என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி பாரா ளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் கட்சி தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்கிறார்களா? எனவும் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை ஆர்.கே. நகரில் நடந்த இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கட்சி தொண்டர்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வினர் சீர்காழியில் முதல்நாள் பிரச்சாரத்தை தொடங்கினர்.
பிரச்சாரத்தை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க, த.ம.கா, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனத்துடன் திரண்டிருந்தனர்.
இதனிடையே சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கட்சி கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் பலர் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தேர்தல் பறக்கும் படை மண்டல துணை தாசில்தார் சுவாமி நாதன் தலைமையில் போலீசார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.
பறக்கும் படையினரை கண்ட கட்சியினர் பலர் அங்கிருந்து விரைந்து சென்றனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது கட்சி தொண்டர்கள் பலர் அ.தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரின் பெயருடன் கூடிய ரப்பர் ஸ்டாம்பு அச்சிட்ட டோக்கன் கொடுத்து ரூ.100 பெட்ரோல் நிரப்பியது தெரிய வந்தது.
இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்து அடுத்த நிமிடம் பெட்ரோல் போட்ட பங்க் ஊழியர் கையில் வைத்திருந்த 100 டோக்கன்களையும், ரூ. 10 ஆயிரத்து 870 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் கணக்கரிடம் விசாரணை செய்து அறிக்கை பெற்றனர். அறிக்கை பெற்ற பின்பு இந்த பெட்ரோல் செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வினர் மூலம் வழங்கப்பட்ட பெட்ரோல் டோக்கன் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LSPolls #ADMK
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கீழ ஆறுமுககட்டளையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்குமார் (வயது 33). இவர் மீது வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் சுரேஷ்குமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்தில்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் நடுகாட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் அழகியமாறன் (வயது 19). இவர் 9-ம் வகுப்பு படித்துவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அழகிய மாறன் ஆட்டோ சவாரிக்கு செல்லாததால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அழகியமாறன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சாத்தூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் ரதிப்ராஜன் (வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இளங்கோவன் தனது குடும்பத்துடன் நாகூர் அருகே கங்களாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் இளங்கோவனின் உறவினர்களுடன் ரதிப் ராஜன் அருகில் உள்ள குளத்தில் குளித்து கொண்டிருந்தான். அப்போது திடீரென ரதிப்ராஜன் குளத்தில் மூழ்கினான். உடனே சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரதிப்ராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையை அடுத்த நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டு ஜெயராமன், பெண் தலைமைக் காவலர் ஷோபா மற்றும் போலீசார் இன்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் உள்ள ஆற்றில் 5 மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த கண்டனர். உடனே அவர்களை அழைத்து விசாரித்ததில் அரசு உரிய அனுமதியின்றி இல்லாமல் மணல் அள்ளுவது தெரிய வந்தது.
உடனே மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த நாகூர் போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து 5 பேரையும் விசாரணை செய்தனர்.
இதில் தெத்தி சிவன் சன்னதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 38) அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (40) தெற்கு தெருவை சேர்ந்த ராஜகுரு (44) மேலத்தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (45) வடகுடி வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(38) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர். #tamilnews
நாகப்பட்டினம்:
நாகை வெளிபாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்ஜினீயர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு சுதன்ராஜ் (6) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மதுபழக்கத்துக்கு ஆளான ராஜ்குமார் சம்பவத்தன்று தனியாக வீட்டில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் வெளிபாளையம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வீட்டில் வந்து பார்த்தபோது ராஜ்குமார் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை பெரிய மேல்தெருவைச் சேர்ந்த முகமது சித்திக் மகன் அப்துல்ஜலீல், தி.மு.க. பிரமுகர். இவரது வயல் அருகில் பாரூக் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு அரங்ககுடியை சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது காசிம் என்பவர் வீட்டு மனைகளை உருவாக்கி உள்ளார். அவர் அப்துல் ஜலீலுக்கு சொந்தமான வயலுக்கு வழியில்லாத வகையில் வீட்டுமனை அமைத்ததால் அப்துல் ஜலீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது காசிம் மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அப்துல் ஜலீல் தனது தரப்பில் வாதாட வக்கீலை சந்தித்து பேசி அவரிடம் வழக்குக்கு உரிய இடத்தை காட்ட நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த முகமது காசிம், அவரது மகன் அனீஸ் ஆகியோர் வாக்குவாதம் செய்து அவரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ஜலீல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே முகமது காசிம், அவரது மகன் அனீசும் தங்களை அப்துல் ஜலீல் தாக்கியதாக கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் செம்பனார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த நாகூரில், புதுமனைத்தெரு, பீரோடும் தெரு, தர்கா அலங்கார வாசல் பகுதிகளில் செயல்படும் உணவகங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் சென்றது.
இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி உத்தரவின்படி மேற்குறிப்பிட்ட பகுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுகாதார மற்ற சூழலில் உணவு பொருட்களை விற்பனை செய்த 4 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நோட்டீசுகள் வழங்கப்பட்டன. 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதே நிலை தொடர்ந்தால் மேற்படி சட்டத்திற்கு உட்பட்டு ஓட்டல் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #PlasticBan
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன் பள்ளி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக வாந்தி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 113 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் வந்த வண்ணம் உள்ளனர்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சுகாதாரதுறை முதன்மை செயலாளர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் விசாரித்தார். பின்பு சுகாதாரதுறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் கூறும்போது, வேதாரண்யத்தில் வாந்தி வயிற்றுப்போக்கால் 113 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை பார்வையிட வந்தேன். நிலைமை தற்போது சீராக உள்ளது. போதுமான மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. தண்ணீரால் இந்த பிரச்சனை வந்துள்ளது என்று கருதுகிறேன். அதனைசரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். #tamilnews
நாகூரை அடுத்த வடக்கு பால் பண்ணை சேரியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). தொழிலாளி. இவரது மனைவி பூரணராதா (35). இந்த நிலையில் ராஜ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான பூரண ராதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராஜ்குமார் இனி நமக்குள் பிரச்சனை வராது. வா குடும்பம் நடத்தலாம் என்று பூரண ராதாவை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து உள்ளார்.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்கு வந்து விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி விநாயகர் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 60).
இந்த நிலையில் குணசேகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். வெளியூர் செல்வதற்கு முன்பு தனது வீட்டுச்சாவியை அங்குள்ள மின்சார பெட்டியில் வைத்து விட்டு சென்றார்.
பின்னர் அன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது மின்சார பெட்டியில் இருந்த சாவியை பார்த்தபோது அங்கு இல்லை. குணசேகரன் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம மனிதன், அங்கு வந்து மின்சார பெட்டியில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவுகளை திறந்து வீட்டின் மேஜையில் இருந்த 17 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து குணசேகரன் பொறையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி சென்று சிறிது தூரத்தில் உள்ள கடைத்தெருவில் படுத்துக்கொண்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.






