என் மலர்tooltip icon

    மதுரை

    • அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளனர்
    • இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை.

    இதையடுத்து கொள்ளை யர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். மேற்கண்ட 4 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்களின் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.

    இன்று காலை கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலூர் பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை யடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் முக்கிய வீதிகள் மற்றும் நகர் பகுதியில் முழுவதும் தீவிரரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தில் வி.கள்ளப்பட்டி சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்

    கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையிலும், தொடர்மழை காரணமாகவும் அங்கன்வாடி மையத்தின் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது அந்த தண்ணீர் கழிவுநீராகி நோய் பரவும் மையமாக உருவெடுத்து உள்ளது.

    தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அருகில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

    அங்கன்வாடி மையத்தின் அருகிலே உள்ள நியாய விலைக் கடையும் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மூன்று மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. நியாய விலை கடை திறக்க முடியாத சூழல் இருப்பதால் தற்காலிகமாக நியாய விலை கடை தும்மக்குண்டு அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக உடை யாம்பட்டி, கரிசல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இப்பகுதியினர் தெரி வித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மாத காலமாக மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய கட்டிட பணிக்காக ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாற்று வேலைக்காக குடிநீர் குழாய் சின்டெக்ஸ் உடைக்கப்பட்டது.

    இக்கோவிலில் பக்தர்க ளுக்காக சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்ப டுத்திய பா.ஜ.க. விவசாய அணியின் மாநில துணைத்தலைவர் மணி முத்தையா கூறியதாவது:-

    ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் குளிப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர்.

    இப்பகுதி பக்தர்களுடைய வேண்டு கோளை ஏற்று பக்தர்கள் வசதிக்காக எனது சொந்த செலவில் திருப்பணியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைப்பு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துக் கொடுத்தேன்.

    இந்த தண்ணீர் தொட்டி மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி வநதனர்.

    தற்போது அதனை நிர்வாகம் இடித்து சேதப்படுத்தியுள்ளது.இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் இளமதி கூறும்போது, நாங்கள் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தவில்லை. இந்த தொட்டியை அன்னதான மண்டபத்தின் அருகில் விரிவாக கட்டப்போகி றோம். இந்த இடத்தில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு பணி ஆணையும் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.

    • மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

    ரவுடி கும்பல்

    அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜெய்ஹிந்த்புரம் முத்து பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

    இதையடுத்து கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் யார்? என்று விசாரித்த போது மதுரை ஆண்டாள்புரம் பழைய மீனாட்சி காலனியை சேர்ந்த கலையரசன் என்பவரின் மகன் பிரவீன் (வயது22), சுந்தர்ராஜபுரம் வி.வி.கிரி சாலையை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் தமிழரசன் (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    அவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி, கயிறு உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். அதுபற்றி விசாரித்த போது, அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிரவீனும், தமிழரசனும் ரவுடிகள் ஆவர். பிரவீன் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், தமிழரசன் மீது கொள்ளை முயற்சி, தாக்குதல், ஆயுதங்களுடன் திரிந்தது உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவர்களுடன் சிக்கிய சிறுவன் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு மட்டும் இருக்கிறது.

    தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு உகந்த மார்கழி மாதத்திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு்க்கான விழா இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி நாளை (6-ந் தேதி) அதிகாலை வரை நடைபெறும். அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.

    மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும்தான், பஞ்ச உலோகத்தினால் ஆன பஞ்சசபைக்குரிய 5 உற்சவர்கள் உள்ளனர். பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என பஞ்ச சபைக்கும் இத்திருக்கோவிலில் தனித்தனியாக உற்சவர்கள் உள்ளனர்.

    ஆருத்ரா விழாவையொட்டி நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பலக்கோல நடராஜர்), சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ மூர்த்திகள் 6-கால் பீடத்திலும், இதர 4 சபைகளுக்கான நடராஜர், சிவகாமி அம்மன் உற்சவர்கள் 100 கால் மண்டபம் என இரு இடங்களில், இந்த விழாவில் இன்று இரவில் எழுந்தருள்கிறார்கள்.

    அப்போது பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.

    நாளை, காலை பஞ்ச சபைக்குரிய 5 உற்சவ நடராஜரும், சிவகாமி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

    அபிஷேகத்திற்கான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வழங்க விரும்பினால், இன்று இரவு 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • 55 ஆண்டாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், மது விற்பனையை நம்பித்தான் ஆட்சி செய்கின்றன.

    மதுரை:

    பா.ம.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடந்தது. மாநில பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார்.

    கட்சித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மீனவர் பிரச்சினை, நதி நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரியும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை, மது ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பிறகு 2019-ம் ஆண்டு ஜப்பான் ஜைகா நிறுவன நிதி உதவியுடன் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை ஜைகா நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை. அதனால் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும். மதுரையோடு அறிவிக்கப்பட்ட மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே போட்டி நடக்கிறது. ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் பா.ம.க. போராட்டம் நடத்தியதால், அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார். தற்போது தி.மு.க. அரசிடமும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், தி.மு.க. அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திட கவர்னரிடம் அனுப்பப்பட்டும், அவர் ஏன் கையெழுத்திட மறுக்கிறார்? எனத்தெரியவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டம் நிறைவேற்றிய பின்பு 10-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தமிழக கவர்னரே பொறுப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் அந்த நிறுவனங்கள் தினமும் ரூ.200 கோடி சம்பாதிக்கின்றன.

    தமிழகத்தில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழகம் மதுவில் மூழ்கியுள்ளது. மதுவால் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறையை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் கூட்டி, போதை பொருள் குறித்து கண்டிப்புடன் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மிக மிக முக்கிய பிரச்சினையான போதை பொருள் விவகாரம் உருவெடுத்துள்ளது.

    இந்தியாவில் அதிக மது விற்பனை தமிழகத்தில்தான் நடக்கிறது. 55 ஆண்டாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், மது விற்பனையை நம்பித்தான் ஆட்சி செய்கின்றன. மது விற்பனை வருமானம் இல்லை என்றால் ஆட்சி செய்ய முடியாது என்பதுதான் திராவிட மாடலா? என்பது தெரியவில்லை.

    தி.மு.க. தேர்தலின் போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்குகிறார்கள். குறிப்பாக, நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, இதுபோன்று பல வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

    2026-ல் சட்டமன்ற தேர்தலில், பா.ம.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு முன்பு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான வியூகங்களை எடுப்போம். கூட்டணி தொடர்பான முடிவுகள் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எடுப்போம். தமிழகத்தில் அதிகம் இளைஞர்கள் இருக்கும் கட்சி பா.ம.க.. அதிக அளவில் இளைஞர்கள் கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பரபரப்பு அரசியல் ஒருபுறமும், பிரிவினை அரசியல் ஒருபுறமும் இருக்கின்றன. நாங்கள் நடுவில் நாகரிகமான அரசியல் செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அவர், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மதுரை நகருக்கு ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரிகளை உருவாக்கி, மழை நீரை சேமிக்க வேண்டும். இதேபோல் காவிரி, தாமிரபரணி, நம்பியாறு சீரமைப்பு திட்டங்கள் அறிவிப்போடு உள்ளது. அதையும் விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர்த்து மாற்றுக்கட்சியை மக்கள் விரும்புகிறார்கள்" என்றார்.

    • மதுரையில் ஜூனியர் பெடரேஷன் கபடி போட்டி நடந்தது.
    • அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    மதுரை

    உலககோப்பைக்கான இந்திய கபடி அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது.

    இதில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.

    லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2 நாட்களாக நடந்த லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று காலை ஆண்களுக்கான அரை இறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி ராஜஸ்தான் அணியை 40- 37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60- 42 என்ற புள்ளிகளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின.

    இறுதி போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா மாநில ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், உள்ளிட்ட பலர் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.

    ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஈரானில் நடைபெறும் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க்கில் பணம் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருபத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மினிவேனில் டீசல் நிரப்ப வந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் எலியாருஅ பத்தி டோல்கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் மினிவேனில் டீசல் நிரப்ப வந்த 2 வாலிபர்கள், தண்ணீர் குடிப்பது போல் நடித்து பெட்ரோல் பங்க் அலுவலக மேஜேயில் இருந்த ரூ.40 ஆயிரத்து 400 பணத்தை திருடி சென்று விட்டனர்.

    பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் வாலிபர்கள் பணம் திருடிவிட்டு, தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

    அதில் அவர்கள் மதுரை சாமநத்தத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக்(வயது29), சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் காமாட்சி(30) என்பது தெரியவந்தது.

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மினிவேனில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். மற்றொருவரான காமாட்சி அந்த வேனில் டிரைவராக இருந்துள்ளார். இருவரும் சம்பவத்தன்று வியாபாரம் செய்வதற்கு சென்றபோது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர் ராஜேஷ் கவனிக்காத நேரத்தில் பணத்தை திருடியது தெரியவந்தது.

    • ரெயில் விபத்தை தடுத்த வாலிபரை மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பாராட்டினார்.
    • ரெயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு, தண்டவாளத்தை செல்போனில் போட்டோ எடுத்து, ரெயில்வே கேட் ஊழியர் பீட்டர் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

    மதுரை

    சமயநல்லூர் - கூடல்நகர் பிரிவு ரெயில் பாதை அருகே, சுந்தரமகாலிங்கம் மகன் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி காலை 8 மணியளவில் வெளியே சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள ரெயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தண்டவாளத்தை செல்போனில் போட்டோ எடுத்து, ரெயில்வே கேட் ஊழியர் பீட்டர் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

    அதனைப் பார்த்த பீட்டர், இது தொடர்பாக சமயநல்லூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்த மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், ரெயில் விபத்தை தடுத்த சூர்யாவுக்கு ரூ. 5000 ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, சூர்யாவின் தந்தை சுந்தர மகாலிங்கம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
    • 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.

    திருப்பரங்குன்றம்

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு மற்றும் பல சரக்கு பொருட்களை மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் விமல், பெருங்குடி வசந்த், பிரபு, கார்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பழனிகுமார் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கரிசல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

    அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளா மல் கடந்த மாதம் 26-ந் தேதி தும்மக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கடையை அக்றறக்கோரி சிந்துப்பட்டி பொதுமக்கள் சார்பில் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்திருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு பள்ளி நிர்வாகம் சார்பிலும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் இன்று காலை திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் அந்தப்ப குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.

    • மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது.

    மதுரை

    மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் 5 பேர் தப்பிச்சென்று விட்டனர்.

    பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில், அவர்கள் பண்ணியான் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 21), திருநகர் நாகராஜ் மகன் ஆகாஷ் (21), சமயநல்லூர் சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர் (20), விக்ரமங்கலம், பெரியார் நகர் முத்தையா மகன் விஜய் (20) வில்லாபுரம், மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சோலார் சரவணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.

    ×