என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் நாகூர் தர்காவுக்கு வருவதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
    • கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது.

    இந்த தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இந்த தர்காவுக்கு வருவதால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி தர்காவின் ஐந்து மினாராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள், நாகை மீரா பள்ளிவாசலுக்கு எடுத்து வரப்பட்டு, "துவா' ஓதப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு மற்றும் கப்பல் ரதம், சிங்கப்பூரில் இருந்து வர வழைக்கப்பட்ட கொடி உள்ளிட்ட அலங்கார வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

    ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த இஸ்லாமியர்கள் கொடியினை வரவேற்றனர். அதனை தொடர்ந்து கொடிக்கு தூவா ஓதப்பட்டு வண்ணமிகு வாணவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நாகூர் ஆண்டவரை பிரார்த்தனை செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகிற 2-ம் தேதி இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தின் முடிவில் பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 3-ந் தேதி அதிகாலை வரை நடைபெறும்.

    கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அல்ஹாஜ் டாக்டர் செய்யது காமில் சாகிப் காதிரி-நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
    • திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட்தன்ராஜ், அற்புதராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேரலாயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணி வந்த உடன் கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார். பின்னர் தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றபட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    இன்றும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த மூதாட்டி யார் என விசாரணை.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் அடுத்த அருள்மொழிதேவன் அக்ரகாரம் பிரிவு சாலை அருகே அரசலாற்று படுகையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டியின் இறுதிச்சுற்று நாகை இலக்கியா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஆரிப் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நாகை வருவாய் வட்டாட்சியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.நாகை அஸ்பெயர் அகாடமி நிர்வாக இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ராஜு, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டியில்15 பள்ளிகளில் இருந்து 147 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி ஹர்னிதா முதலிடம், தேவூர் குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி மாணவி வர்ஷினி 2-ம் இடம், நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி சௌசிதா 3-ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி யானது திருமருகல் ஒன்றிய கிளை ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

    • மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
    • சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.

    இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.

    இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.

    உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது.
    • 3000 பைபர் படகுகள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.

    இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் நேற்று நாகை துறைமுகத்தில்புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை உள்ள வானிலை பகுதி உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.

    சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது ஏற்கனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • 5 மினாராக்கள், அலங்கார வாசல் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலம்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று பாய்மரம் ஏற்றப்பட்ட நிலையில் நாளை (24-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவை முன்னிட்டு தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாகூர் தர்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இதனை கண்டு முஸ்லிம்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலமும், தொடர்ந்து 3-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    • ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட உணவு வழங்கும் பணியின் 1000வது நாள் நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் மஹாலில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.

    கடந்த 1000 நாட்களாக உணவு வழங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பிராங்க்ளின் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்களுக்கும், சேவை அமைப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சேவை அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்கத் தலைவர் அனுஷா முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர்.

    வேதநாயகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அரிமா சங்கமாவட்டத் தலைவர் ரூசோ பாட்ஷா, வரவேற்புரைகிறிஸ்துராஜ் ஆசிரியர், நன்றியுரை லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் டேவிட், நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.லியோ அந்துவான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
    • 12 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.

    அதில் 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    மேலும் காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், வேணுகோபால், நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

    அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    • சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
    • 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.

    வேதாரண்யம்:

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    அதில், நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தென்னம்புலம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    இதனை, யாதவர் ஆலோசனை மையம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி திருவள்ளுவர் உருவம் பொறித்த கேடயம், திருக்குறள் புத்தகம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

    இதில் யாதவர் ஆலோசனை மைய மாநில தலைவர் ஜம்புலிங்கம், மகளிர் பிரிவு ஜெயமீனாகுமாரி, சித்ரா, மாநில பொது செயலாளர் ராகவன், நாகை மாவட்ட அமைப்பாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உறுப்பினர்கள் ராமமூர்த்தி துரை, ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமரன், அஞ்சலக பணியாளர் சௌந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு.
    • பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாகை:

    நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தனர்.

    பின்னர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×