என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினார்.
    • பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்றத்தால் மார்கழி 30 நாட்கள் நடந்த திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் வைரம் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.

    நாள்தோறும் தனுர்மாத வழிபாட்டில் பங்கேற்ற 100- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஓதுவாமூர்த்திகள் திருவாரூர் சந்திரசேகர், கொடுமுடி வசந்தகுமார் தேசிகர் ஆகியோர் பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினர்.

    விழா மற்றும் வழிபாட்டில் வேதாரண்யம் மன்ற பொருப்பாளர்கள் சச்சிதானந்த தேசிகர், ஓதுவார் பரஞ்சோதி, ஓய்வு பெற்ற தொலைபேசித் துறை ராஜேந்திரன், போலீஸ் எஸ்ஐ வேதமூர்த்தி, சேகர், சத்யசாய் சேவா சமிதி சந்திரமௌலி உட்பட பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

    • தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள்கள் பதிக்க வேண்டும்.
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு தினமும் ஆயிரகணக்கானோர் வருகின்றனர்.இந்த தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றியை அகற்றி தரைவழி மின் கேபிள் பதிப்பதற்காக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன,

    இந்த நிலையில் அதன் சாத்தியகூறுகளை கண்டறிய ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நாகூர் தர்கா வருகை புரிந்து அந்த பகுதிகளை பார்வையிட்டார்.

    அவருடன் நாகை நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், தமிழக அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் முஹம்மது பைசல், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம் மற்றும் நாகூர் தர்கா பிரசிடன்டு கலீபா சாஹிப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வால் விரைவில் தர்காவை சுற்றி தரைவழி மின் கேபிள் பணி தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

    • நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

    முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    அப்போது தமிழ்நாடு வாழ்க என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

    பின்னர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது,

    இப்போது தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றத் துடிக்கிறார்கள்.

    தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ் ஆண்டு ஆகியவற்றை திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். தமிழர் திருநாள் அன்று 13000 பேர் எஸ்.பி.ஐ வங்கி தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு எம்.பி.க்கள் எவ்வளவோ போராடிய பிறகும் ஒன்றிய அரசு விடாப்பிடியாக தேர்வை நடத்துகிறது.

    இப்படி ஓணம் பண்டிகையின் போதோ, தசரா பண்டிகையின் போதோ நடத்த முடியுமா. அப்படியிருக்க பொங்கல் நாளில் நடத்துகிறார்கள் என்றால் இது தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதலாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
    • கோடியக்கரை மீனவர்கள், பாம்பன், காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்தனர்.

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

    இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    • ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.
    • ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் இலக்கை தாண்டி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நலவாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.

    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் இலக்கை தாண்டி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தேவிஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் நாகை செல்வன் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் இணை இயக்குனர் நலப்பணிகள் விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    • 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட மீனவர்கள் மீன்வளத்தை பெரிதும் பாதிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் நாகை துறைமுகத்தில் நடைபெற்ற 4 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் நடுக்கடலில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக நாகை மீனவர்களுக்கு தகவல் கிடைத்து.

    அதனை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் திரண்டு அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டத்தில் நாகை முதல் கோடியக்கரை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி மாநில மீனவர்களை சிறைபிடிப்பதாக அறிவித்தனர்.

    அதனை தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து நடுக்கடலுக்கு செல்ல தயாராக இருக்கவேண்டுமென துறைமுக ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

    காரைக்கால் மீனவர்களின் விசைப்படகுகளை, நாகை மீனவர்கள் சிறைபிடிக்க தயாராகி வருவதால், அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நாகை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.

    • சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
    • சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

    அதை வரவேற்று நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சட்டமன்றத்தில் பேசியதாவது, ஒன்றிய அரசின் திட்டம் என்றாலே நாம் கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

    ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தரும் நல்ல திட்டங்கள் எதையும் நாம் எதிர்த்ததில்லை என்பதற்கு சேதுக் கால்வாய் திட்டம் ஒரு சான்று. எய்ம்ஸ் இன்னொரு சான்று.

    தமிழ்நாட்டிற்கு நிறைய ரயில்கள் விடப்பட வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் தான் கேட்கிறோம். ஆனால் அவர்கள் தான் தர மறுக்கிறார்கள்.

    அதிலும் குறிப்பாக நாகை திருவாரூர் மாவட்டங்கள் ரயில்வேயால் புறக்கணிக்கப்பட்டு, அதன் காரணமாக போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

    சேது சமுத்திர திட்டம் நமது கனவுத் திட்டமாகும்.

    பழவேற்காடு முதல் தேங்காய்பட்டணம் வரை தமிழரின் கடல் வழி வணிகமும் துறைமுகங்களும் சிறந்து விளங்கியிருந்தன. ஆனால் இப்போது அவை எல்லாம் செயலற்றுப் போய் விட்டன.

    வரலாற்றுச் சிற்ப்புமிக்க நாகப்பட்டினம் துறைமுகம் செயலற்றுக் கிடக்கிறது.

    எனவே சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்குணம் மிக்கவர்.

    அவர் காலத்தில் இது கட்டாயம் நிறைவேறும். விசிக சார்பில் இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம்.

    இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்.

    • சங்கிலியன் வடிகால் வாய்க்காலில் 60 ஆண்டுகளாக நிரந்தர தடுப்பணை இல்லாததால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
    • தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் 40 நாட்கள் பயிராக உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பகுதி வழியாக செல்லும் சங்கிலியன் வடிகால் வாய்க்காலில் 60 ஆண்டுகளாக நிரந்தர தடுப்பணை இல்லாததால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    ஒவ்வொரு முறையும் மண் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக தடுப்பணை அமைக்கப்பட்டு மழை காலங்களில் அவை அடித்து செல்லப்படுவதோடு பாசன நேரத்தில் விவசாயிகள் போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கீரம்பேர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய பெருமாள்கோட்டகம், சத்தியமங்கலம், குளவஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் 40 நாட்கள் பயிராக உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    மேலும் ஜனவரி 28-ந் தேதி கல்லணை மூடப்பட்டு பாசனத்திற்கான நீர் நிறுத்தப்படும் நிலையில் இப்பகுதியில் உள்ள மண் தடுப்பணை மூலமாக சேகரமாகியுள்ள நீர் முழுவதும் வீணாகி விடுவதால் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து தற்போது வரை நிரந்தரமாக தடுப்பணை அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் நிதி திரட்டி ஒவ்வொரு முறையும் மண் மூட்டைகள் கொண்டு தற்காலிக தடுப்பணை அமைத்து வருவதாகவும், தமிழக அரசு தலையிட்டு பொதுப்பணி துறை மூலமாக எதிர்வரும் ஆண்டில் நிரந்தர தடுப்பணை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

    மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

    மேலும் நுகர்வோர் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் பிரத்தியேகமாக உள்ள வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்தந்த நுகர்வோர், தங்கள் பகுதிக்கு கொடுக்கப்பட்ட செல் போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    நாகை - 9445853931, வெளிப்பாளையம்-9445853933, நாகூர் - 9445853934, திருமருகல்-9445853931, கங்களாஞ்சேரி- 9445853935, சிக்கல்-9445853940, வேளாங்கண்ணி- 9445853938, கீழ்வேளூர் -– 9448583936, திருக்குவளை- –9445853937, திருப்பூண்டி- –9445853939, வேதாரண்யம்-–9445853941, வாய்மேடு-9445853942, கரியா பட்டினம்- –9445853943, விழுந்தமாவடி- –9445853944 ஆகிய செல்போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    அனைத்து மின் நுகர்வோர் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி ஆதார் எண்களை இணைத்து வருகிற 31-ந் தேதிக்குள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
    • அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 38).

    இவர் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவர் அங்குள்ள 5-ம்வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் விசாரணைக்கு உத்த ரவிட்டார்.

    விசாரணையில் ஆசிரியர் தேவதாஸ் மீது கூறப்பட்ட புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து அவரை சஸ்பென்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த புகார் மனு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஆசிரியர் தேவதாஸ் தப்பியோடி விட்டார்.

    அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் பாதிப்புக்கு உள்ளான ஆந்தகுடி தொடக்க பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நாகை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • சர்க்கரை நோயாளி–களுக்கு மிகவும் உகந்தது, நார் புரதசத்து நிறைந்தது, மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் பனங்கிழங்கு எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடியது பனங்கிழங்கு.

    சர்க்கரை நோயாளி–களுக்கு மிகவும் உகந்தது. நார், புரதசத்து நிறைந்தது.

    மலச்சிக்கல் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

    மருத்துவ குணம் வாய்ந்த இந்த பனங்கிழங்கு சாகுபடி கடலோர கிராமங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஐப்பசி மாதத்தில் பனங் கொட்டைகளை நன்றாக காய வைத்து மணல் தீட்டுகளை புதைத்து வைத்து விடுகின்றனர்.

    மூன்று மாதத்தில் பனங்கிழங்கு மணலுக்கு அடியில் உருவாகி வளர்ந்து விடும்.

    மார்கழி மாதத்தில் அந்த கிழங்கு–களை விற்பனைக்கு தயாராகிவிடும்.

    பனங்கிழங்கு விவசாயி–களுக்கு செலவு இல்லாமல் செய்யும் சாகுபடியால் நல்ல லாபம் கிடைக்கிறது.

    பனங்கோட்டையில் இருந்து மணலில் தானாக வளர்ந்து விவசாயிகளுக்கு அதிக லாபத்தை தரும் இந்த சாகுபடியில் உற்பத்தி செலவு கிடையாது.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, கோடியக்காடு, ஆயக்காரன்புலம், நெய் விளக்கு, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனங்கிழங்கு சாகுபடி நடைபெற்று உள்ளது.

    தற்போது அதனை உள்ளூர் வியாபாரிகளும் வெளியூர் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    ஒரு பனங்கிழங்கு ரூ.1 முதல் 2 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது இந்த பனங்கிழங்கை கொண்டு மதிப்புகூட்டல் பொருளாக செய்து நல்ல விலைக்கு விற்று வருகின்றனர்.

    • செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
    • கல்லூரிகளில் இது போன்ற குறைகளை நீக்க முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் சட்டமன்றத்தில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்.

    2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது.

    கூட்ட தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்வி பின்வருமாறு,

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்ட, நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பெரும் இன்னலை சந்திக்கிறார்கள்.

    சுற்றுச்சுவர், நடைபாதை, ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு கட்டிடம் மட்டும் இருக்கிறது, வகுப்பறை நடக்கிறது.

    எனவே அரசு உடனடியாக இதை பரிசீலித்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    அதுபோல அங்கு நிர்வாக செலவுகளுக்கு பல்கலைக்கழகத்தை சார்ந்திருப்பதா அரசை சார்ந்திருப்பதா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்தது.

    நிர்வாக செலவுகளுக்கு போதிய நிதி இல்லாமலும் அவர்கள் திண்டாடக்கூடிய சூழலை காண முடிகிறது.

    அதையும் அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தருமா என்று அமைச்சர் அவர்களை அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கலைக் கல்லூரிகளில் இது போன்ற குறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    எனவே ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    ×