என் மலர்
மதுரை
- மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
- அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார்.
விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மோடியை வரவேற்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை செல்கிறார். மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஒருவேளை ஹெலிகாப்டர் பயணத்திற்கு உகந்த வானிலை இல்லாத பட்சத்தில் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வதற்கும் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை வரும் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். பிரதமர் மோடியும் மதுரை விமான நிலையத்தில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்கிறார். மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வரும் போது ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் 1.30 மணிக்கும் விமானத்தில் மதுரை வருகிறார்கள்.
இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முடியாத நிலையில் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி வரும்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் மதுரை விமான நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் 2 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து மோடி பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் மோடி சந்திப்புக்கு பிறகு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரமான மதுரையில் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தனித்தனியாக சந்தித்து பேசுவது அ.தி.மு.க.வின் அரசியல் நகர்விலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டதாக தகவல்.
- போலீசார் மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
மதுரை :
மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார். மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதி கடந்த 8-ந் தேதி இரவு இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர். அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
- காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு
மதுரை:
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
- கார் மீது வேன் மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.
- மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் முனியாண்டி (வயது56). இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். முனியாண்டி தனக்கன்குளம் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து வேடர் புளியங்குளத்திற்கு காரில் சென்றார்.
அப்போது ஆவியூரில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கொரியர் வேன், கார் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்து முனியாண்டி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சர்வதேசப் போட்டியில் மேலூர் மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
- சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி, விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் வர்ஷினி டெல்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற அவர் தனது சொந்த கிராமத்திற்கு இன்று வந்தார். அவரை வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் கிராம மக்கள் வரவேற்றனர்.
அப்போது பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, அவருக்கு மாலை அணிவித்தனர். வர்ஷினி அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார். அவர் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். தற்போது அவர் மதுரை மீனாட்சி கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் கால் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், பயிற்சியளித்த ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- மின் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் கூடுதல் கவுண்டர் திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
- மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அவனியாபுரம்
மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை கட்டுவதற்கு இப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்றால் அங்கு ஒரு கவுண்டரை மட்டும் திறந்து வைத்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் மின்சார அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள மக்கள் ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு இந்த மின்சாரத்தை கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது.
எனவே கூடுதல் கவுண்டர்களைத் திறந்து உடனடியாக கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
- சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணியையும், அவனியா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி மற்றும் நவீன வகுப்பறையை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு டேபிள், சேர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வகுப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள் இது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளில் மக்களின் 10 கோரிக்கைகள நிறைவேற்றும் வகையில் ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டுமென்றும், கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையான நிலையூரில் அரசு கைத்தறி கூடம் வேண்டும் என்றும், அதேபோல் நாகமலை புதுக்கோட்டையில் சிப்காட் அமைக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை? மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வரும் தேர்தல் காலங்களில் தி.மு.க. தோல்வி தழுவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியசெயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், வட்ட செயலாளர்கள் ஜெய கல்யாணி, நாகரத்தினம், தவுடன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார்.
திருமங்கலம்
சென்னை பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் அதியப்பன். இவரது மனைவி கனகரத்தினம் (வயது65). இவர் பார்வையற்றவர். இவருடைய சகோதரி சந்திரபிரபா. அவரது கணவர் பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாததால் கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் போலியான ஆவணம் தயாரித்து நகையை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த கனகரத்தினம் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கனகரத்தினம் உறவினரான பாலமுருகன், அவரது மகன்கள் பிரதீப், வினித். இவர்களின் நண்பர் வினோத் ஆகிய 4 பேர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே அரசு பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று குறைகளை கேட்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் கூடுதலாக 2 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் திருமங்கலம் வட்டார கல்வி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வட்டார கல்வி மையத்தில் நேரில் சென்று இது தொடர்பாக கேட்டார். இதைத்தொடர்ந்து உடனடியாக புதிய ஆசிரியர்களை நியமிக்க ஆணையை பெற்று திருமங்கலம் அருகே சித்திரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆணையை வழங்கினர்.
தொடர்ந்து ஆசிரியர்கள் 6,7,8-ம் வகுப்பிற்கு நிரந்தர பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான கட்டிடங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதற்கு இடையே திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட அ.வலையப்பட்டி கிராமத்தில் மழைக்கு சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்றார். அப்போது வலையபட்டி உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மழையால் வீடு இழந்த வர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அரிசி மற்றும் காய்கறி, உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, யூனியன் சேர்மன்லதா, ஜெகன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சிங்கராஜ்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.
- மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று (10-ந் தேதி) வரை 3 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி 6 ஊர் சப்பரங்கள் அம்மாபட்டியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது பரவசப்படுத்தியது. இந்த திருவிழா முத்தாலம்மன் கோவில் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு அம்மாபட்டியை தவிர மற்ற 6 கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் சப்பரத்தை இரவு, பகல் பாராது செய்து வந்தனர். வண்ண, வண்ண காகிதங்கள், மூங்கில் கொண்டு சப்பரத்தை அலங்கரித்தனர்.
ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை இருந்தது.கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் தலை சுமையாகவே சுமார் 2 கிலோமீட்டர் அம்மாபட்டிக்கு சுமந்து கொண்டு வந்தனர்.
கிளாங்குளம்,சத்திரப்பட்டி,சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது. அம்மா பட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டு இருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமத்துக்கு திரும்பினர். தொடர்ந்து சப்பரங்கள் அவர்கள் கிராமத்திற்கு திரும்பியது.பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர்களை, வடம் பிடித்து,அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் தங்கள் தலை சுமையாக தூக்கி வருவது சிறப்பாகும்.இந்த சப்பர திருவிழாவை பார்த்து,அம்மன்கள் அருள்பெற வேண்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
தொடர்ந்து மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு சமுகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒன்றுமையை திருவிழாவின் மூலம் வெளிபடுத்தினார்கள்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மோப்பநாய்கள் உதவியுடன் விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள், விமான நிலைய உள்வளாகத்திற்குள் நேற்று முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர், தனி விமானத்தில் மதுரை வருகிறார்.
மோடியின் வருகையை தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 2-வது நாளாக நேற்றும் கூட்டம் நடந்தது.
சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி ஜிதேந்திரா சிங் பாக்சி தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், விமான நிலைய இயக்குனர் பாபுராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேசுவரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோப்பநாய்கள் உதவியுடன் விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். அங்கு வரும் வாகனங்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிப்படுகின்றன.
விமான நிலையத்தின் வெளி பகுதிகளான கார்பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள், விமான நிலைய உள்வளாகத்திற்குள் நேற்று முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 12-ந்தேதியில் இருந்து வழக்கம்போல், பார்வையாளர்கள் உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
- இந்த கோவிலில் 150 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைந்து உள்ளது.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்". ஆனால் கோவில் வாசலில் நின்று ராஜகோபுரத்தை பார்க்க முடியாத நிலையாக கோவிலின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட சுப்பிரமணிய சுவாமி கோவிலானது திருப்பரங்குன்றத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கம்பீரமாக 150 அடி உயரத்தில் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்து உள்ளது.
அதில் நியான் ஓம் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரங்களில் ஓம் விளக்கு ஒளிருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு கோவிலின் முன்மண்டபத்தின் மேல்புறமான சாளகரத்தில் முதல் படைவீடு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம் என்ற எழுத்து வடிவமும், ஓம்முருகா என்று எழுத்தும் கொண்டு எல்.இ.டி.யில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானோர் கோவிலுக்குள் செல்லும்போதும், சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலைவிட்டு வெளியே வரும் போதும் கோவில் வாசலில் நின்று தலைமேல் இரு கைகளை தூக்கி ராஜகோபுரத்தை நோக்கி வணங்குவார்கள்.
ஆனால் தற்போது கோவிலில் பெயர்பலகை வைக்கப்பட்டு இருப்பதால் கோவிலின் வாசலில் நின்று தரிசனம் செய்யும் போது ராஜகோபுரம் தெரியவில்லை. ஆகவே கோடி புண்ணியமான கோபுர தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகிறார்கள்.. கோவிலின் ராஜ கோபுரத்தின் வளாகத்தில் உயரமான இடத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி மிகுந்த பாதுகாப்புடன் ஒளிரும் பெயர்பலகை வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் சுரேஷ் கூறும்போது:- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என்று வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்காக கோவில் இருக்கும் இடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கோவில் ஸ்தானிக பட்டர்களின் கருத்து கேட்டு ஒளிரும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவில் வாசலை விட்டு சற்று தூரத்தில் சன்னதி தெருவில் நின்று பார்த்தால் கோவிலின் ராஜகோபுரம் தெரியும் என்றார்.






