என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.
    • திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி அவுரி மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 18). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.

    இந்த நிலையில் வழக்கம் போல நேற்று பஸ்ஸில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது பஸ்சின் படியிலேயே நின்று கொண்டு சென்றுள்ளார். திருமருகல் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கியது.

    அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன்குமாரின் கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.

    இதில் அவரின் காலில் மூன்று விரல்கள் எலும்பு நொறுங்கியது.

    இது குறித்து அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் பிரவீன் குமாரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பிரவீன்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி, தேவங்குடியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

    இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் வருகிறது.

    இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

    இந்த தொட்டியின் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    • மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு வைத்து விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன், துணை தலைவர் வீரராசு, துணை செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கொஞ்சம் வித்தியாசமாக திருமண விழாக்களுக்கு தாம்பூலம் வைத்து அழைப்பது போல் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பள்ளி ஆண்டு விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.

    • பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
    • அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.

    இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    மேலும், தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

    பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது.

    எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200 பறிமுதல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பெரியகுத்தகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரி த்தனர்.

    விசாரணை யில் அவர் அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் (வயது63) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது.

    அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
    • அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.

    முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

    1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

    இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.

    பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.
    • இந்த ஆண்டு மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம்.

    இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகர சுவாமி மகர தோர வாயிலில் கொடிமரத்து முன்பு எழுதருளி கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் யாழ்பாணம் பரணி ஆதினம்செவ்வந்தி நாதா பண்டார சன்னதி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன், சலஸ்தார்கள் கையிலை மணி, வேதரத்தினம், கேடிலிஅப்பன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கோவிலில் மார்ச் 3 ந்தேதிதேர்திருவிழா, மார்ச் 8ந் தேதி தெப்பதிருவிழா, பிப்-22 திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என முக்கிய விழாக்கள் நடைபெற உள்ளது.

    • விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதி.
    • நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த கொள்முதல் நிலையத்திற்கு செல்ல மண்சாலை தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குறுவை, சம்பா அறுவடை நேரங்களில் பருவம் தவறி செய்யும் மழையால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    கடந்த 2016 -ம் ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

    இடையாத்தங்குடி, கணபதிபுரம், சேஷமூலை, கிடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிற்கு சாகுபடி நிலங்கள் உள்ளது.

    இங்கு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் முழுவதும் இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் கொள்முதல் செய்ய ப்படும்.

    இந்த நிலையில் சாலை மண்சாலையாக இருப்பதால் நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.

    இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்களை விடுத்துள்ளனர்.

    • முறையான கணக்கெடுப்பு நடத்தி உரியநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
    • அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமனதாக இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ஜெயராஜபவுலின் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், 'பருவம் தவறி பெய்த கனமழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முறையான கணக்கெடுப்பு நடத்தி உரியநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    மேலும் தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரணத் தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

    பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று மீண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், 'வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது. இதனை முறையாக வேளாண்மைதுறை அதிகாரிகள் கணக்கெடுக்கவில்லை. அரசு அறிவித்த நிவாரணத் தொகை போதுமனதாக இல்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

    • நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
    • அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

    முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-

    நாகை மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு 10 நெல் கொள்முதல் நிலையங்களும், நடப்பு ஆண்டில் 16 நெல் கொள்முதல் நிலையங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, வாய்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.

    விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கர், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன் மற்றம் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
    • வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி கீழ் பாதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் வேலை முடிந்ததும், வீட்டுக்கு செல்லும் வழியில் மானங்கொண்டான் ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

    சிறிது நேரத்தில் நண்பர்கள் சென்ற பிறகு, தினேஷ் அந்த ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது தூங்கிவிட்டார்.

    இந் நிலையில் அவர் ஆற்றில் தவறி விழுந்தார். இதில் ஆற்றில் மூழ்கி தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று காலையில் அவரது குடும்பத்தினர் தேடியபோது தினேஷ் ஆற்றில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வேதாரண்யம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தினேஷின் உடல் மீட்கப்பட்டு, வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆனந்த் சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து, கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×