என் மலர்
மதுரை
- வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.
- நாள் முழுவதும் மண்டகப்படியில் தங்கும் சுவாமி-அம்பாள் இரவு கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை-மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்து வருகின்றனர்.
நேற்று இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். ஒவ்வொரு நாளும் இரவு மாசி வீதிகளில் சுவாமி வலம் வரும்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலை யோரங்களில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவிழா தொடங்கிய நாள் முதல் 4 மாசிவீதிகளும் இரவு நேரங்களில் விழாக் கோலமாக காட்சியளிக்கி றது. திருவிழாவின் 4-ம் நாளான இன்று பிரியா விடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் தங்க பல்லக்கில் எழுந்தரு ளினர். காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பாடான சுவாமி-அம்பாள் சின்னகடை தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாகற்காய் மண்டகப் படியில் எழுந்தருளினர். முன்னதாக வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக தெற்குவாசல், வில்லாபுரம் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாள் முழுவதும் மண்டகப்படியில் தங்கும் சுவாமி-அம்பாள் இரவு கோவிலுக்கு வந்தடை கிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
- முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறுத்தி விட்டார்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழக மக்களுக்கு விடியல் தருவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள் ஆடுகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டார்.
தமிழகத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்ட மன்றத்தில் எடப்பாடியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட த்தில் மணல் திருட்டு குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் பட்டப்பகலில் அவரை அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்து ள்ளனர். இதற்கு ரூ.1 கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தால் போதுமா? உயிர் திரும்பி வருமா? அவர் என்ன பாவம் செய்தார்?.
இன்றைக்கு அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சரவணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- திருமங்கலத்தில் தொழிலாளி வீட்டில் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- வீட்டின் பராமரிப்புக்காக முருகன் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது47), தொழிலாளி. இவரது மனைவி அழகம்மாள் கப்பலூரில் உள்ள ஐ.ஓ.சி.யில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்றுகாலை வழக்கம்போல் கணவன்-மனைவி வேலைக்கு சென்றுவிட்டனர். மகன்-மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த ரூ.25ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய முருகன் கதவு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீபத்தில் வீட்டின் பராமரிப்புக்காக முருகன் ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
அதில் மீதமிருந்த ரூ. 25 ஆயிரத்தை பீரோவில் வைத்திருந்த போது திருடு போய்விட்டது குறிப்பிடத்தக்கது.
- சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
- பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும்.
மதுரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ-மாணவி களுக்கான 2023-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான இருப்பிடமற்ற கோடை கால பயிற்சி முகாம் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் (ரேஸ்கோர்ஸ் மைதானம்) வருகிற 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 1-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு தங்களது பெயர்களை பயிற்சி முகாம் நடைபெறும் டாக்டர்.எம்.ஜி.ஆர்.விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.
இதில் தடகளம், கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு இருபாலருக்கும், பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் கைப்பந்து மாணவ-மாணவிகள், ஜிம்னாஸ்டிக் மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள பயிற்சி முகாமும் நடைபெறும். மேசைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் கட்டணத்துடன் பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சி முகாம் முடிவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
- மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தில் பங்கேற்க வருகிற 1-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன்-தெய்வானை புறப்பாடாகின்றனர்.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மதுரை
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய 2 விழாக்களுக்கு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.
மதுரையில் சித்திரைத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் 1-ந்தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்.
இந்த திருமணத்தில் மீனாட்சி அம்மனை சொக்க நாதருக்கு தாரைவாத்துக் கொடுப்பதற்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு செல்கிறார். மறுநாள் 2-ந்தேதி திருமண வைபவத்தில் பங்கேற்கும் சுவாமிகள் மே 5-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து ஆவணி வீதி பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். 5-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் இருப்பிடம் சேருகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
- பொதுமக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தொடர்பான மண்டகப்படிகளில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
மேலும் பாதுகாப்பான உணவாக இருப்பதோடு செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து மேற்படி இடங்களில் சேரும் கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி தெரிவித்துள்ள இடங்களில் சேர்க்க வேண்டும். அதேபோல் ஓட்டல்களி லும் சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும். திருவிழாவில் மண்டகப் படிகள் மற்றும் பொது இடங்களில் அன்னதானம், பிரசாதம் வழங்கும் நபர்கள் foscos.fssai.gov.in என்ற இணை யதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவு சான்றிதழ்) பெற்று பிரசாதங்களை வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் வழங்கப்படும் உணவு மற்றும் உணவு பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் உடனே அரசின் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் எண் 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வி.ஏ.ஓ.க்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
மேலூர்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மேலூர் தாலுகா அளவிலான வி.ஏ.ஓ.க்கள், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.
- மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
- குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து திருடியதாக தெரிகிறது.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை ராமராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 80). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாசிலாமணி திண்டுக்க ல்லில் உள்ள மகன் பாண்டியராஜன் வீட்டில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று நிலக்கோ ட்டையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வ தற்காக மாசிலாமணி திண்டுக்கலில் இருந்து பஸ்சில் புறப்பட்டார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்குள்ள மாதா கோவிலில் சிறிது நேரம் இளைப்பாற தங்கியுள்ளார்.
அப்போது 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாசிலாமணியிடம் பேச்சு கொடுத்துள்ளார். சிறிது நேரத்திலேயே மாசிலா மணியின் நம்பிக்கையை பெற்ற அந்த பெண், தான் நீரேத்தானில் உள்ள நாகம்மாள் கோவில் பூசாரி வீட்டிற்கு குறிகேட்க செல்வதாக கூறியுள்ளார். உடனே மாசிலாமணியும் தானும் வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் நீரேத்தானுக்கு புறப்பட்டு சென்றனர். யூனியன் ஆபீஸ் ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே சென்றபோது அந்த பெண் மாசிலாமணிக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறை கொடுத்ததாக தெரிகிறது. அதை குடித்த மாசிலாமணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அந்த பெண், மூதாட்டி அணிந்திருந்த இருந்த 5 பவுன் நகை, பையில் வைத்திருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு மாயமானார். சில மணிநேரம் கழித்து விழித்தெழுந்த மாசிலா மணி, தான் அணிந்திருந்த நகை மற்றும் பையில் வைத்திருந்த பணம் காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தன்னுடன் வந்த பெண்ணை தேடிப்பார்த்த போது அவர் மாயமாகி விட்டது தெரியவந்தது. இதனால் தனது நகை மற்றும்ம பணத்தை அந்த பெண் தான் திருடி இருக்கவேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மாசிலாமணியுடன், ஒரு பெண் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
அந்த பெண் தான் தன்னிடம் பேச்சு கொடுத்த தாகவும், மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை தந்ததாகவும் மாசிலாமணி அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சி.சி.டி.வி. காமிரா காட்சியில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற பெண்ணின் முகம் தெளிவாக தெரிவதால் விரைவில் அவர் சிக்கிவிடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- மதுரை மாவட்டத்தில் ரூ.5.28 கோடி மதிப்பில் தார் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
- இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைச்சர் மூர்த்தி ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் 3 தார் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ1.37கோடி மதிப்பீட்டில் 1.6கி.மீ நீளம், மாங்குளம் கிராமத்தில் ரூ2.04கோடி மதிப்பீட்டில் மாங்குளம் - காந்திநகர் வரை 2கி.மீ நீளம், வெள்ளியன்குன்றம் புதூர் கிராமத்தில் ரூ1.87கோடி மதிப்பீட்டில் விபுதூர் முதல் அந்தமான் சாலை வரை 2கி.மீ நீளம் என மொத்தம் ரூ5.28கோடி மதிப்பீட்டில் 5.6கி.மீ நீளம் உள்ள 3 தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலை, சோமசுந்தரபாண்டியன், வழக்கறிஞர் கலாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- நாளை முதல் 30-ந் தேதி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
- வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் ஆகும். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்தது.
தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி நேற்று முன்பதிவு செய்ய கடைசி நாளாகும். நேற்று இரவு வரை 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர்முன்பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு இன்று(26-ந் தேதி) குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள் நாளை முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவு கட்டண டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
- கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மதுரை:
அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட செயலாளர் வரதலட்சுமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தெய்வராஜ், செயலாளர் லெனின், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமுதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மழை பெய்தது.
அதனையும் பொருட்படுத்தாமல் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், இன்று காலை வரை விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும், பள்ளி-கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது போன்று சிறிய குழந்தைகளுக்கும் கோடை வெயிலை சமாளிக்கவும், தொற்று நோய் பரவலை தடுக்கவும் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.






