என் மலர்
மதுரை
- மதுரை ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 ரெயில்களை நிறுத்தும் வகையில் நடைமேடை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- ரெயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரெயில் நிலையத்தில் அனைத்து வழித்தடங்களிலும் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதற்கான வேலைகளில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் என்ஜின்களும் பயன்பாட்டில் உள்ளன.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை கோட்டத்தில் மார்ச் மாதத்திற்குள் தடையற்ற ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மதுரை ரெயில் நிலையத்தில் அனைத்து பணிகளையும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை-வாஞ்சிமணியாச்சி-துாத்துக்குடி இரட்டை ரெயில் பாதை பணிகளில் மதுரை-திருமங்கலம், மீளவிட்டான்- துாத்துக்குடி பிரிவுகள் தவிர மற்ற பகுதிகளில் இரட்டை ரெயில் பாதைப் பணிகள் முடிந்து அங்கு ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
மதுரை- திருமங்கலம் பிரிவில் 2-வது இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்து விட்டது. எனவே அங்கு இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
மதுரை ரெயில் நிலையத்தில் 9, 10-வது தண்டவாள பகுதி, போடி ரெயில் பாதை பகுதியில் உள்ள ரெயில் பெட்டிகள் நிறுத்தும் இடம் மற்றும் தண்டவாள மின் மயமாக்கல் பணிகள், ரெயில் பெட்டி பராமரிப்பு மைய தண்டவாளங்களில் மின்மயமாக்கல், 8,9-வது தண்டவாளத்தில் ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் அமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை ரெயில் நிலைய 10-வது ரெயில் பாதை 445 மீட்டர் நீளத்தில் உள்ளது. அது தற்போது 610 மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல 1-வது நடைமேடை 617 மீட்டராகவும், 2, 3-வது நடைமேடைகள் 625 மீட்டராகவும், 4, 5-வது நடைமேடைகள் 617 மீட்டர் நீளமாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
இதுதவிர ரெயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரெயில் பாதை, ராமேஸ்வரம் செல்லும் ரெயில் பாதையில் ரெயில் பெட்டிகள் 'ஷண்டிங்' செய்யும் வசதி, கூடல்நகர் செல்லும் ரெயில் பாதையில் வழக்கமான போக்குவரத்து பாதிக்காமல் ரெயில் பெட்டிகள் 'ஷண்டிங்' செய்ய 60 மீட்டர் நீளத்திற்கு ரெயில் பாதை நீட்டிப்பு, ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்குள் 10 ரெயில்களை நிறுத்தும் வகையில் பாயிண்ட்களை மாற்றியமைத்தல் போன்ற பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதனால் கூடல்நகர், திருப்பரங்குன்றம், சிலைமான், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களை மதுரைக்கு வெளியே நிறுத்தாமல், ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்கு கொண்டு வரும் வசதி ஏற்படுத்தப்படும்.
இதன் மூலம் மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும். மதுரை ரெயில் நிலையத்தில் மேற்கண்ட பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- செம்மினிபட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- கிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சியில் விளை நிலங்கள் உள்ள பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாககிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ., வரை மனுக்கள் கொடுக்கப்பட்டு விசா ரணை நடந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அட்டைப்பெட்டி கம்பெனி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், நிலத்தடி நீர் பாதிக்காது என்பதாலும் தொடங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அட்டைப்பெட்டி கம்பெனியினர் இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினர். இது குறித்து வாடிப்பட்டி போலீசில் பொதுமக்கள் புகார் செய்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவு தங்களுக்கு இதுவரை வரவில்லை என்றும், மீண்டும் அட்டைப்பெட்டி கம்பெனி பணியை தொடங்குவதை கண்டித்து நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு செம்மி னிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மண்டல துணை தாசில்தார் தமிழ்எழிலன், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ.வுக்கு மேல் முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
- ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது.
- தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மதுரை
மதுரை ெரயில்வே காலனி செம்மண் திடலில் ெரயில்வே பாதுகாப்பு படை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 31-வது கபடி போட்டி இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
மதுரை கோட்ட பாதுகாப்பு படை அதிகாரி அன்பரசு பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு கொடியசைத்து கபடி போட்டியை தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.
ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் இன்று லீக் சுற்றுகள் நடக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.
இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மதுரை ெரயில்வே காலனி சிமெண்ட் திடலில் நாளை(4-ம் தேதி) இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இதில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளார்.
- மதுரை அருகே ரூ.7 லட்சம், 10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர்.
- கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் கற்பகநகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் நாகேஸ்வரி(வயது23). இவருக்கும் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் மகன் உதயசங்கர்(28) என்பவருக்கும் கடந்த 10-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகைகள், ரூ. 50ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.3லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை நாகேசு வரியின் குடும்பத்தினர் வழங்கி யுள்ளனர். இந்த நிலையில் 25-7-2022 அன்று மேலும் 10 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி உதயசங்கர் தனது மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
உதயசங்கருக்கு ஆதர வாக அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதுபற்றி கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் உதயசங்கர், அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதயசங்கர் பட்டதாரி என்றாலும் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை ராஜவேலு ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தாய் மீனா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட சிலரை மட்டும் பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர்.
- பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த நித்யா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 9.9.2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளர் பணி நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி நான் அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தனர். குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நான் கல்வி சான்றிதழ்களுடன் சென்றிருந்தேன். என்னுடைய கல்வி சான்றிதழ்களை அங்கு பெற்றுக் கொண்டனர். என்னை போலவே அங்கு வந்த பலரிடமும் நேர்முகத் தேர்வை நடத்தாமல் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அந்த பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர். நேர்முக் தேர்வே நடத்தாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் அளித்து இருப்பது ஏற்புடையதல்ல.
எனவே அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சுந்தர் ஆஜராகி, விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் தேர்வு நடத்தாமல் முறை கேடாக பணி நியமனம் அளித்திருப்பது சட்ட விரோதம். அந்த பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது மக்கள் கொடுத்த வெற்றி இல்லை.
- 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டு காலம் ஜெயலலிதா சிறப்பான ஆட்சி வழங்கினார்.
மதுரை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமான ஆட்சியாக உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். மருங்காபுரி, மதுரை கிழக்கு, ஆர்.கே. நகர் உள்ளிட்டவற்றில் நடந்த இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தான் ஜெயித்தன.
மற்ற இடங்களில் ஆளும் கட்சி ஜெயித்தது. தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது மக்கள் கொடுத்த வெற்றி இல்லை. 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் 5 ஆண்டு காலம் ஜெயலலிதா சிறப்பான ஆட்சி வழங்கினார். அதன்பின் அ.தி.மு.க.வினரின் 4 ஆண்டுகால ஆட்சி மிகவும் மோசமானதாக இருந்தது. எனவே அவர்களை பொது மக்கள் ஒதுக்கி வைத்தனர்.
நல்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அதைவிட இது மோசம் என்ற அளவில்தான் தி.மு.க.வின் ஆட்சி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தை ஜாலம் மட்டுமே செய்கிறார். அனைத்து துறைகளிலும் தி.மு.க. ஊழல் செய்து வருகிறது. இது பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் நீலநிற அட்டை வழங்கப்படுகிறது. அதுவும் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2-வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய் கிழமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் முன்னிலையிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 10-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி, நீல நிற வேலை அட்டை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மதுரை-திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
- பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை
தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மது ரைக்கும் கன்னி யாகு மரிக்கும் இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை- திருமங்கலம் இடையே உள்ள 17 கிலோமீட்டர் தொலைவுக்கு 2-வது அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. மதுரை-திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில்பாதையின் உறுதித் தன்மையை ஆய்வுசெய்ய நாளை(3-ந்தேதி) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வருகின்றனர். நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மதுரை- திருமங்கலம் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் தண்டவாளத்தை ஒட்டி குடியிருக்கும் பொதுமக்கள் ெரயில் பாதையை கடக்கவோ அல்லது நெருங்கவோ முயற்சிக்க வேண்டாம் என மதுரை ரெயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
- முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மனுநீதி நாள் முகாம் 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
- மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.
மதுரை
மதுரையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் நேரில் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.
அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் ஆவண செய்வார். இதனால் திங்கட்கிழமை நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.
இந்தநிலையில் ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' என்ற திட்டத்தின் கீழ் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வு செய்கிறார். அதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் நிர்வாக பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் 6-ந்தேதி திங்கட்கிழமை ஆகும். அன்றைய தினம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோ சனை நடத்த உள்ளார்.
எனவே கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் மனு நீதி நாள் முகாம் வருகிற 6-ந்தேதி வழக்கம்போல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் 6-ந்தேதி நடக்கவிருந்த மனுநீதிநாள் முகாம் மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 6-ந்தேதி நடப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம், அடுத்த நாள் (7-ந்தேதி) நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆஸ்பத்திரிகளுக்கான புதிய கட்டிடம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய மந்திரியை 30 முறைக்கும் மேலாக சந்தித்து பேசியுள்ளோம்.
மதுரை:
தமிழக அரசு, அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு கட்டண வார்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. நவீன வசதிகளுடன் இங்கு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி மதுரை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 8 வார்டுகளும், அரசு புதிய மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 8 வார்டுகளும் உள்பட மொத்தம் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் கட்டண வார்டுகள் திறந்து வைக்கப்பட்டன. மதுரையில் இன்றைக்கு 16 வார்டுகளை திறந்து வைத்துள்ளேன்.
அரசு மருத்துவமனை கட்டண வார்டில் குளிர்சாதன வசதி, கழிவறை, ஹீட்டர், தொலைக்காட்சி, நோயாளிகள் படுக்கை, உதவியாளர் படுக்கை ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,200 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். சொகுசு அறைகளுக்கு ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படும்.
3-ம் பாலின அறுவை சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது. தென்னிந்தியாவில் அதிகப்படியான ஆபரேஷன்கள், மதுரை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய்கா பங்களிப்புடன் அமைய உள்ள மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிதிலம் அடைந்த நிலையில் உள்ளன. ஒருசில ஆஸ்பத்திரிகள், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. எனவே தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆஸ்பத்திரிகளுக்கான புதிய கட்டிடம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டிட பணிகள் தொடங்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமாக கடந்த மாதம் ஜப்பான் சென்று ஜெய்கா நிறுவன துணைத்தலைவரை சந்தித்தோம். அப்போது போதிய நிதி ஆதாரங்களை வழங்குவது தொடர்பாக பேசி உறுதிப்படுத்தி வந்துள்ளோம். இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டபோது மதுரைக்கு மட்டும் ஜெய்கா நிதி உதவியுடன் கட்டிடம் எழுப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசி நிதி ஆதாரங்களை பெற வேண்டியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய மந்திரியை 30 முறைக்கும் மேலாக சந்தித்து பேசியுள்ளோம். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு டிசம்பரில் விடப்படுகிறது. அதன் பிறகு அங்கு பணிகள் தொடங்கும். வருகிற 2028ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கட்டுமான பணிகள் முடியும்.
அரசு மருத்துவமனை கட்டண வார்டுகள் குளிர்சாதன வசதியுடன் கூடியவை. தனியார் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் மதுரை மருத்துவமனையில் ரூ. 1,200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவர், ராஜாக்கூர் துணை சுகாதார மையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ரூ.1.33 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராஜாக்கூர், குமாரபுரம், எஸ்.கீழப்பட்டி, பெரிய பூலான்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். பின்னர் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
- மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
- சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.
மதுரை:
மதுரை மத்திய ஜெயிலில் பொதுமக்கள் பங்களிப்புடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள், மத்திய ஜெயிலுக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை கூடல் புதூர், ரயிலார் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், மத்திய ஜெயிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், "நான் மதுரை மத்திய ஜெயில் நூலகத்துக்கு 300 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்க விரும்புகிறேன். எனக்கு 92 வயது ஆகிறது. எனவே புத்தகங்களுடன் நேரடியாக ஜெயிலுக்கு வர இயலவில்லை. ஜெயில் அதிகாரிகள் நேரில் வந்து புத்தகத்தை வாங்கி சென்றால், பெரு மகிழ்ச்சி அடைவேன்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் நேரடியாக கூடல் புதூருக்கு சென்று பெரியவர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து 300 புத்தகங்களையும் பெற்று வந்தனர்.
முதியவரின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவரிடம் "உங்களை நெகிழ வைத்த மனிதர்கள் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-
சிறைச்சாலைகளில் கைதிகள் படிக்கும் வகையில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக சிறைத்துறைக்கு பலரும் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த 92 வயதான பெரியவர் பாலகிருஷ்ணன் என்பவர், தனது சேகரிப்பில் இருந்து 300 புத்தகங்களை சிறைத்துறைக்கு வழங்கி உள்ளார்.
வாழ்நாள் எல்லாம் சேகரித்து வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு பகுதியை, சிறை கைதிகளின் நலனுக்காக வழங்கிய அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. உண்மையிலேயே இந்த செய்தியை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்ற வேண்டும்.
நான் மிசா காலத்தில் அரசியல் கைதியாக ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு அங்கு உள்ள நூலகத்தில் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரசியல், வரலாற்றைத் தாண்டி நிறைய நாவல்களை படித்து அறிந்தேன். சிறைச்சாலை தனிமையை போக்க நல்ல நண்பன் புத்தகங்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் பாராட்டு குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை மத்திய சிறைக்கு 300 புத்தகங்கள் வழங்கியதை கேள்விப்பட்டு, தமிழக முதல்வர் என் பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அது எனக்கு மிகவும் பெருமை தருகிறது. இன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்பதால் அவருக்கு நன்றி சொல்லவும், பாராட்டவும் கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார்.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
- இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.
இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மனம் உடைந்தார். டாக்டர்கள் ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன்படி இன்று அதிகாலை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வார்டுக்கு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






