என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழ மருந்தாந்த நல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). விவசாயி. இவரது மனைவி சூரியகலா (28). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சூரியகலா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து சூரியகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சூரியகலாவுக்கு பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சூரியகலாவுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சூரியகலா பரிதாபமாக இறந்தார்.
குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே சூரியகலாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறக்க நேரிட்டது என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்திய சூரியகலா உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சீர்காழி:
சீர்காழியில் ஆபத்துகாத்த விநாயகர், செல்விநாயகர், இரட்டைவிநாயகர்,வீரசக்கிவிநாயகர்,ருத்ரவிநாயகர், குமரகோவில் விநாயகர், மங்களவிநாயகர் உள்ளிட்ட 37இடங்களில் விநாயகர் சிலைகள் கடந்த 12-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள்,பூஜைகள் செய்யப்பட்டன. இதில் 6 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மீதமுள்ள சிலைகள் விசர்ஜனம் செய்யும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு ஒவ்வொன்றாக பல வண்ண மலர்கள், மின் அலங்காரத்துடன் புறப்பட்டன.
முக்கிய வீதிகளின் வழியாக 31 விநாயகர் சிலைகளும் சென்றன. வழிநெடுங்கிலும் பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். நிறைவாக சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றினைந்தன. 31விநாயகர் சிலைகளுக்கு ஒரு சேர தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் வாண வேடிக்கையுடன் ஒவ்வொரு விநாயகர் சிலைகளும் மேல மடவிளாகம், கச்சேரிசாலை, தென்பாதி வழியாக சென்று உப்பனாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பாஜக கோட்டபொறுப்பாளர் தங்க.வரதராஜன், நிர்வாகிகள் செல்வம், குருமூர்த்தி,அருணாச்சலம், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், விஸ்வ இந்து பரிசத் பொறுப்பாளர் செந்தில் குமார், இந்து முன்னணி நிர்வாகி சி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட இந்து அமைப்பு பொறுப்பாளர்கள், விழா குழுவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 21 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை கடற்கரைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் குடியிருப்பிற்கு அருகில் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.
நாள்தோறும் குப்பைகளை கொளுத்திவிடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. இந்த குப்பை கிடங்கை மாற்றி கடற்கரை அருகே ரூ.2 கோடி செலவில் குப்பைகள் மறு சுழற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இதை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இந்த குப்பை மறு சுழற்சி கிடங்கை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பழைய இடத்தில் உள்ள குப்பைகளை மறு சுழற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது உள்ள குப்பை கிடங்கு அருகே 4 சுடுகாடுகள் உள்ளன. அதனையும் புதிதாக கட்ட வேண்டும். அதேபோல் தற்போது அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் பொது தகன மேடையும் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே திருக்கடையூர் சின்னகுடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் நந்திஷ் (வயது 19).
இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சின்னகுடியில் இருந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் நடந்த பால வேலைக்காக வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நந்திஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து பொறையாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த பண்டார வாடை கிராமம் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கலைவாணன் (வயது 35). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பெரம்பூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கலைவாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலைவாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைவாணனை பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவை கடலூர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினம் மருதூர்வடக்கு மச்சக்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 65). விவசாயி. இவரது மனைவி சவுந்தரலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வயதான காலத்தில் குழந்தை இல்லாததால் கஷ்டப் படுகிறமோ? என்று தங்கராசு நினைத்து மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த தங்கராசு, தனக்கு பின் வாரிசு இல்லையே என்று ஏக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தங்கராசு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கரியாபட்டினம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 45). தொழிலாளி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகையன் அதே தெருவில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்கு முருகையன் சென்றுள்ளார். அப்போது அவர் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாலசுப்பிரமணியன் தனது வீட்டின் ஒரு அறையில் முருகையனை தங்க வைத்துள்ளார். அப்போது முருகையன் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்த குட்டார் என்பவரின் மகன் முருகேசன் (வயது45) கூடைப்பின்னும் தொழிலாளி.
இவர் நேற்று மாலை முருகேசன் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற முருகேசன் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்டு அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கிய முருகேசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரமானதால் முருகேசனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக முருகேசன் உடலை தீயணைப்பு படையினர் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தேடினர். அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் முருகேசன் உடல் கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆற்றில் மூழ்கி பலியான முருகேசனுக்கு அரசாயி (40) என்ற மனைவியும், கலைச்செல்வி (24) என்ற மகளும், சதீஷ்(22) என்ற மகனும் உள்ளனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (வயது35). பாட்டாளி மக்கள் கட்சியில் இவர் முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்தவர்.
மணிகண்டன் நேற்று சீனிவாசபுரம் அருகே தேவசேனாநகரில் உள்ள அவரது வீட்டு மனையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது திடீரென தேவசேனாநகரில் சென்றபோது 3 பேர் கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் மணிகண்டனை வழி மறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டார். உடனே 3 பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மணிகண்டன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு வழக்கு பதிவு செய்து ஆலவெளி சேமங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (30), எலந்தங்குடியைச் சேர்ந்த பாரதிராஜா (37), சீனிவாசபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மயிலாடுதுறை அருகே உள்ள ஆரோக்கியநாத புரத்தைச் சேர்ந்த தேவசகாயம் மகன் கபிரியேல் என்பவருக்கும், மணிகண்டனுக்கு இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது தூண்டுதலின் பேரில் இந்த 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயராஜ், பாரதிராஜா, தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்ட்) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார்.
இதையடுத்து இரவு 7.55 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒலிக்க, மின் விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர், பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது.
தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைத்தட்டி ‘மரியே வாழ்க‘ என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மனசு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண விளக்குகளின் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.
இந்த 7 தேர்களின் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும், புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.
விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #velankannichurch
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலத்திற்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தித்தொடர்பாளரும், கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழிசை சவுந்திரராஜன் செல்லும் விமானத்தில் இனி செல்லப்போவதில்லை. இனிமேல் ரெயிலில் பயணம் செய்யப் போகிறோம். பொதுமக்களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் பதவியில் உள்ள டி.ஜி.பி வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெறுவது இந்தியாவிலேயே முதல்முறை. சி.பி.ஐ. அதிரடி சோதனைக்குப்பின், அமைச்சர் பதவியில் விஜயபாஸ்கர் தொடரக்கூடாது, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், சிபிஐ சம்மன் அனுப்பும். அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி.

தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெறுகின்றது. இதில் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில பொருளாளர் ரெங்கசாமி, அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் குடவாசல் ராஜேந்திரன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர். #pugalenthi #ministervijayabaskar #Gutkha






