என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே திருப்பயத்தாங்குடி பி.எஸ்.ஆர். காலனி தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி அனுராதா(30). இவர்களுக்கு விக்னேஷ் (14), ஆகாஷ்(7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அனுராதா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அனுராதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பரசுராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது மனைவி அனுராதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியதை பரசுராமன் ஒப்புக்கொண்டார்.
பரசுராமனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை மனைவி அனுராதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரசுராமன், அனுராதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.
பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
நடிகர் ஜீவா நடிக்கும் ‘சீர்’ சினிமா படத்தின் சூட்டிங் நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் கிழக்கு கோபுரவாசல் பகுதியில் நடந்தது. அப்போது கோவில் முன்பு மதுக்கடை இருப்பதை பெண்கள், பொதுமக்கள் அடித்து உடைத்து அகற்றுவதுபோன்ற திரைப்பட காட்சி எடுப்பதற்காக நேற்று மதியம் கீழவீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் எதிரே மதுக்கடை போன்ற அரங்கு போடப்பட்டது.
இந்த நிலையில் கோவில் முன்பு புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதாக பொதுமக்கள் இடையே வதந்தி பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் கண்ணன் மற்றும் சிலர் அங்கு சென்று கோவில்கள் இருக்கின்ற இடத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அப்படி இருக்க திரைப்பட சூட்டிங் என்று கூறி பாருடன் மதுக்கடை இருப்பது போன்று எப்படி அரங்கு அமைத்தீர்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு திரைப்பட குழுவினர் கோவில் முன்பு மதுக்கடை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தான் அதனை பெண்கள் அடித்து நொறுக்குவது போன்று காட்சி எடுக்கிறோம். சிறிது நேரத்தில் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம் என்று கூறினர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சினிமா காட்சி எடுக்கப்பட்டு, மதுக்கடை அரங்கு அகற்றப்பட்டது. அதன்பின்பு நடிகர் ஜீவா நடிக்கும் காட்சிகள் கோவில் முன்பு படமாக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. உப்பு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகள் மூலமாகவே அனுப்படுகிறது.
இந்தநிலையில் கஜா புயலால் கடலிலிருந்து சேர் உப்பள பகுதியில் சேறு புகுந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தற்சமயம் உப்பு உற்பத்தி சீசனில் உப்பு உற்பத்தி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிட மிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.
இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீதமே நடந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.
கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வந்த நிலையில் தற்போது நாகை அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 51 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் நேற்று இந்திய கடல் எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் 5 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இந்த மீனவர்களை கண்ட கடற்படையினர் சந்தேகத்தின்பேரில் அவர்களது படகுகளை நெருங்கினர். இதனால் பதட்டமடைந்த மீனவர்கள் படகுகளை வேகமாக செலுத்த தொடங்கினர். ஆனால் இந்திய கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் சம்பந்தப்பட்ட படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் படகுகளில் ஏறி அதில் இருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், இலங்கை மீனவர்கள் என்றும், எல்லை தாண்டி வந்து நாகை கடற்பகுதியில் மீன்பிடித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடற்படையினர் அந்த படகுகளில் இருந்த 25 இலங்கை மீனவர்களையும் கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இந்திய கடற்படையினர் காரைக்காலுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #SriLankaFisherman
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரம் ரோஜா தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது50). விவசாயி. இவருடைய இளைய மகன் ரவிசங்கர் (19). டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த ரவிசங்கர், திடீரென மாயமானார். அவரை வீரமணி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
நேற்று காலை அப்பகுதியில் வீரமணி மற்றும் உறவினர்கள் ரவிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் ரவிசங்கரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். இதில் ரவிசங்கரின் செல்போன் ‘ரிங்டோன்’ அப்பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்குள் இருந்து ஒலித்தது. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த வீரமணி உள்ளிட்டோர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் மின்விசிறியில் ரவிசங்கர், 16 வயது சிறுமி ஒருவருடன் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிசங்கர் மற்றும் சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரவிசங்கரும், 16 வயது சிறுமியும் ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பற்றி வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை சாலையில் அரசு சார்பில் சுமார் ரூ.15 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கடந்த ஆண்டு ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கட்டிடத்துக்கு உடனடியாக வர்ணம் பூசப்பட்டது. அப்போது இந்த 5 கடைகளில் 4 கடைகளை மட்டும் வாடகைக்கு விட திருமருகல் ஒன்றிய ஆணையர் ஏல அறிவிப்பும் செய்திருந்தார். ஆனால், ஏதோ காரணங்களால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக வணிக வளாகம் பூட்டியே கிடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பயன்பாடற்று பூட்டியே கிடக்கும் இந்த அரசு வணிக வளாகத்தை உடனே திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி சங்கர் நகரை சேர்ந்தவர் லெட்சுமிகாந்தன் மகன் ரமேஷ்பாபு(46) அ.தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் காரில் அமர்ந்திருந்தபோது மர்மகும்பலால் நாட்டுவெடிகுண்டுகள் வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி புதுத்துறை கிராமம், தென்பாதி தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(32) உள்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து பார்த்திபன் சீர்காழி பகுதியில் உள்ள மணல் குவாரி நடத்தும் உரிமையாளர்கள், ஒப்பந்த காரர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுத்துறை பார்த்திபன் பேசுவதாக கூறி பல லட்சம் உடனடியாக தரவேண்டும். இல்லையென்றால் ரமேஷ் பாபுவை கொன்றதுபோல் படுகொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தான் அனுப்பும் நபர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்ப வேண்டும் எனவும் பார்த்திபன் கூறி வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக சீர்காழி நகர் பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் பார்த்திபனுக்கு ஆதரவாக மர்மநபர்கள் பணம் கேட்டு சென்றுள்ளனர். இதனால் சீர்காழியை சேர்ந்த பல தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் போனை எடுப்பதற்கே அச்சம் அடைந்து வந்தனர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சில பிரமுகர்கள் நாகை எஸ்.பி. விஜயக்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் நாகை எஸ்.பி உத்தரவின்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்இன்ஸ்பெக்டர் ராஜா,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அகோரமூர்த்தி, இளங்கோவன், அருள்குமார் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரனையில் சீர்காழியை அடுத்த திருவாலி மெயின் ரோட்டைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் அன்புமாயவன்(26), அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வபருதி(23) ஆகிய இருவரும் தொழிலதிபர்களிடம் நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அன்புமாயவன், செல்வபருதி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். பார்த்திபன் மீது நாகை மாவட்டம், சேலம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்தவர் களியபெருமாள். இவருடைய மகன் சுதாகர் (வயது 30). இவர் சென்னையில் கொத்தனராக வேலை பார்த்து வந்தார்.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 11-ந் தேதி நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு 7.30 மணியளவில் சுதாகருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் அறையில் இருந்து வெளியே சென்ற சுதாகர் செல்போனில் பேசிவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தார்.
அப்போது அறையில் இருந்த அவரது காதலி செல்போனில் பேசியது யார்? என கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சுதாகர் குளியல் அறைக்கு சென்றார். இதன்பின் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது காதலி குளியல் அறை கதவை திறந்த போது குளியல் அறைக்குள் சுதாகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி சத்தம் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த விடுதி பணியாளர்கள் சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுதாகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிகோட்டகம் கிராமத்தில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலை அப்பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கிராம மக்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கி கொண்டு தப்பி விட்டது தெரிய வந்தது. மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமிராவையும் உடைத்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து வாய்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கோவிலில் புகுந்து காணிக்கை பணத்துடன் இருந்த உண்டியலை தூக்கி சென்ற கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 41). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அதில் 1 மகளுக்கு 14 வயதாகிறது. மனைவி மலேசியாவில் தங்கியிருந்து வேலை பார்க்கிறார். இதனால் பாஸ்கர் தனது 2 மகள்களுடன் மருதூர் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பாஸ்கர் தனது 14 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தனது தந்தையை கண்டித்து வந்தாள். ஆனால் பாஸ்கர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரே என்று எண்ணி அவர் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மகளை திடீரென பலவந்தமாக பாஸ்கர் கற்பழித்தாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், மற்றும் கஞ்சா ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் 24 நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும், இன்று வரை இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவது நடைபெற்று தான் வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இன்று 13 மூட்டைகள் கரை ஒதுங்கி இருந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவ கிராம மக்கள், இதுபற்றி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடற்கரையில் ஒதுங்கிய மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. 13 மூட்டைகளிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 26 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் பெரிய குத்தகை கடற்கரையிலும் இன்று தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா 11 மூட்டைகள் இருந்தன. இதையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சர்வசேத சந்தையில் ரூ.2 லட்சம் ஆகும்.
வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற போது மர்ம கும்பல் இதை விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சீர்காழியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மேல்பாதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியபெருமாள் (30) என்பவர் நேற்று இரவு சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு பாதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதி தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக குமாருக்கும், கலிய பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து செத்த கோழியை வாங்கி குமார் பிரியாணி செய்வதாக வாடிக்கையாளர்களிடம் கலியபெருமாள் கூறியுள்ளார். இதுபற்றி குமார் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தார்.






