search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் தாய் பலி-  உறவினர்கள் முற்றுகை
    X

    மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் தாய் பலி- உறவினர்கள் முற்றுகை

    பிரசவத்தில் தாய் பலியானதால் தகவல் அறிந்த உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழ மருந்தாந்த நல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). விவசாயி. இவரது மனைவி சூரியகலா (28). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் சூரியகலா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து சூரியகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சூரியகலாவுக்கு பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சூரியகலாவுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சூரியகலா பரிதாபமாக இறந்தார். 

    குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே சூரியகலாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறக்க நேரிட்டது என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்திய சூரியகலா உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×