என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாயார் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினம், புலவர் சங்கரலிங்கம் எழுதிய சர்தார் வல்ல பாய்படேல் வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், தொழிலதிபர்கள் பிரான்சிஸ் பாண்டியன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நூலினை தொழிலதிபர் நாகரத்தினம் வெளியிட்டார். அன்னை பாத்திமா கல்லூரி குழுமத்தலைவர் ஷா பெற்றுக்கொண்டார். இதில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.

    முடிவில் புலவர் சங்கரலிங்கம் நூல் ஏற்புரை மற்றும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார்.

    அப்போது இவருக்கும், அங்கு வேலை பார்த்த சிந்தாமணி கங்காநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாள், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை அவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளை கொலை செய்தது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்க்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல ங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டலம் 4-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள். இதில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜர் புரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    • கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • சாலை பள்ளங்களில் தேங்கியுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை விடப்பட்டது. சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி வருகிறது. மதுரை வைகை ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் சாலை பள்ளங்களில் தேங்கியுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மதுரை நகர் பகுதியில் பி.பி.குளம், செல்லூர், ஆணையூர், கூடல் நகர், தபால் தந்தி நகர், ராஜா மில் ரோடு, பழங்காநத்தம், புதூர், வசந்தநகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதற்கு சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மதுரையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை மற்றும் வீதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சில மாதங்களாகவே செல்லூர்-குலமங்கலம் மெயின் ரோடு குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் ஆனையூர், கூடல் நகர், கோசாகுளம், பார்க் டவுன், தபால் தந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது,

    கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் வீதிகளில் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட வீதிகள் மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    சிட்டம்பட்டி-16, கள்ளந்திரி-20, தனியா மங்கலம்-18, மேலூர்-23, சாத்தியாறு அணை-27, வாடிப்பட்டி-45, திருமங்கலம்-55, உசிலம்பட்டி-22, மதுரை வடக்கு-53, தல்லாகுளம்-46, விரகனூர்-34, விமான நிலையம்-58, இடையபட்டி-25, புலிப்பட்டி-19, சோழவந்தான்-24, மேட்டுப்பட்டி-24, குப்பனம்பட்டி-18, கள்ளிக்குடி-11, பேரையூர்-46, ஆண்டிப்பட்டி-37, எழுமலை-25.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 658 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    முல்லை பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 716 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது.

    வைகை அணையை பொருத்தவரை நீர்மட்டம் 69.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1012 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை நகர குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக 1,269 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை காரணமாக இன்றும் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்தபடி இருக்கிறது.

    • சிந்துபட்டி போலீசார் அனுசுயாதேவியை கைது செய்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தலைமறைவாக உள்ள வெள்ளையன் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை ஊராட்சிக்குட்பட்ட அழகுசிறை கிராமத்தில் அனுசுயா தேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று மதியம் பட்டாசு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கோபி, விக்கி, வல்லரசு, அம்மாசி, ரகுபதி கொண்டம்மாள் ஆகிய 5பேர் உடல் சிதறி பலியானார்கள். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

    நிவாரணத்தொகைக்கான காசோலையை அமைச்சர் பி.மூர்த்தி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில் இந்த விபத்து குறித்து சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பட்டாசு ஆலை உரிமையாளர் அனுசுயா தேவி, அவரது கணவர் வெள்ளையன், ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அனுசுயாதேவி நேற்று இரவு விக்கிரமங்கலம் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் சிந்துபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சிந்துபட்டி போலீசார் அனுசுயாதேவியை கைது செய்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளையன் பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
    • பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

    மோடியின் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.
    • ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி கோரிப்பாளையம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வழியாக ஊர்வலம் சென்று வருவார்கள்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    அந்த வீடியோவில், மதுரை கோரிப்பானையந்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வழியே தத்தனேரி மயானத்திற்கு சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மது அருந்திவிட்டு, கூச்சலிட்டும் மாணவிகளை அச்சுறுத்தியும், அதை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை அடித்து தாக்கி, அங்கிருந்த மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். மாணவிகள் அனைவரும் கல்லூரி முடிந்து வெளியே வரும்போது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து பயந்துபோய் மாணவிகள் மீண்டும் கல்லூரிக்குள் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதே போல் கடந்த 30-ந்தேதி தேவர் குரு பூஜை அன்று மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள், மோட்டார் சைக்கிள்களில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், அங்கிருந்த காவலாளிகளை தாக்கியதுடன் மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி கோரிப்பாளையம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வழியாக ஊர்வலம் சென்று வருவார்கள். இதே போல தத்தனேரி மயானத்திற்கு கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சவ ஊர்வலம் இந்த கல்லூரி வழியாக தான் செல்கிறது. எனவே இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக 'நிர்பயா நிதி' என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    எனவே அந்த நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் நிர்பயா நிதியின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உரிய பாதுகாப்பை பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். தமிழகத்தில் அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிப்பது அரசின் கடமை. ஆனால் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற கேள்வி எழுப்பினர்.

    பின்னர் இந்த வழக்கு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • டி.கல்லுப்பட்டி அருகே திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இந்த திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே அம்மாபட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    நேற்று நடந்த விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் அந்த கும்பல் 20 பவுன் நகைகளை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • மேலூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
    • இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணை தலைவர் குலோத்துங்கன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிடாரிப்பட்டி சுரேஷ், கொட்டாம்பட்டி யூனியன் என்ஜினீயர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை-ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மதுரை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் அடுத்து 4 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டகளில் கன மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சில இடங்களில் லேசான தூரல் மழை பெய்தது. இன்று மதுரையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி-கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

    இன்று காலை முதல் மதுரை நகர் மற்றும்புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தர விட்டார்.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. பிற்பகலுக்கு பின் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலோர பகுதிகளான ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதி களில் கடல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    அவ்வப்போது கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீன வர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் மதுரை வருகிறார்.

    அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மதியம் 2 மணி அளவில் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ் சேகர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.

    பின்பு பிரதமர் மோடி அங்கிருந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்திற்கு சாலை மார்க்கமாக காரில் சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, விழா முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு பிறகு வருகிறார்.

    அங்கு அவரை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழி அனுப்பி வைக்கிறார்கள். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதுமட்டுமின்றி மதுரை மாநகர் முழுவதும் முக்கியமான இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி மதுரையிலிருந்து காந்தி கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்தபடி இருந்ததால் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் வகையில் பிரதமரின் பயணம் மாற்றப்பட்டது.

    இதனால் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் கட்டைகளை வைத்து கட்டப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை நெடுகிலும் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்பாத்துறை வழியாக காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செல்ல அனைத்துவித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி காந்தி கிராமம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே கடவுப்பாதை உள்ளது. இதனால் பிரதமர் செல்லும் நேரத்தில் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

    மதுரை-திண்டுக்கல் இடையேயான ரெயில்வே போக்குவரத்தில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாற்றம் செய்யுமாறு திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்களின் இயக்கத்தில் பயண நேரம் இன்று மாற்றம் செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாக மதுரை வருகிறார்.

    • திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் பாரதிராஜா.
    • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் பாரதிராஜா (வயது35) இவருக்கு திருமணமாகி முகிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவிற்கும், அதே ஊரை சேர்ந்த சந்தனபாண்டி என்பவருக்கும் கோவில் திருவிழாவில் மைக் செட் போடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிக்கடி இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து பாரதிராஜா தலைமறைவானார். இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக தனது வக்கீல் மூலம் ஜாமீன் பெற்ற பாரதிராஜா நேற்று புதுப்பட்டிக்கு வந்தார். பின்னர் இரவு 9.30 மணியளவில் அங்குள்ள டீக்கடையில் அவரது நண்பர் சரவணக்குமார் என்பவருடன் பாரதிராஜா பேசிக் கொண்டிருந்தார்.

    தலைமறைவாக இருந்த பாரதிராஜா ஊருக்கு வந்திருப்பதை அறிந்த சந்தனபாண்டி தரப்பினர் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி டீக்கடையில் நின்றிருந்த பாரதி ராஜாவை சந்தனபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம்பட்ட பாரதிராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முன்னதாக அங்கு நின்றிருந்த சரவணக்குமாரையும் அந்த கும்பல் வெட்டியது. படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

    ×