என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் தொடர் கனமழை: சாலை பள்ளங்களில் தேங்கிய வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதி

    • கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • சாலை பள்ளங்களில் தேங்கியுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை விடப்பட்டது. சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி வருகிறது. மதுரை வைகை ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் சாலை பள்ளங்களில் தேங்கியுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மதுரை நகர் பகுதியில் பி.பி.குளம், செல்லூர், ஆணையூர், கூடல் நகர், தபால் தந்தி நகர், ராஜா மில் ரோடு, பழங்காநத்தம், புதூர், வசந்தநகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதற்கு சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மதுரையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை மற்றும் வீதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சில மாதங்களாகவே செல்லூர்-குலமங்கலம் மெயின் ரோடு குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் ஆனையூர், கூடல் நகர், கோசாகுளம், பார்க் டவுன், தபால் தந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது,

    கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் வீதிகளில் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட வீதிகள் மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    சிட்டம்பட்டி-16, கள்ளந்திரி-20, தனியா மங்கலம்-18, மேலூர்-23, சாத்தியாறு அணை-27, வாடிப்பட்டி-45, திருமங்கலம்-55, உசிலம்பட்டி-22, மதுரை வடக்கு-53, தல்லாகுளம்-46, விரகனூர்-34, விமான நிலையம்-58, இடையபட்டி-25, புலிப்பட்டி-19, சோழவந்தான்-24, மேட்டுப்பட்டி-24, குப்பனம்பட்டி-18, கள்ளிக்குடி-11, பேரையூர்-46, ஆண்டிப்பட்டி-37, எழுமலை-25.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 658 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    முல்லை பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 716 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது.

    வைகை அணையை பொருத்தவரை நீர்மட்டம் 69.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1012 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை நகர குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக 1,269 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விடிய விடிய பெய்த கனமழை காரணமாக இன்றும் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்தபடி இருக்கிறது.

    Next Story
    ×