என் மலர்tooltip icon

    மதுரை

    • தமிழக அரசு பதவிக்கு வந்தபோது கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் இருந்தன.
    • தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது மக்கள் நலத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

    மதுரை:

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த 5 மாவட்ட தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்க பிரமுகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்துவது தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்படும்.

    தேனி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் கொடுத்து உள்ள மனுவை பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மதுரை மண்டல தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை குறித்து வைத்துக் கொண்டு உள்ளோம். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி, உங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டது. எனவே விவசாயிகளுக்கான வருமானத்தை மேலும் பெருக்குவது தொடர்பாக தனி கொள்கை திட்டங்கள் வகுக்கப்படும்.

    தமிழக அரசு பதவிக்கு வந்தபோது கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் இருந்தன. அதனையும் தாண்டி தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது மக்கள் நலத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அரசாங்கத்தால் செய்ய முடிந்த கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றித் தருவோம்.

    அரசாங்கத்தை தேடி மக்கள் வருவார்கள். ஆனால் இன்றைக்கு மக்களை தேடி அரசாங்கம் வந்துள்ளது. எங்களை தேடி நம்பிக்கையோடு வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்து உள்ளீர்கள். அதற்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • முதலமைச்சர் செல்லும் பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ. 18 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    மதுரை:

    அரசின் நலத்திட்ட செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட திட்டப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 1-ந்தேதி வேலூரிலும், இரண்டாம் கட்டமாக சேலத்திலும் ஆய்வு மேற்கொண்டார். 3-வது கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் மதுரையில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    அவர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்து வரும் அரசு பணிகள், நடந்து முடிந்த திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நலத்தி ட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, முதல்வரின் நேர்முக உதவியாளர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரையை சேர்ந்த தமிழ்நாடு வர்த்தக சங்க நிர்வாகிகள், சிறு-குறு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர், நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், ராமநாதபுரம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தென்மாவட்டங்களில் தொழிற்சங்கங்களை நவீன அம்சங்களுடன் மேம்படுத்துவது, புதிய தொழில்களை உருவாக்குவது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப் பட்டது. அப்போது தொழில் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், மகளிர் சுயஉதவி குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த கூட்டத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.க்கள், 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு செல்கிறார். அங்கு ரூ. 18 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    செட்டிநாடு கட்டிடக்கலையில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கியதில் இருந்து தற்போது வரை கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

    இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். இரவில் அங்கேயே தங்குகிறார். நாளை (6-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோச னை நடத்துகிறார்.

    இந்த கூட்டத்தில் 5 மாவட்டங்களிலும் நடந்து வரும் நிர்வாக பணி, வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று கள ஆய்விலும் ஈடுபட உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மதுரையில் இருந்து காரில் சாலை மார்க்கமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை விமான நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
    • அவரது வருகையையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரைக்கு வருகிறார். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அதன்பின் மதுரை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    மறுநாள் (6-ம் தேதி) மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளைப் பார்வையிடுகிறார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்புரம்-ஓபுளா படித்துறை இணைப்பு பாலத்தையும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்கிறார்.

    முதல்வரது வருகையையொட்டி மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் திருவிழா நடந்தது.
    • மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அன்னதான பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையெட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலையில் நிலைமாலை பரிவாரத்துடன் மலர்தட்டு ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன் திரளி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜாராம் ஊர் நாட்டாமை அழகர்சாமி விழா கமிட்டி நிர்வாகி பழனி முருகன் மற்றும் நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் மகளிர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் ஊராட்சியில், மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராம தங்கல் திட்டஊரக வேளாண்மைப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக மாணவி கே.பரிமளா விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பற்றியும், அதன் பயன்பாடு மற்றும் செயல்முறை பற்றியும் விளக்கம் அளித்தார். இந்த செயல்முறை விளக்கத்தில் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் புதிய தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படுகிறது.
    • ஆய்வின்போது மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கமிஷனர் பட்டுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையம் இடித்து ரூ.7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பஸ்நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    இதன் காரணமாக மேலூரில் அரசு பஸ்கள்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு சிரமமாக இருந்தது. இது தொடர்பாக வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.

    மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளார் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரின் மனு அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரி களிடம் விசாரணை நடத்தி மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள சுந்தரப்பன் கண்மாய் எதிரே உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தை தற்காலிக பஸ் நிலையத்திற்கு ஒதுக்கி உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று முதல் மேற்கண்ட இடத்தில் புதிய தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. மதுரை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் விரைவில் செய்யப்படும் என நகராட்சி தலைவர் முகமது யாசின் தெரிவித்தர். முன்னதாக இன்று தற்காலிக பஸ் நிலையத்தை அவர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கமிஷனர் பட்டுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • முதல் நாள் இரவு விற்கப்படாத உணவுகளை சுட வைத்து ஓட்டல்களில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    இன்றைய காலகட்டத்தில் வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. வேலைக்கு செல்வோர், சமைக்க நேரமில்லாத தம்பதிகள், வெளியூர்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பெரும்பாலும் ஓட்டல்கள் மற்றும் கையேந்தி பவன்களில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில ஓட்டல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற உணவுப்பொருட்களை வைத்து உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

    மதுரையில் செயல்படும் ஓட்டல்களில் இதுபோன்ற நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக மற்ற நகரங்களை காட்டிலும் மதுரையில் சாலையோர திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. திறந்த வெளியில் எந்த சுகாதாரமும் இல்லாத இடத்தில் இட்லி, தோசை, வடை, இறைச்சி, பழங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பசிக்காக அவசர கதியில் வாங்கி உட்கொள்ளும் மக்கள் வயிற்று உபாதை, வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக எண்ணை பலகாரம் பயன்படுத்தும் வடை, புரோட்டா கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி உணவு சமைக்கப்படுகிறது. இதனால் அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    மதுரை நகரில் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள், பைபாஸ் ரோடு மற்றும் சாலையோரங்களில் செயல்படும் சில கடைகளிலும் முதல் நாள் விற்பனையாகாத உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதேேபால சில பெரிய ஓட்டல்களிலும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை நகரில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க வேண்டிய சேவை தொழிலை மேற்கொள்ளும் உணவகங்கள் அதனை மீறி வணிக நோக்கத்தில் செயல்படுகின்றன.

    குறைந்த விலையில் கிடைக்கும் ரேசன் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி அதன்மூலம் உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றன. இதனை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் அடிக்கடி உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றன. இதற்கு முறையான விலை பட்டியலை கடையில் வைப்பதில்லை. இதனால் சாப்பிட்டு விட்டு பலர் அதிக பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தூக்கத்தில் உள்ளனர். அவர்கள் இனிமேலாவது விழித்துக்கொண்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சோழவந்தான் அருகே உள்ள முனியாண்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடந்து மாலை முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளில் இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி நடந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை சரியாக 9.30 மணி அளவில் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. மகா தீபாராதனை, கோ பூஜை, மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வேத ஆகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மேலூர் அருகே இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
    • விபத்து தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாளப்பட்டி, புலிப்பட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர்.

    இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. வள்ளாளப்பட்டி பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த புவனேசுவரி, ராவித், அழகுநாச்சி, விசாலினி, ஜெயலட்சுமி உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதலமைச்சரின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • முதலமைச்சர் வருகையையொட்டி மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மதுரை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை(5-ந்தேதி) மதுரைக்கு வருகிறார். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பின் மதுரை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    மறுநாள்(6-ந்தேதி) மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்புரம்-ஓபுளா படித்துறை இணைப்பு பாலத்தையும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.

    முதலமைச்சரின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதலமைச்சர் வருகையையொட்டி மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது.
    • தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர்.

    மதுரை:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டது.

    இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கார்த்திக், பரமேசுவரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜெயபாலன், பிரபு ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயபாலன், பிரபு ஆகியோர் 2021-ம் ஆண்டிலேயே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களின் நியமனத்துக்கு எதிராக 2022-ம் ஆண்டில்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இது ஏற்புடையதல்ல என்று வாதாடினார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது. இந்த நியமனம் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பி இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். மனுதாரர்களும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி உள்ளனர். அவர்களை முறைப்படி அர்ச்சகராக கோவில் அறங்காவலர் நியமிக்கவில்லை. தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த கோவிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர் 8 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • தொழிலாளி-வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை தேடி வருகின்றனர்.
    • அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி 950 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அழகர்(வயது21). இவர் சம்பவத்தன்று இரவு வில்லாபுரம் ஆர்ச் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி 950 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    இது தொடர்பாக அழகர், அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது கீரைத்துறையை சேர்ந்த சண்முகவேல் மகன் ரத்தினகுமார்(22), காமராஜபுரம், குமரன் தெரு குமரய்யா மகன் முனீஸ்வரன் (20) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆனையூர் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது30). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கே.வி.சாலையில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி, 4500 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    இது தொடர்பாக செல்வ ராஜ், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது அருள்தாஸ்புரம், பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் சேக் என்ற ஜெயக்குமார்(24) மற்றும் தினேஷ் என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×