என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடல் சீற்றத்தால் மயிலாடுதுறையில் 500 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது- பொதுமக்கள் வெள்ள முகாம்களில் தஞ்சம்
- மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது.
- கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
தரங்கம்பாடி:
மாண்டஸ் புயலால் தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பல அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் கடலோர வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் இன்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
சீர்காழி அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
மழை நீர் வெளியேறாத நிலையில் இன்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது.
இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.






