என் மலர்
மயிலாடுதுறை
- நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
- ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் வள்ளுவகுடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் ஜானகிராமன் என்பவரின் வயலில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர் தலைமையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர், நானோ யூரியாவின் முக்கியத்துவத்தையும் பயன்பாடுகளையும் பற்றி கூறினர்.
நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது. நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது.
மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.
அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று கூறினார்கள்.பின்னர் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் எஸ். தமிழரசன் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் செவுந்தரராஜன் கலந்து கொண்டனர்.
- நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது,
- மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொதுமக்கள், கடைஉரிமையாளருக்கு அறிவுரை வழங்கினார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாடு அதிகமாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின்பேரில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையில் பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழியால் ஆன 50 கிலோ பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் விரைவில் மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொது மக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் அறிவுரை வழங்கினார்.
- மீன்பிடி துறைமுகம் 2-வது முறையாக சேதமடைந்துள்ளது.
- தூண்டில் வளைவில் தடுப்புச்சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் 15அடி உயரம், 6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் கடந்த 2020ல் ஏற்பட்ட புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
இந்நிலையில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் 2வது முறையாக சேதமடைந்துள்ளது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதை கடல் சீற்றம் காரணமாக 8 அடியில் இருந்து 10 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவில் தடுப்பு சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி சேதமடைந்து உள்ளது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில்மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணியை தரமாக அமைக்காத காரணத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தாமல் உள்ளது என மீனவர்கள் குற்றசாட்டி உள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
- 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்து செம்பனார்கோயில் காவல் நிலைய எல்லைக்குள் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ரமேஷ் மற்றும் போலீசார் நரசிம்ம பாரதி. அசோக் குமார், செந்தில், கார்த்திக், விஜயன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்ப டையில் விசாரித்தனர். விசாரணையில் அவர் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் மேலபாதியை தெற்கு தெருவை சேர்ந்த மனோகர் (வயது 40) என்பதும் அவர் மயிலாடுதுறையில் 2 மோட்டார் சைக்களிலும், மணல்மேட்டில் ஒரு மோட்டார் சைக்கிள், செம்பனார் கோயிலில் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.
- முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் விவசாய கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு தென்ன ங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இயமையனாதன், ஒன்றிய கவுன்சிலர் அபிராமி வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 300 விவசாய குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டியன், வேளாண்மைத்துறை தரக்கட்ட ப்பட்டு உதவி இயக்குனர் சிவவீரபாண்டியன், வேளாண் அலுவலர் சுவாதிகா, உதவி வேளாண் அலுவலர் சுகுமார், ஊராட்சி துணை தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார அட்மா திட்ட மேலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
- கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
- அனைத்து தரப்பு திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது.
சீர்காழி:
சீர்காழியில் நடை பெற்ற நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் முத்து.மகேந்திரன், அலெக்சாண்டர், முருகன், சாமிநாதன், முத்து குபேரன், செல்வமுத்துகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல.சேதுரவிக்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினர் நிவேதா முருகன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றபோது கொரோனா பொதுமுடக்கம் போன்ற சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக அதனை சமாளித்தது.
தொடர்ந்து கடந்த ஆட்சியில் அரசு கஜானாவை வெற்றிடமாக்கி வைத்தபோதும், அரசின் வருமானத்தை பெருக்கி அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது என்றார்.
இதில், நகர துணை செயலாளர் முத்து, சிவப்பிரியாதுரை நகரப் பொருளாளர் கோடங்குடி சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர் தனராஜ், நிர்வாகிகள் திருச்செல்வம், லெனின், துரை, சரவணன், பாருக் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
- பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இதன் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் இருந்தது.
இப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருதார்.
அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது ரூ1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவை தலைவர் நெடுஞ்செழியன், எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்–செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.
ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, தினகர், மங்கை.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் பழனிவேல் நன்றி கூறினார்.
- பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
சீர்காழி:
சீர்காழியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சீர்காழியில் பழைய பேருந்துநிலையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரத தலைமை வகித்தார்.
நகர செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கண்டன உரையாற்றி பேசுகையில், சீர்காழி நகரில் பள்ளிகள், மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை எனவும், வரி மற்றும் உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைப்பதாக குற்றஞ்சாற்றி கண்டன உரை ஆற்றினார்.
தொடர்ந்து சீர்காழி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் நகர செயலாளர் பக்ரிரிசாமி, பேரவை செயலாளர் மணி, நிர்வாகிகள் ரவி சண்முகம், லாட்ஜ் மணி, அகணி மதியழகன், மருதங்குடி அலெக்சாண்டர், கொண்டல் விஜயன், மாலினி, லட்சுமி, அஞ்சம்மாள், வக்கீல்கள் தியாகராஜன், நெடுஞ்செ ழியன், பாலாஜி, அம்சேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், விஜயகுமார் உள்ளிட்ட பல கலந்து கொ ண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் பரணிதரன் நன்றி கூறினார்.
- வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
- மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மகாலெட்சுமி. இவரது வீட்டின் மேல் சிமெண்ட் சீட்டால் கூரை அமைத்துள்ளார்.
அதன் மேல் வெய்யிலின் தாக்கத்தை குறைப்பதற்காக தென்னை மட்டைகளை பரப்பியுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கூரை மேல் ஏறி அங்கு மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை லாவகமாக பிடித்தார்.
- மாணவி சுபானு சிவதாண்டவ நடனமாடி பெருமை சேர்த்தார்.
- உற்சாக வரவேற்பளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.
சீர்காழி:
மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது.தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம், உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,
காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு பங்கேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடன ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி–சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.
மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
காசி தமிழ் சங்கமம் முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த சுபானுவை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.
- உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
- மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.
சீர்காழி:
சீர்காழியில் திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு.குமார், செல்ல. சேது. ர விக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இராம.இளங்கோவன், ஜி.என்.ரவி, மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், நகர செயலாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம். கல்யாணம், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினருமான நிவேதா.முருகன் பங்கேற்று, புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும், கட்சியில் புதிதாக அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
20 ஒன்றியங்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக பேராசிரியர் அன்பழகன் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், செல்வமுத்துக்குமார், விஜயேஸ்வரன், முத்து குபேரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
நிறைவில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி நன்றிக் கூறினார்.
- அபிநயாவுக்கு காலில் எஸ்.இ.எல். என்ற அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டது.
- அபிநயா சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன்நகரை சேர்ந்தவர் முத்தழகன். அவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (வயது 17) என்ற மகனும், அபிநயா (வயது 13) என்ற மகளும் உள்ளனர். ஆதித்யா 12-ம், அபிநயா சீர்காழியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்.
முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்து விட்டார். இதனால் கனிமொழி வயல்வேலைக்கு சென்று குழந்தைளை காப்பாற்றி வந்தார்.
இந்த சூழ்நிலையில் அபிநயாவுக்கு காலில் எஸ்.இ.எல். என்ற அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாத நிலையில் அபிநயாவின் இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் பதறிபோன அவரது குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்காக நேற்று மாலை சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா மருத்துவ செலவு செய்ய முடியாமல் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இந்நிலையில் தன்னை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் அவரது தாய் கனிமொழி கூறுகையில், கூலி வேலை செய்து எனது மகன், மகளை காப்பாற்றி வந்துள்ளேன். தற்போது அபிநயாவுக்கு மருத்துவ செலவு அதிகம் ஆகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.






