search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - 2 பேர் கைது
    X

    சீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - 2 பேர் கைது

    சீர்காழியில் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி சங்கர் நகரை சேர்ந்தவர் லெட்சுமிகாந்தன் மகன் ரமேஷ்பாபு(46) அ.தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் காரில் அமர்ந்திருந்தபோது மர்மகும்பலால் நாட்டுவெடிகுண்டுகள் வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி புதுத்துறை கிராமம், தென்பாதி தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(32) உள்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து பார்த்திபன் சீர்காழி பகுதியில் உள்ள மணல் குவாரி நடத்தும் உரிமையாளர்கள், ஒப்பந்த காரர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுத்துறை பார்த்திபன் பேசுவதாக கூறி பல லட்சம் உடனடியாக தரவேண்டும். இல்லையென்றால் ரமேஷ் பாபுவை கொன்றதுபோல் படுகொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் தான் அனுப்பும் நபர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்ப வேண்டும் எனவும் பார்த்திபன் கூறி வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக சீர்காழி நகர் பகுதியில் உள்ள பல்வேறு நபர்களிடம் பார்த்திபனுக்கு ஆதரவாக மர்மநபர்கள் பணம் கேட்டு சென்றுள்ளனர். இதனால் சீர்காழியை சேர்ந்த பல தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் போனை எடுப்பதற்கே அச்சம் அடைந்து வந்தனர்.

    இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சில பிரமுகர்கள் நாகை எஸ்.பி. விஜயக்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்அடிப்படையில் நாகை எஸ்.பி உத்தரவின்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்இன்ஸ்பெக்டர் ராஜா,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அகோரமூர்த்தி, இளங்கோவன், அருள்குமார் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரனையில் சீர்காழியை அடுத்த திருவாலி மெயின் ரோட்டைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் அன்புமாயவன்(26), அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வபருதி(23) ஆகிய இருவரும் தொழிலதிபர்களிடம் நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அன்புமாயவன், செல்வபருதி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். பார்த்திபன் மீது நாகை மாவட்டம், சேலம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×