என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் இன்று தொழில் வர்த்தக சங்கத்தினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
    X

    மதுரையில் இன்று தொழில் வர்த்தக சங்கத்தினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

    • முதலமைச்சர் செல்லும் பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ. 18 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    மதுரை:

    அரசின் நலத்திட்ட செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட திட்டப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 1-ந்தேதி வேலூரிலும், இரண்டாம் கட்டமாக சேலத்திலும் ஆய்வு மேற்கொண்டார். 3-வது கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் மதுரையில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    அவர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்து வரும் அரசு பணிகள், நடந்து முடிந்த திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நலத்தி ட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, முதல்வரின் நேர்முக உதவியாளர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் மதுரையை சேர்ந்த தமிழ்நாடு வர்த்தக சங்க நிர்வாகிகள், சிறு-குறு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர், நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், ராமநாதபுரம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது தென்மாவட்டங்களில் தொழிற்சங்கங்களை நவீன அம்சங்களுடன் மேம்படுத்துவது, புதிய தொழில்களை உருவாக்குவது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக விவாதிக்கப் பட்டது. அப்போது தொழில் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், மகளிர் சுயஉதவி குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த கூட்டத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.க்கள், 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு செல்கிறார். அங்கு ரூ. 18 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    செட்டிநாடு கட்டிடக்கலையில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கியதில் இருந்து தற்போது வரை கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

    இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். இரவில் அங்கேயே தங்குகிறார். நாளை (6-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோச னை நடத்துகிறார்.

    இந்த கூட்டத்தில் 5 மாவட்டங்களிலும் நடந்து வரும் நிர்வாக பணி, வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று கள ஆய்விலும் ஈடுபட உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மதுரையில் இருந்து காரில் சாலை மார்க்கமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை விமான நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×