என் மலர்
மயிலாடுதுறை
- 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும்.
- இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும், 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும்.
இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் ராஜேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.
இதேபோல் தேசியக் கல்விக்கொள்கை 2020 திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பேருந்துநிலையத்தில் மாநில துணைத்தலைவர் நா.அசோக்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
- புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
- கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம் ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர்.
புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
- மருத்துவரின்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். (35.) விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ரம்யா (26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
2-வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
நேற்று காலை 11 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயி லாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்க்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு நள்ளிரவு வரை தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான போலீசார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி முன்னிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பிரசவம் நடந்த போது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 10 -ம் வகுப்பு முடித்த பின்னர் 11 -ம் வகுப்பு எந்த பிரிவை தேர்தெடுத்து படிப்பது.
- 12 -ம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் "நான் முதல்வன்" என்ற மாபெரும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டம் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 1.12.2022 முதல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக சிறந்த பயிற்றுநர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் கோட்டாட்சியர்கள் , துணை ஆட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வகுப்புகள் நடத்தப்படுவதன் மூலம் , 10- ம் வகுப்பு முடித்த பின்னர் 11- ம் வகுப்பு எந்த பிரிவை தேர்தெடுத்து படிப்பது தொழிற்கல்வி ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்பு 12- ம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது என்று மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஒரு விழிப்புணர்வு தெளிவு ஏற்படும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்குவித்தலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வகுப்பானது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
- மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீர்காழி:
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது.
கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் படகுகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பூம்புகார் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
சீர்காழி:
மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் மற்றும் கனமழை பெய்து வருகிறது.
அதிக குளிர் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர கிராமங்களான தொடுவாய், மடவாமேடு, உள்ளிட்ட கிராமங்களில்10 அடிக்கு மேல் கடல் அலைகளின் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடல் நீர் புகுந்த தொடுவாய் கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியிலும் புயல் பாதுகாப்பு மைய ங்களுக்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, முகாமில் தங்கி உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
அவருடன் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பெரியம்மாவை காப்பாற்ற முயன்றவரையும் மின்சாரம் தாக்கியது.
- படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா (வயது 45).
திருமணமாகாத இவர் தனது தங்கை மகன் 11-ம் வகுப்பு படிக்கும் மணிகண்டனுடன் வாழை கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை ஓட்டச் சென்றார்.
அப்போது காற்றின் காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக சந்திரா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
தனது பெரியம்மாவை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டனையும் மின்சாரம் தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்தது.
- கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும் கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல்நீர் உட்புகுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில்கடல் சீற்றத்தி ன்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
- 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.
தரங்கம்பாடி:
வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவர் கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 விசைப்படகுகளும் 15,000 பைபர் படகுகளும் உள்ள நிலையில் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் ஏற்றி நிறுத்தி உள்ளனர். தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக பகுதியில் பல அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்கின்றன.
துறைமுகத்தின் தடுப்புச் சுவர்களை அலைகள் மோதி தாண்டி உள்ளே நுழைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 25 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளது போல் மீனவர்களுக்கும் மீனவர் நல கூட்டுறவு வங்கிகள் தொடங்க வேண்டும் என்றும் இதனால் தங்களுக்கு இது போன்ற தடை காலங்களில் நிவாரணம் பெறவும் கடனுதவி பெறவும் பெரும் வசதியாக இருக்கும் என்று மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது.
- கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
தரங்கம்பாடி:
மாண்டஸ் புயலால் தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் கடலோர வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
சீர்காழி அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
மழை நீர் வெளியேறாத நிலையில் இன்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
- செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.
மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.
- அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
- மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க.வினர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சின்ன கடை தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இதில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அபுதாஹீர், மாவட்ட துணை செயலாளர் உதயகுமார், மாவட்ட மகளிர் இணை செயலாளர் சசிகலா, துணை செயலாளர் விமல், பொதுக்குழு உறுப்பினர் ஐ.ஓ.பி. பன்னீர்செல்வம், நகர செயலாளர் குமார் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். கிட்டு, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மகா கணபதி, கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






