என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 ரெயில்கள் நிற்கும்"

    • மதுரை ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 ரெயில்களை நிறுத்தும் வகையில் நடைமேடை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • ரெயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரெயில் நிலையத்தில் அனைத்து வழித்தடங்களிலும் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதற்கான வேலைகளில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் என்ஜின்களும் பயன்பாட்டில் உள்ளன.

    இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை கோட்டத்தில் மார்ச் மாதத்திற்குள் தடையற்ற ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மதுரை ரெயில் நிலையத்தில் அனைத்து பணிகளையும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுரை-வாஞ்சிமணியாச்சி-துாத்துக்குடி இரட்டை ரெயில் பாதை பணிகளில் மதுரை-திருமங்கலம், மீளவிட்டான்- துாத்துக்குடி பிரிவுகள் தவிர மற்ற பகுதிகளில் இரட்டை ரெயில் பாதைப் பணிகள் முடிந்து அங்கு ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    மதுரை- திருமங்கலம் பிரிவில் 2-வது இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிந்து விட்டது. எனவே அங்கு இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

    மதுரை ரெயில் நிலையத்தில் 9, 10-வது தண்டவாள பகுதி, போடி ரெயில் பாதை பகுதியில் உள்ள ரெயில் பெட்டிகள் நிறுத்தும் இடம் மற்றும் தண்டவாள மின் மயமாக்கல் பணிகள், ரெயில் பெட்டி பராமரிப்பு மைய தண்டவாளங்களில் மின்மயமாக்கல், 8,9-வது தண்டவாளத்தில் ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் அமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை ரெயில் நிலைய 10-வது ரெயில் பாதை 445 மீட்டர் நீளத்தில் உள்ளது. அது தற்போது 610 மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல 1-வது நடைமேடை 617 மீட்டராகவும், 2, 3-வது நடைமேடைகள் 625 மீட்டராகவும், 4, 5-வது நடைமேடைகள் 617 மீட்டர் நீளமாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

    இதுதவிர ரெயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரெயில் பாதை, ராமேஸ்வரம் செல்லும் ரெயில் பாதையில் ரெயில் பெட்டிகள் 'ஷண்டிங்' செய்யும் வசதி, கூடல்நகர் செல்லும் ரெயில் பாதையில் வழக்கமான போக்குவரத்து பாதிக்காமல் ரெயில் பெட்டிகள் 'ஷண்டிங்' செய்ய 60 மீட்டர் நீளத்திற்கு ரெயில் பாதை நீட்டிப்பு, ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்குள் 10 ரெயில்களை நிறுத்தும் வகையில் பாயிண்ட்களை மாற்றியமைத்தல் போன்ற பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இதனால் கூடல்நகர், திருப்பரங்குன்றம், சிலைமான், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களை மதுரைக்கு வெளியே நிறுத்தாமல், ஒரே நேரத்தில் நடைமேடைகளுக்கு கொண்டு வரும் வசதி ஏற்படுத்தப்படும்.

    இதன் மூலம் மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும். மதுரை ரெயில் நிலையத்தில் மேற்கண்ட பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    ×