என் மலர்
மதுரை
- தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற 15-ந்தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். ஜனநாயக முறையில் பா.ஜ.க.வில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 கோடி இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சியிலும் இப்படி ஜனநாயக முறையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதில்லை.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கருத்தை மத்திய அரசுக்கு எதிராக ரெயில் விபத்தில் பரப்பி வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திட்டமிட்டு இதனை செய்து வருகின்றனர். மெரீனாவில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதுபற்றி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரீனா சம்பவத்தை மறைக்க தி.மு.க. ரெயில் விபத்தில் நாடகமாடி வருகிறார்கள்.
ரெயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சி நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புல்லட் ரெயில் இன்னும் ஒரு வருடத்தில் வர உள்ளது. ரெயில் நிலையங்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் ஏன் வந்தோம் என இருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.
ரெயில் விபத்து குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் ஒட்டு மொத்த ரெயில்வேயும் வேலை செய்யவில்லை என தி.மு.க. இந்தியா கூட்டணி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மெரினா நிகழ்ச்சியின் போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
மெட்ரோ ரெயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், ஆம்புலன்ஸ் இல்லாமல் 5 பேர் இறந்தார்கள். இதற்காக நாம் ஒரு தனி விசாரணையை நடத்த தேவையில்லை. ரெயில் விபத்தில் என்.ஐ.ஏ. விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள். தி.மு.க.வின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சியாகவே இருந்திருக்கிறது.
பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்தி உள்ளனர். எந்தப்பக்கம் சென்றாலும் மனமகிழ் மன்றங்கள் தான் உள்ளன. போதைப்பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் தலையில் வரி மேல் வரி கட்டண உயர்வை விதித்துள்ளனர்.
விஜய் வருகிற 27-ந்தேதி மாநாடு நடத்துகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவருடைய செயல்பாடு, கொள்கைகளை பொறுத்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். நடிகர், நடிகை என பிரித்து பார்க்க விரும்பவில்லை.
விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என மக்கள் கேள்வி கேட்டார்கள். நாங்களும் கேள்வி கேட்டோம். அதனால் அவர் விஜயதசமி, ஆயுதபூஜைக்கு வாழ்த்து சொல்லியிருப்பார். அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என்ற திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.
- ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.
தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், " விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுதான் மது ஒழிப்பு மாநாட்டையே நடத்தினார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேலும் கூறியதாவது:-
திமுக செலவில் விசிக மாநாட்டை நடத்திய பெருமை திருமாவளவனை சேரும்.
மாநாட்டிற்கான அனைத்து செலவுகளையும் அமைச்சர்கள் பங்கெடுக்க சொல்லி திமுக போட்ட மைதானம், திமுக போட்ட மேடை, திமுக போட்ட சேர்கள் என திமுக செய்த செலவில் விசிக தோழர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு சேரும்.
ஒரே கல்லிக் இரண்டு மாங்காய் என்ற பழமொழி திருமாவளவனுக்கே பொருந்தும்.
திமுக அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு எதிராக எல்லா தீர்மானமும் போடுங்கள் என்று முதல்வர் முதலமைச்சர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- மக்கள் பிரச்சனைகளை ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேசுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
மதுரை:
தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
அண்ணா தலைமை தாங்கிய தி.மு.க. இன்றைக்கு கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
தி.மு.க.வில் எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு ஏன் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. தி.மு.க. கருணாநிதி குடும்ப சொத்தாக மாறி விட்டது. துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க. தொடங்கிய வரலாறு தெரியுமா? எப்போதுமே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களை பற்றி சிந்திப்பது இல்லை. மக்கள் பிரச்சனைகளை ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பேசுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.
புரட்சி தலைவி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பான முறையில் ஆட்சியை தந்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று தி.மு.க.வோடு சேர்ந்து கங்கணம் கட்டி செயல்பட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்றவர்கள். இவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தது மட்டுமின்றி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க.வை எதிர்த்து அவர்கள் அனைவரும் மண்ணை கவ்வி விட்டனர்.
இப்போது ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுக்கு ஒருபோதும் அ.தி.மு.க.வில் இடமில்லை.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பொதுவுடமை பேசும் அதன் கூட்டணி கட்சிகள் தி.மு.க. அரசை கண்டிக்க தவறிவிட்டன. ஆனால் அ.தி.மு.க. மட்டுமே உண்மையான மக்களுக்கு பாடுபடும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க., வெற்றி பெறும்.
- தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன.
மதுரை:
மதுரையில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அண்ணாவால் வளர்ந்த கட்சி, எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று உதயநிதியிடம் சென்றுள்ளது. கலர் கலராக வண்ணம் தீட்டிய ரெயில்களை இயக்கி மக்களிடம் பணம் சுரண்டும் அரசாக மத்திய அரசு உள்ளது. அதைக் கண்டிக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க., வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜகவுடன் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்கையில், "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. அப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு பகுதியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து தொடர்ந்து மக்களின் மீது வரிச் சுமைகளை ஏற்றி வருகிறது. தற்போது ஆண்டு தோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வினை மக்கள் மத்தியில் திணித்துள்ளது. இது மட்டுமல்ல மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் அதிகரித்துவிட்டன. ஆனால் முதலமைச்சர் இதுபற்றி எதுவும் கவலைப்படாமல் தனது தந்தை பெயரில் பூங்கா திறப்பதை சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வர வாக்களித்த மக்கள் மீது வரிக்கு மேல் வரியை போட்டு வருகிறார். வரிக் குதிரையின் உடம்பில் உள்ள வரியை விட தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியே அதிகமாக உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. இதனை தான் கவர்னர் ஆர்.என்.ரவி தெளிவாக கூறியிருக்கிறார். முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பு இனிப்பு மிட்டாய்கள் தான் விற்கப்படும். ஆனால் தற்போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பிள்ளைகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க கூட பெற்றோர்கள் அஞ்சுகிற சூழ்நிலையை தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர். அவரைப் பற்றி இப்போது பேசுவது பொருத்தம் அல்ல. நடிகர் விஜய் இப்போதுதான் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மாநாட்டின் போது தான் அவரது கொள்கை கோட்பாடு பற்றி தெரியும். அப்போது தான் அவரது கட்சியை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விஜய்யின் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதை மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஒவ்வொரு இடங்களிலும் உரிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எத்தனை பேர் அங்கே அனுமதிக்கப்பட வேண்டுமோ அத்தனை பேரை மட்டுமே அனுமதித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால் இதுபோன்று கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.
- சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துசாமியின் மகன் விவேக். இவருக்கும் உமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
உமா வீட்டை விட்டு விவேக்குடன் சென்றதால் மனவிரக்தியடைந்த அவரது கணவர் அய்யனார் கடந்த சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கேலி பேச்சுகளுக்கு ஆளானார்.
இதனால் ஆத்திரமடைந்த அய்யனார், நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி, அவரது மனைவி தவமணி, பேரன் மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அய்யனார் தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.
இதுகுறித்து சிறுவனின் தாய் அன்பரசி கொடுத்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்.
- மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை:
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ஒருவருக்கு செல்போன் வாயிலாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதேபோல் பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி காம்பஸ் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதில் வேலம்மாள் பள்ளி அருகிலேயே மருத்துவக்கல்லூரியும் அமைந்துள்ளது.
அடுத்தடுத்து வந்த தொடர் மிரட்டலையடுத்து மூன்று பள்ளிகளுக்கும் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் 6 தனியார் பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்பேரில் மேற்கண்ட அந்த பள்ளிகளுக்கும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாநகரில் அதிகாலையில் செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் 9 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, யாராவது வதந்தியை பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது வரை மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தொடர்பான எந்தவொரு பொருட்களும் கிடைக்கவில்லை. மிரட்டல் விடுத்த செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த பள்ளிகளுக்கு இன்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் சென்றிருந்தனர். தகவல் கிடைத்ததும் பள்ளிகளுக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
- பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர்.
- வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மதுரை:
துபாயை சேர்ந்த முகமது யூசுப், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் என் மனைவி இந்தியாவில் இருந்தார். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் என் மனைவியை சந்தித்து வெளிநாடுகளில் செயல்படும் தங்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய என் மனைவி, பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் ரூ.10 கோடி வரை செலுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியதை போல பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மோசடி நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்பாவி பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர். அந்த சொத்துகளை முடக்கவும், பணத்தை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான வழக்கின்பேரில் அவர்களின் சொத்துகளை முடக்குவதற்கு தமிழக உள்துறை செயலாளர் 2 மாதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களின் சொத்துகளை முடக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
- கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
- சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சார்ந்த பாஜக தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி கோவிலுக்கு திண்டுக்கல் தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவதாக வலைத்தளங்களில் செல்வகுமார் தவறான தகவல் பரப்பி வந்தார். வதந்தி பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் பி செல்வம் மீது கோவில் நிர்வாகம் புகார் அளித்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் செல்வகுமார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வகுமாருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
உண்மை தன்மையை ஆராயாமல் கருத்து பதிவிட்டதாக சமூக ஊடகங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
செல்வகுமார் தனது செல்போனை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்தை நீக்க வேண்டும்.
தொடர்ந்து இதுபோல் நடந்துகொண்டால் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்.
சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கடும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
- ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம்.
- இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தவிரடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர். கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு. ஊதியம், பராமிரிப்பு போக மீதம் உள்ள தொகை எவ்வளவு? எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவிலில் 12 குருக்கள், 19 உதவி குருக்கள் பணிகள் இருக்க வேண்டும். ஆனால் 2 குருக்கள், 7 உதவி குருக்கள் பணியில் உள்ளனர். ஆண்டிற்கு 100 கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்துவதில்லை எனக் கூறியிருந்தார்.
நீதிபதிகள் விசாரணையின்போது இந்து அறநிலைத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. வசூல்ராஜா வேலைகளை மட்டுமே செய்கின்றன என கண்டித்தனர். அத்துடன் அடுத்த மாதம் 14-ந்தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
- சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
- பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:-
* தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது துளியும் இல்லை.
* தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல. விமர்சனங்களை பார்த்து பழகியவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்தவர் தான்.
* பணியில் ஒருவர் இறந்தால் கருணை அடிப்படையில் வழங்குவது போல தான் தி.மு.க. தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதுபோலத்தான் தமிழகத்தில் முதல்வராகவும் ஆகியிருக்கிறார்.
* உண்மைகளை சவுக்கு மீடியா ஏறக்குறைய 8 மாதங்கள் எடுத்துக் கூறியதன் காரணமாக தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.
* நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்த வகையில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மிக கவனமாக இருக்கின்றனர்.
* டிசம்பர் 2023-ல் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுகிறது. உடனடியாக இதை தடுக்கப்பட வேண்டும். தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதுபோல் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடுவடிக்கை எடுத்து இருந்தால் என்றால் 66 உயிர்கள் பலியாகி இருக்காது, இதுபோன்ற பல உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.
- போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசின் சட்டத்தில், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல்.
பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிம்னற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.
போதைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குட்கா பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தில், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






