என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

    • அத்தியாவசிய பொருட்கள் விலை கண்டித்தும், விலை உயர்வு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    சீர்காழி:

    தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை கண்டித்தும், விலை உயர்வு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம். ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத், பேரூர் கழக செயலாளர்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.வி. பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அதிமுகவை சேர்ந்த கல்யாணசுந்தரம், நாடி.முத்து அஞ்சம்மாள், மாலினி, மதியழகன், விஜயன், வக்கீல்கள் தியாகராஜன், பாலாஜி, நெடுஞ்செழியன், ஏவி.மணி, பரணிதரன், ரவி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    கொள்ளிடத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், தலைமை வகித்தனர் முன்னாள் எம்எல்ஏ சக்தி கண்டன உரையாற்றினார்.

    இதில் நிர்வாகிகள் ஆனந்த நடராஜன், சொக்கலிங்கம், சம்பந்தம், இனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆரோக்கிய–நாதபுரத்தில் திறக்கப்பட்டது.

    இந்த திறப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலை வகித்தனர். கூடுதல் ேபாலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வரவேற்றார்.

    தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, டி.எஸ்.பி. வசந்தராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார், 30-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விஜய், 35-வது வார்டு கார்த்திக், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

    • மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும்.

    சீர்காழி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சீர்காழி அடுத்த பச்சை பெருமா நல்லூரில் பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

    தொடர் மழையால் வேலை வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

    தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடை பெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
    • கோபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் கடைசியாக 2004-ஆம் ஆண்டு 26-வது குரு மகா சன்னிதானத்தின் அருளாட்சி காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று பாலாலய விழா நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்து வைத்து திருப்பணிகளை தொடக்கி வைத்தார்.

    முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பின்னர், கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்து வைத்தார்.

    இதில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளை விசாரனை தம்பிரான் சுவாமிகள் வள்ளலார் கோயில் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், செந்தில்குமார், ரங்கராஜன், வாஞ்சிநாதன், தர்மபுரம்‌ கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சுவாமிநாதன், திருக்கோயில் சிப்பந்திகள் மற்றும் நகர முகவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை.

    சீர்காழி:

    சீர்காழி அருகே புது குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பருவநிலை மாறுபாடு மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை சார்பில் கடற்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் மற்றும் மீன் உலர் தளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கல் கொட்டும் பணி, வலை பின்னும் கூடம், அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார்.

    நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதில் காவிரி பூம்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், நிர்வாகிகள் ஜி.என்.ரவி, பழனிவேல், மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரபீந்திரநாத், உதவி பொறியாளர் சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம்.
    • மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரணேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    இதனை அடுத்து வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மந்திரங்கள் முழங்கிட அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 1008 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பேஸ்கர் திருஞானம், உபயதாரர் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, கோவில் மேலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
    • முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.

    இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

    நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
    • ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரம் நடைபெற்றது.

    இதில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

    பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுடன் கொடி மரம் மற்றும் கோயிலை வலம் வந்து, அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரம்மச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதில் கோவில் குருக்கள்கள் கணேசன், ரவி, மகேஷ், ஆடிட்டர் குருசம்பத், கோவில் கண்காணிப்பாளர் மணி, காசாளர் களியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு டப்பாவில் அடைத்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
    • மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி இரணிய நகர் பகுதியில் பொது குடிநீர் குழாய் அருகே இன்று சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்த படி சீறிக் கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடி நபர் சீர்காழியை சேர்ந்த பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்படி அங்கு சென்ற பாண்டியன் நல்ல பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    அப்போது பாம்பின் வால் பகுதியில் முள் குத்தி காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட பாண்டியன் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

    பிடிபட்ட பாம்பினை ஒரு டப்பாவில் அடைத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் தகவல் தெரிவித்தார்.

    மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டார்.`

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை விமான கும்பத்தை அடைந்தனர்.
    • வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ ஓம் சக்தி மா காளியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து மறுநாள் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக தினமான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

    அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் விழா குழுவினர்கள் ரெத்தினசபாபதி சிவநேசன், தென்னரசு, சீனு, செந்தில், பழநிவேல், கலியமூர்த்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மீறி குப்பைகள் கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது: -

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சியில் உள்ள24 வார்டுகளிலும் தற்காலிக மற்றும் நிரந்த தூய்மைபணியாளர்களை 107பேரை கொண்டு நாள்தோ றும் வீடுகளில் வழங்ப்படும் மக்கும்குப்பைகள்,மக்காத குப்பைகளை தரம்பிரித்து வாங்கப்படுகிறது.

    நகரில் நாள்தோறும் மக்கும் குப்பை ஆறரை டன் உட்பட 12டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.இவ்வாறு சேகரம் ஆகும் குப்பைகள் நகராட்சி உரகிடங்கிற்கு கொண்டுசெல்லப்படுகிறது.

    அதில் மக்கும் குப்பைகள் மட்டும் உரகிடங்கில் கொட்டப்படுகிறது.மக்காத உடைந்த பாட்டில், நெகிழி போன்ற குப்பைகள் அரியலூர் சிமென்ட ஆலைக்கும், மின்கழிவுகள் தூய்மைபணியாளர்கள் மூலம் விற்பனை செய்து கொள்ளவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    உரகிடங்கில் குப்பை மேடு இல்லாத நிலையை உருவாக்கிட நடவடிக்கைகள் நடை முறைப்படுத்தபடுகிறது.

    அவ்வாறு நகரில் பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுத்திட குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகருகே வசிக்கும் மக்கள் அந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் கொண்ட குழு அமைத்து, குப்பைகள் கொட்டுவதை கண்காணித்து தடுத்திடவும் மீறி கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்திடவும் திட்டம் நடைமுறை ப்படுத்த ப்படவுள்ளது. தூய்மையான நகராட்சியாக மேம்படுத்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×