவூர் இடையே, அடுத்த வாரம் திங்கள் முதல் ஏப்ரல் மாதம் கடைசி திங்கள் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    இந்த வாராந்திர ரெயில் ஹூப்ளியில் இருந்து ஹரிஹர், தாவண்கரே, அர்சிகரே, தும்கூர், யஸ்வந்த்பூர், பெங்களூரு, பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இயங்கவுள்ளது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கு, நாமக்கல் ரெயில் நிலையத் தில் மட்டும் நிறுத்தம் வழங் கப்படவில்லை. நாமக்கல் நீங்கலாக மற்ற அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல் லும். இது நாமக்கல் பகுதியில் வசிக்கும் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது.

    சமீப காலமாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள், நாமக்கல் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரெயிலுக்கு நாமக்கல் நிறுத்தத்தை மட்டும் புறக்கணிப்பதா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழும்புகிறது.

    நாமக்கல்லில் இருந்து தஞ்சாவூர் செல்ல தற்போது ரெயில் வசதி இல்லை. இந்த சிறப்பு ரெயிலுக்கு நாமக் கல்லில் நிறுத்தம் கொடுத் தால் நாமக்கல்லில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் செல்ல வசதியாக இருக்கும்.

    நாமக்கல்லை சேர்ந்த 2 பார்லிமெண்ட் உறுப்பி

    னர்கள், 1 மத்திய இணை அமைச்சர் இருந்தும், நாமக் கல்லை சேலம் கோட்டம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் நாமக்கல் ரெயில் நிலை யத்தை அனைத்து ரெயில் களும் படிப்படியாக புறக்க ணிக்கும் அபாயம் உருவாகும்.

    இந்த பிரச்சினையில், மத்திய இணை அமைச்சர் முருகன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களையும், நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.

    மேலும் வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில் உடனடியாக நாமக்கல் நிறுத்தத்தை வெளியிட சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் பகுதியில் உள்ள ரெயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நாமக்கல் ஒரு மாவட்டத்தின் தலைநகர் மட்டும் அல்ல. லாரி உள்ளிட்ட மோட்டார் தொழில் மற்றும் கோழிப்பண்ணை, கோழி முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டாவது நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு தெற்கு ரெயில்வே முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்.

    • வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்து வருகைபுரிந்த விவசாயிகளை வரவேற்று திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை கருவிகளான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    முகாமினை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தீ வைத்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் ஜேடர்பா ளையம்-நல்லூர் சாலையில் தனக்கு சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை அமைத்துள்ளார்.

    மேலும் இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக, ஆலை கொட்டகைக்கு அருகில் குடிசை வீடுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை, வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

    இதில் அங்கிருந்த 9 குடிசை வீடுகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து வந்து குடிசை வீடுகளில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர்.

    இதனால் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்பட 9 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகின.

    அதேபோல் ஜேடர்பாளையம் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (50). இவர் அதே பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலை கொட்டகை மற்றும் வட மாநிலத்தவர் தங்கி இருந்த குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்த வர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்கப்பட்டது.

    அடுத்தடுத்து 2 இடங்களில் குடிசை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து தகவல் அறிந்து சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை செய்தனர்.

    தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 1 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி உட்பட 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தங்கி இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இடமாறுதல் உத்தரவு பெற்ற நர்சுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    இங்கு துணை இயக்குனராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்தி முருகன் என்பவர் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்துசெல்வார்.

    சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் மாநில அளவிலான கவுன்சிலிங் அடிப்படையில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு இடங்களில் பணிபுரியும், ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

    இந்த கவுன்சலிங் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த நர்சுகள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இடமாறுதல் உத்தரவு பெற்ற நர்சுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர், கவுன்சலிங் மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த நர்சுகளை, தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்க திட்டம் தீட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து இடமாறுதல் பெற்ற நர்சுகளிடம் ஒவ்வொருவருக்கும் அவர்களை விடுவிக்க ரூ. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காத நர்சுகளை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

    லஞ்சப் பணம் கொடுக்காமல் மாறுதல் உத்தரவு பெற முடியாது என்று நினைத்து சில நர்சுகள் பணம் கொடுத்து மாறுதல் உத்தரவு பெற்றுச் சென்றுவிட்டனர்.

    இது குறித்து ரகசிய தகவல் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஒப்பந்த அடிப்படையில், பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு நர்ஸ் தேனி மாவட்டம், அல்லி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கவுன்சலிங் மூலம் இடமாறுதல் பெற்றிருந்தார். அவரை இங்கிருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து, முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை கூகுள்பே கணக்கு மூலம் கொடுத்துள்ளார். மீண்டும் அதே முறையில் ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    இதேபோல் எலச்சிபாளையம், வினைதீர்த்தபுரம், திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளிடமும் கூகுள்பே மற்றும் வங்கி கணக்கு மூலம் லஞ்சம் பெற்றுள்ளனர்.

    சிலரிடம் நேரடியாக பணமாகவும் வாங்கியுள்ளனர். மேலும் துணை இயக்குனரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் நடைபெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் முத்துமணி, மற்றும் சக்திமுருகன் ஆகிய 3 பேர் மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    இதையொட்டி அவர்கள் மீது விரைவில் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர்கள் 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது.

    நாமக்கல்:

    சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அப்போது முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    தற்போது முட்டை விலை உயர தொடங்கியுள்ளது, இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.55 ஆக இருந்த ஒரு முட்டையின் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை-480, பர்வாலா-408, பெங்களூர்-475, டெல்லி-425, ஐதராபாத்-435, மும்பை-495, மைசூர்-480, விஜயவாடா-438, ஹொஸ்பேட்-435, கொல்கத்தா-507.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 91 ஆக பிசிசி அறிவித்துள்ளது. அதுபோல் முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 65 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
    • இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

    இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • குறிப்பாக ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    நாமக்கல்:

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களுக்கு நேரடியாக சென்று புதிதாக பொறுப்பேற்ற சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    குறிப்பாக ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு அவர் நேற்று வந்தார். அங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது அவரிடம், நாமக்கல் வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும், பயணிகளுக்கான உணவகம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ரெயில் பயணிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்தனர். 

    • தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கான தகுதிகளாக 1.1.2022 அன்று 58 வயது நிறைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ் பணி ஆட்சியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ் பணி ஆட்சி வருவதற்கான தகுதி நிலை சான்று, தமிழறிஞர்கள் 2 பேரிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3,500, மருத்துவ படி ரூ.500 ஆகியவை அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மார்ச் 31-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது.
    • யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் உலக சமாதான ஆலயம் சார்பில் உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினை தலைமை வகித்து நடத்தினார்.

    பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். இதில் நிர்வாகிகள் ஆனந்தன், கேசவராஜ், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் பூஜையில் பங்கேற்றனர்.

    • ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.
    • இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நாமக்கல்:

    நல்லிபாளையம் காவல் நிலையம் பாப்பநாயக்கன்பட்டி கருங்கல் பாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ். இவர்தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு கஸ்தூரியின் தந்தை சுந்தரம் உள்ளிட்ட 6 பேர், பிரகாஷ் வீட்டிற்கு சென்று கவிதாவுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு வேண்டும் என்று கேட்டனர்.

    அப்போது பிரகாஷின் தாய் பழனியம்மாள் தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    • வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், ஆனங்கூர், சின்னமருதூர் நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இந்த பூக்களை உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதியினை சேர்ந்த பூ வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படி யாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.600-க்கும், முல்லை ரூ.600க்கும், காக்கட்டான், ரூ.500க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.200-க்கும், சாமந்திப்பூ ரூ.150 -க்கும், ரோஜா ரூ.200க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது.

    நேற்று ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.300-க்கும், முல்லை ரூ.300க்கும், காக்கட்டான் ரூ.200க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.80-க்கும், சாமந்திப்பூ ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கிலோ 300 ரூபாயாக சரிந்துள்ளது.

    ×