என் மலர்tooltip icon

    மதுரை

    • அடுத்தடுத்து 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகரில் நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நகைகளை பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் புஷ்பவள்ளி(வயது55). இவர் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புஷ்ப வள்ளி அரசு பஸ்சில் சென்றார். அங்குள்ள புளியமரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் மண்டபத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பவள்ளியை மறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    மற்றொரு சம்பவம்

    நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சத்யா(33). இவரும் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    சன்னதி தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பினர். அதில், 2¾ பவுன் நகை இருந்தது. இந்த 2 நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனபாண்டி (வயது37). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கணவருடன் வெளியே புறப்பட்டார். முத்தமிழ்நகர் 2வது தெருவில் சென்று கொண்டி ருந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மறித்து தனபாண்டி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர் களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும், மண்ட லங்களுக்கு இடையே இடமாறுதல் செய்யும் அதிகாரம் அந்தந்த பொது மேலாளர்களுக்கே வழங்க வேண்டும், பழைய பேருந்து களை பராமரிப்பு செய்ய தேவையான தரமான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும், பணி நேரம் சட்ட விரோத மாக 12 மணி நேரமாக மாற்றப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் போது போக்கு வரத்துதுறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். போக்குவரத்து பணியாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • வாடிப்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தாசில்தார் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நெடுங்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நெடுங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவுக்கு பெட்கிராட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.சுப்புராம் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாடிப்பட்டி வட்ட தாசில்தார் மூர்த்தி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ''பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மஞ்சப்பை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் அலுவலர் சுஜின் தர்மராஜ் நெடுங்குளம் கிராமத்திற்கு பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும் பவுண்டேஷன் சார்பில் செய்து வருவதாக பேசினார். நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வாழ்த்தி பேசினார். பின்னர் நெடுங்குளம் கண்மாய்கரை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங் நன்றி கூறினார். பின்னர் சமயநல்லூரில் உள்ள மீனாட்சி மில் வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் ேசாழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ந் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கேடயத்தில் எழுந்தருளிய அம்மன் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பக்தி கோஷம் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வந்த தேரை திரளாேனார் கண்டு தரிசனம் செய்தனர்.

    கடை வீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை சோழ வந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்புவனம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.

    பொதுவாக விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிக்கப்பட்டது.
    • தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர்.

    தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம், மண்டேலாநகர் செல்லும் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும். இதனை பயன்படுத்தி சாலையில் மறைந்திருந்து சமூக விரோதிகள் வாகன ஓட்டிகளையும், அந்த வழியாக நடந்து செல்வோரையும் தாக்கி நகை-பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக அவனியாபுரம் ரிங்ரோடு, மண்டேலாநகர், அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோடுகளில் அண்மை காலமாக வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவனியாபுரம போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. வில்லா புரம் ஹவுசிங்போர்டு, மீனாட்சி நகர், அவனியா புரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    எனவே ேபாலீசார் வழிப்பறி சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • எல்லீஸ்நகர், ஆனையூர் பகுதிகளில் மின்வினியோகம் நாளை நிறுத்தப்படுகிறது.
    • மின் செயற்பொறியாளர்கள் மோகன், ராஜா உசேன் ஆகியோர் தெரிவித்துள்ள னர்.

    மதுரை

    மதுரை எல்லீஸ்நகர் மற்றும் ஆனையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (6-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட்(எம்.எச்.டி, ஆர்.எச். பிளாக்), டி.என்.எஸ்.சி.பி. அபார்ட்மெண்ட்(ஏ முதல் எச் பிளாக்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி. ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹப்பி ஹோம் 1, 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம், வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட்மெண்டஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேல மாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    ஆனையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமி புரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் மோகன், ராஜா உசேன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மதுரையில் ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்

    மதுரை

    தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் இறுதி ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. ஒரு மாதம் விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்றி ருந்தனர்.

    மேலும் பலர் குடும்பத்தினர் சுற்றுலாவும் சென்றனர். இதன் காரணமாக கோடை விடுமுறை விடப்பட்ட நாளில் இருந்து கடந்த ஒரு மாத காலமாக ரெயில் மற்றும் பஸ்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பள்ளி விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (7-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக வெளியூர்களில் தங்கியிருந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு ஆர்வம் காட்டினர். இதனால் மதுரை ரெயில் நிலையம் மற்றும் மாட்டுத்தாவணி, ஆரப்பா ளையம் பஸ் நிலையங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திரண்டனர்.

    நேற்று ஞாயிற்க்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு போகும் ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறியதை காண முடிந்தது.

    இன்று காலை மதுரை வழியாக சென்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக ரெயில் நிலைய பிளாட் பாரங்களில் ெபாதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு வார காலம் இதே நிலை நீடிக்கும் என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பல மாவட்டங்களில் நூறு டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருவதால் கோடை விடுமுறை முடிந்து வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்து ள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதா வது:-

    புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொழிலா ளர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்து டன் இணைந்து வருகின்ற னர். 2 கோடி சேர்க்கையை எடப்பாடி பழனிசாமி நிர்ணயித்துள்ளார். ஆனால் இன்றைக்கு 2½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாகும் நிலை உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவிலேயே தமி ழகத்தில் தான் சட்டம்- ஒழுங்கு சீர்கேடாக உள்ளது.அதேபோல் கள்ளச்சாரா யத்தால் அதிகளவில் உயிர் பலியான மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.

    கடந்த 2022-2023ம் ஆண்டுக்கான கடன் வாங்கிய மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் மகாராஷ்ட்ரா, மூன்றாவது இடத்தில் மேற்கு வங்காளம், 4-வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளன.

    எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி கொடுத்தார். அதன் மூலம் தமிழகத்திற்கு 1,450 மருத்துவ இடங்கள் கிடைத்தது. மேலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் 565 மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற்று ஆண்டு தோறும் பயன் பெற்று வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் 650 இடங்கள் பறிபோகி உள்ளது. இதற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது.
    • மதுரை ஐகோர்ட்டில் ஆணையர் விளக்கமளித்தார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியின் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது.

    இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற இருக்கக்கூடிய பங்குனி திருவிழாவில் தனி நபர்களை கொண்டு அறநிலைத்துறை அதிகாரிகள் கமிட்டி அமைத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். எனவே 2017-ம் ஆண்டு உத்தரவை பின்பற்றி எந்த தனி நபர்களும் தற்காலிக கமிட்டி அமைத்து திருவிழா நடத்தாமல் கோவில் இந்து சமய அறநிலை துறை நேரடியாக திருவிழாவை நடத்த உத்திரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு முந்தைய விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது.

    அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் செயல்படும் கோவில்களில் திருவிழா காலங்களில் குழு அமைப்பதால் பல்வேறு புகார்கள் வழக்குகள் வருகின்றது. எனவே இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி விழா குழு அமைக்க எந்த விதிகளும் இல்லை.

    எனவே எதிர்காலங்களில் திருவிழா குழு அமைக்க கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்க ளுக்கும் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது என்றும், இதனை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவை தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • சமையல் தொழிலாளி- பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அருகே சிலைமானை அடுத்துள்ள புளியங்குளம் கே.கே.நகரை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது40).சமையல் மாஸ்டரான இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. கண்ணிலும் பாதிப்பு இருந்தது.

    இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிரஞ்சீவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி யோகலட்சுமி சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே எஸ்.கொடிக்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமுத்தாய் (50). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராமுத்தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கணவர் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோவிந்தன் (54). இவர் லெப்ரசி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். குடிப்பழக்கமும் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தன் புது ராமநாதபுரம் ரோடு மாநகராட்சி வாகனம் நிறுத்துமிடம் எதிரே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவருடைய தம்பி கண்ணன் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    மதுரை செல்லூரை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது46). புக் பையிண்டிங் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அரசு பஸ்சில் திருமங்கத்திற்கு வந்த மதுரை வீரனுக்கு பஸ் நிலையத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மதுரை வீரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×