search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைப்பு: 9 குடிசை வீடுகள் எரிந்து நாசம்- கலெக்டர் ஆய்வு
    X

    வடமாநிலத்தவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

    நாமக்கல்லில் வெல்ல ஆலை கொட்டகைக்கு தீ வைப்பு: 9 குடிசை வீடுகள் எரிந்து நாசம்- கலெக்டர் ஆய்வு

    • தீ வைத்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் ஜேடர்பா ளையம்-நல்லூர் சாலையில் தனக்கு சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை அமைத்துள்ளார்.

    மேலும் இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக, ஆலை கொட்டகைக்கு அருகில் குடிசை வீடுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை, வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

    இதில் அங்கிருந்த 9 குடிசை வீடுகளும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து வந்து குடிசை வீடுகளில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர்.

    இதனால் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உள்பட 9 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகின.

    அதேபோல் ஜேடர்பாளையம் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (50). இவர் அதே பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலை கொட்டகை மற்றும் வட மாநிலத்தவர் தங்கி இருந்த குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்த வர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்கப்பட்டது.

    அடுத்தடுத்து 2 இடங்களில் குடிசை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து தகவல் அறிந்து சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை செய்தனர்.

    தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 1 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி உட்பட 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தங்கி இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×