என் மலர்tooltip icon

    மதுரை

    • அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட் பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் இந்திராணி தலைமை யில் நடைபெற்றது. அப் போது மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட விளாங் குடி 20-வது வார்டு பகுதி களுக்குட்பட்ட 116 தெரு பகுதிகளில் அடிப் படை வசதிகளை நிறை வேற்றக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் சாக்கடை, கழிவு நீர் பிரச் சினை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்யாத மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து கவுன்சிலர் நாக ஜோதி சித்தன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மண்டல அலு வலகத்தை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பதாகை களை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மேயர், ஆணையாளரிடம் மனு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். தொடர்ந்து மனு அளிக்க மண்டல அலுவல கத்திற்குள் வந்த பொது மக்கள் மேயர் மற்றும் அதி காரிகள் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், ஆணையா ளர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    அதே போல் மானகிரி 33-வது பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் வராததை கண்டித்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இத னால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    • காய்கறிகள் விற்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை செயல் படும் தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி கள் விற்கப்படுகிறது.

    இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்க ளில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு, மாடு, கோழிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். அதனால் இவைகள் காலை 9 மணிக்குள் விற்பனை செய்யப்பட்டு விடும். அதன் பின்னர் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் தொடர்ந்து விற்பனை யாகும்.

    வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் ஆடுகள் இன்று விற்பனைக்கு வந்தது. ஆடுகளின் விற்பனை ஜோராக இருந்தது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. மதியம் வரை ரூ.2 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.

    • அடையாளம் தெரியாத பெண் பிணங்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை பெரியார் பஸ் நிலையப்பகுதியில் சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் பெயர் சரசு என்பது மட்டும் தெரியவந்தது. எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் பெரியார் பஸ்நிலையப்பகுதியில் மயங்கிக்கிடந்த 65 வயது மூதாட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது பெயர், ஊர் விபரம் தெரியவில்லை. இதுகுறித்து திடீர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • ராமநாதபுரம் அருகே இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிைய சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அஹமது, மதுைர ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    திருவாடானை அண்ணா நகர் பகுதியில் 30 ஆண்டு களுக்கு முன்பு 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த நீர் தேக்க தொட்டி தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    அதன் தூண்களில் உள்ள கம்பிகள் பலமிழந்து வெளியே தெரிகின்றது.இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் எதிரிலேயே பஸ் நிலையம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிகமாக சென்று வரும் பகுதி என்பதால் நீர்நிலை தொட்டி இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகவே இதனை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அரசு தரப்பில் அளித்த பதிலில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது இல்லை. அதனால் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீர்நிலை தொட்டியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு அதனை 6 மாதத்திற்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் அபிநயா. இவர் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். பழங்காநத்தம் பசும்பொன் நகர் ஜூவா தெருவை சேர்ந்தவர் சண்முகலட்சுமி. இவரது மகள் சங்கீதா. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தோழி கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் பலனில்லை.

    இது தொடர்பாக சண்முகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கரிமேடு பொன்னகரம் பிராட்வே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் சுவேதா(வயது20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுவேதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில் பெத்தானியத்தைபுரத்தை சேர்்ந்த சூர்யா என்பவர் மகளை அழைத்து சென்றதாக குறிப்பிட்டி ருந்தார். இதன் அடிப்ப டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெரியார் பஸ் நிலையத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புல்வெளி பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
    • பஸ் நிலைய வளாக பகுதிகளில் பயணிகள் உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்படவில்லை.

    மதுரை:

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் கீழ் பெரியார் பஸ் நிலையத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை மத்திய சமூக நலத்துறை இணை மந்திரி நாராயணசாமி இன்று பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றது. மதுரையின் மையப் பகுதியான பெரியார் பஸ் நிலையத்திற்கு தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பெரியார் பஸ் நிலையத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புல்வெளி பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும் பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆகையால் தனியார் நிறுவனம் வாயிலாக கழிப்பறை தூய்மை பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத்தவிர பஸ் நிலைய வளாக பகுதிகளில் பயணிகள் உட்காருவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெறுகிறது. பெரியார் பஸ் நிலையத்தில் குற்றசெயல்களை தடுப்பதற்கு அதிக அளவில் தெரு விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்ற வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. எனவே பெரியார் பஸ் நிலையத்தில் நடைபெற்று வருகின்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளை அதிகளவு வேலையாட்களை கொண்டு விரைந்து நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், பா.ஜ.க. நிர்வாகிகள் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சகாதேவன், நலத்திட்ட பிரிவு செயலாளர் சதீஷ் ஆசாத், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாமானது நாளை (28-ந்தேதி) அலங்காநல்லூர் வட்டாரம், முடுவார்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணி, சிணை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம் மற்றும் கால்நடை பரிசோதனை, ஊட்டசத்து வழங்குதல், தீவனக் கன்றுகள் விநியோகித்தல் ஆகியவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே முடுவார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள நெட்டுக்குளம் கிராமத்தில் நீதி விநாயகர் கோவிலில் கும்பாபிஷே விழா நடந்தது. இதனை முன்னிட்டு திருவேடகம் கோபால கிருஷ்ணன் ஜோசியர் தலை மையில் 2 நாட்கள் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மேள தாளத்்துடன் சிவாச்சாரி யார்கள் புனித நீர் குடங்க ளுடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்தில் பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    • நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை.
    • தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியவுடன் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 75 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், 63 உதவியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.8 ஆயிரம் உயர்த்தி வழங்குவது, உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் ரூ.3 ஆயிரத்து 500 உயர்த்தி வழங்குவது மற்றும் டைட்டில் பார்க் அமைப்பதற்காக 5.60 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் ரூ.600 கோடியில் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில், நான் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-வது வார்டில் மாநகராட்சி சார்பில் எந்த அடிப்படை வேலைகளும் நடைபெறவில்லை. இதுவரை 19 மாநகராட்சி கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையிலும், வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சித்திட்ட பணிகளும் நடைபெறாதது கவலையளிக்கிறது என்றார். பூமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. எனவே ஒரு வார்டுக்கு 5 தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் சாலை மற்றும் சாக்கடை பிரச்சினைகளை தீர்க்க ஒப்பந்தம் எடுப்பவர்கள் அதனை சரியாக செய்வதில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நான் மக்களுக்கு சேவை செய்யத்தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் எந்த வேலையும் நடைபெறவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு விடும் நிலையில் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தின்போது அவையில் அமர்ந்திருந்த எதிர்கட்சி தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த சோலைராஜா, லோயர்கேம்ப் குடிநீர் திட்டம் குறித்து மாநகராட்சி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மக்களுக்கு குடிநீர் முக்கியமானது. அதற்கான வேலைகள் குறித்து விபரமாக சொல்லுங்கள் என கூறினார்.

    மேலும் எனது வார்டில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன் வைத்தார். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு பதிலளிடையாக அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தி.மு.க. கவுன்சிலர்கள் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்று கோஷமிட்டனர். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சோலைராஜா மகன் இளவரசன், கவுன்சிலர்களை பார்த்து சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்களிடையே ரகளை ஏற்பட்டது.

    உடனே இளவரசனை வெளியேற்றுமாறு மேயர் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டம் பரபரப்பாக இருந்தது.

    • மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி பேசுகையில், எனது வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. ரூ. 1 லட்சத்து 20 மதிப்பிலான வேலை நடந்து இருக்கிறது.

    அதற்கு பணம் இன்னும் தரவில்லை. மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டதை தவிர வேறு வேலை நடக்கவில்லை. 82-83 வார்டுகள் இணைப்பு பாதையில் மின்விளக்குகள் 6 மாதமாக எரியவில்லை என்றார்.

    85- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துமாரி ஜெயக்குமார் பேசுகையில், எனது வார்டில் வணிகர் வளாகம் அமைக்க வேண்டும். பேவர் பிளாக் சாலை மேடு பள்ளமாக இருக்கிறது.

    சாலை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும். மேலும் முக்கிய சாலைகளில் தார் சாலைகள் அமைக்க வேண்டும். இதற்கு முன்பு எனது வார்டில் பணியாற்றிய உதவி பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    அவர்கள் நன்றாக பணியாற்றினார்கள். எனவே மீண்டும் அவர்களை எனது வார்டுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

    • அலங்காநல்லூரில் விவசாயிகள் பேரணி-ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சிறிது நேரம் ஆர்்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள், ஆலை தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் கவனஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நூற்றுக்கும் ேமற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.

    அவர்கள் கோரிக்கை களை வலியு றுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணி செல்ல முயன்றனர். அப்போது அங்கு திரண்டி ருந்த போலீசார் பேரணிக்கு அனுமதி யில்லை. எனவே கலைந்து செல்லுமாறு கூறினர்.

    இதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீ சாருக்கும், விவசாயி களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் ஆர்்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் வேனில் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    • ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110ஆக உயர்ந்துள்ளது.
    • விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் தக்காளி, மிளகாய், முருங்கைக்காய், கேரட் பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி யில் ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகம் அமைந்துள் ளது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக இங்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது சமையலில் அத்தியா வசியமாக பயன்படுத்தப் படும் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ. 110 ஆக அதிகரித்துள்ளது. கிலோ ரூ. 60-க்கு விற்ற மிளகாய் ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.50, கேரட் கிலோ ரூ.60, முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.120, பட்டர் பீன்ஸ் கிலோ ரூ. 120, சோயா பீன்ஸ் கிலோ ரூ.120, முட்டைக்கோஸ் ரூ.25, பூண்டு கிலோ ரூ.210, உருளைக்கிழங்கு கிலோ ரூ.70, பீட்ரூட் கிலோ ரூ. 60 ஆகிய விலைகளில் விற்கப் படுகிறது.

    சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.

    ×