என் மலர்
மதுரை
- தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு வழக்கில் ேபாலீஸ் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் ஆஜராகவில்லை.
- வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் விக்கி ரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). இவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்தது.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அர்ஜூன் சம்பத் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படு கிறது.
இந்த பதிவு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் கோவை யில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டில் நேற்று மதுரை மாவட்ட போலீசார் சம்மன் வழங்கினர்.
அதன்படி இன்று காலை அர்ஜூன் சம்பத் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. அவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.
பங்காரு அடிகளாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அர்ஜூன் சம்பத் நேரில் ஆஜராக முடிய வில்லை என்றும், வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை புதூரில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. திட்ட தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தெய்வராஜ், அரவிந்தன் மற்றும் முத்துலட்சுமணன், செல்வராஜ், அறிவழகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணை தலைவர் குருவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மின்வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்கள் நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியை நேரடியாக வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
- ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்தார்.
மதுரை
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 14,314 கண்மாய்கள் உள்ள நிலையில், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பிஉள்ளது. குறிப்பாக 3,422 கண்மாய்களில் அதாவது 24 சதவீதம் கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை குறைவு என்று காரணம் சொல்லப்பட்டாலும் கண்மாய்களில் தூர்வராதே பிரதான காரணம் என்றும், இந்த வடகிழக்கு பருவ மழையில் காலத்தில் காண்மாய் நிரம்புவதற்கு குடிமராமத்து திட்டம் செய்தால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
வடகிழக்கு பருவ மழையில் சென்னை மிகவும் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால் 2 மீட்டர் உயரம் தான் புவியியல் அடிப்படையில் கடல் மட்டத்திலிருந்து இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெருக்கள்உள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் ரூ. 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன.ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப் பட்டது.
தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நட வடிக்கை எதுவும் முழுமை பெறவில்லை மழை நீர் வடிகால் பணிகள் 50 சதவீதம் தான் முடிந்து இருக்கிறது 100 சதவீதம் முடியவில்லை.
இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் கூடிய சூழ்நிலை இன்னும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முடிய வில்லை. தூர்வா ரப்பணிகள் மேற்கொள் ளப்படவில்லை. தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதி களை எத்தனை என்ப தையும், அதேபோல கண்கா ணிப்பு அலுவலர்கள் பட்டியலை முதலமைச்சர் முழுமையாக அறிவிக்க வில்லை. கடந்த தென்மேற்கு பருவமழையில் கண்மாய்கள் வறண்டு போனது அதேபோல் இந்த வடகிழக்கு பருவமழையில் குடி மராமத்து செய்யாததால் பருவமழையில் நீரை தேக்கமுடியாத நிலையில் உள்ளது.
ஆகவே முதல்-அமைச்சர் எதிர்க்கட்சி குரலாக நினைக்காமல் மக்களின் குரலாக நினைத்து இந்த வடகிழக்கு பருவ மழையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
- முன்னாள் எம்.எல்.ஏ. வழங்கினார்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர், பெருமாள்பட்டி பகுதியில் நல்லதங்காள், பெரியையன், சின்னையன் சுவாமி கோவில் உள்ளது. இங்க 48-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. வான வேடிக்கை முழங்க தேங்காய், பழக்கூடை தட்டு, வண்ண மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா சார்பில் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.
- ஆக்ஷன் காட்சிகளில் அனைத்து தரப்பினரையும் நடிகர் விஜய் தன்வசப்படுத்தி விட்டார்.
- லியோ படம் பார்த்த மதுரை ரசிகர்கள் நெகிழ்ச்சி பேட்டியளித்துள்ளனர்.
மதுரை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை காண ரசி கர்களிடம் இருந்த ஆர்வத் திற்கேற்ப படமும் சிறப்பாக வந்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் கள்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அள வுக்கு 41 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. அதிகாலை முதலே முதல் காட்சியான 9 மணிக்கு படம் திரையி டப்பட்டதும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அளவே இல்லை என்று கூறலாம். தியேட்டருக்கு வெளியே விஜய்யின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் திரையரங்கிற்கு உள்ளேயும் விஜயின் அறி முக காட்சியை பார்த்து மெய்சிலிர்த்தனர்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் நம்மிடம் கூறியதாவது:-
சதீஷ் (விஜய் மக்கள் இயக்க மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர்): தளபதி விஜயை இதுவரை காதல் சப்ஜெக்ட் படங்களிலேயே அதிகம் பார்த்து வந்துள்ளோம். அதிலும் அவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்துள் ளார். காலம் மாற, மாற ரசிகர்கள், பொதுமக்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ற படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் இந்த லியோ படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக மக்களையும் ஈர்த்துவிட்டார்.
அதாவது இந்த சமுதாயத்தில் புரையோடிப்போய் இருக்கும், சமூகத்தை சீரழிக்கும் போதைப்ெபாருள் ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த லியோ திரைப்படம் அதனை ஒழிக்கும் விதத்தையும் தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள போதைப்பொருள் குறித்த நெட் ஒர்க் குறித்து முழுமையாக காண்பித்து அனைத்து காட்சிகளிலும் விஜய் மிரட்டியுள்ளார்.
ஆக்ஷன், காமெடி, பாடல், சென்டிமெண்ட் என்று அனைத்திலும் விஜய் ஜொலிக்கிறார். மாஸ் என்றால் தளபதி, தளபதி என்றால் மாஸ் என்பதை மீண்டும் ஒருமுறை விஜய் நிரூபித்துள்ளார். படத்தின் இறுதிகாட்சியில் மீண்டும் நீர வரவேண்டும் என்பது போல் முடிந்துள்ளது. எனவே லியோ படத்தின் 2-ம் பாகத்தை விரைவில் நாம் எதிர்பார்க்கலாம் என்றார்.
சூர்யகுமார், விஜய் (திருப்பரங்குன்றம்): நடிகர் விஜய் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். தனது அசுரத்தனமான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் தன்வசப்படுத்தி இருக்கிறார். லியோ படம் வெளியான இன்றுதான் எங்களுக்கு தீபாவளி. படத்தில் அவரது கெட்அப், நடிப்பு, ஆக்ஷன், காமெடி என எதையும் ஒதுக்கிவிட முடியாது. அத்தனையும் சிறப்பாக இருக்கிறது. சமூகத்தை சீர்திருத்த அவர் எடுத்துள்ள முயற்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழகாக இயக்கியுள்ளார். சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் ரசித்து பார்க்கும் அளவிற்கு படம் வந்துள்ளது.
பாலாஜி (ஆரப்பாளையம்): தளபதியின் 67-வது படமான லியோ அருமையாக வந்துள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட படம் சூப்பர். மற்ற மாநிலங்களில் எல்லாம் படம் முன்கூட்டியே திரையிடப்பட்டாலும் படத்தை பார்த்ததும் அந்த ஏக்கம் மறந்து போனது. லோகேஷ் கனகராஜ் அருமையாக படம் எடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் சிறப்பு காட்சி காலை 7 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அந்த கவலையெல்லாம் திரையில் தளபதியை பார்த்ததும் மறந்து போனது. தளபதியை பார்த்தோம், ரசித்தோம், என்ஜாய் பண்ணினோம். வரும் 6 நாட்கள் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லியோ படம் வெற்றி பெற இறைவனை வேண்டுவதாக பேட்டியளித்தார். அவருக்கு என் நெஞ்சார்த்த நன்றிகள்.
கணேஷ்குமார் (திடீர்நகர்): தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ரசிகர்களாகிய நாங்கள் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தளபதி விஜய் இரண்டு வேடங்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க இரண்டும் ஒன்றுதான் என்று கதையில் பிரமிக்க வைக்கிறது.
இறுதியாக கமலஹாசன் தளபதி விஜய்க்கு தொலைபேசி மூலம் நாம் இருவரும் இணைந்து இந்நாட்டுக்கு நல்லது செய்வோம் என்று அடுத்த படத்துக்கு தயாராகிறார்கள். இது அடுத்த படத்திற்கு மட்டுமல்லாது அரசியலிலும் இணைந்து செயல்படுவார்களா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சிமெண்ட் விலை ‘திடீர்’ உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கியது.
- எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்என ஒப்பந்தாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
கட்டுமான தொழிலில் அத்தியாவசியமாக இருப்பது சிமெண்ட். பல்வேறு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் பெருகியதால் போட்டா போட்டி ஏற்பட்டு சிமெண்ட்விலை குறைந்தது. மேலும் அரசு சார்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் சிமெண்ட் விற்பனை யெ்யப்பட்டது. இங்கு சிமெண்ட் மூடைகள் சலுகை விலையில் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசு மூலம் நடைபெறும் கட்டிட பணிகளுக்கும் இந்த சிமெண்ட் மூடைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.இதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற்றனர்.இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சிமெண்ட் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மூடை ரூ.350-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.450-க்கு விற்னை செய்யப்படுகிறது. இதனால் கட்டிட ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசிடம் ஒப்பந்தப்புள்ளி பெற்று பொது கட்டிடங்களை கட்டி வருபவர்களுக்கு சிமெண்ட் விலைஉயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஒப்பந்ததாரர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்குள் கட்டிடங்களை கட்ட வேண்டும். ஆனால் தற்போது சிமெண்ட் விலை ஏற்றத்தால் கூடுதலாக செலவாகும் தொகையை பெறமுடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் சிமெண்ட் விலை உயர்வால் தாங்கள் கட்டிட வரும் புதிய வீடுகளின் வேலைகள் தொய்வடைந்துள்ளன. மேலும் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்என ஒப்பந்தாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
- ஒரு மாத காலமாக முறையாக இயக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை டி.கொக்குளம் கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காரியாபட்டி பேருந்து பணிமனைக்கு உட்பட்ட டி.கொக்குளம் கிராமத்திலிருந்து மதுரை அண்ணா பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து முறையாக இயக்கப்ப டவில்லை. தினமும் காலை நேரத்தில் வரக்கூடிய பேருந்து உரிய நேரத்திற்கு வராமல் தொடர்ந்து கால தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிக்கப் பட்டனர்.
மேலும் மாலை வேளையில் பஸ்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை கிராமத்திற்கு வந்த திருமால், புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து திருமங்கலம் பகுதியில் இருந்து காரியாபட்டி செல்லும் அரசு பஸ், மதுரையில் இருந்து தூம்பக்குளம் செல்லும் அரசு பஸ் என 4 பஸ்களையும் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தினந்தோறும் காலை மாலை உரிய நேரத்திற்கு பேருந்து வரும் என எழுதி என உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
- உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும்.
- வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலைக்கு மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர்.
எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வக்கீல் ஆஜராகி, மலைக்கோவிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.
வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
- மதுரை சோழவந்தானில் சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- 4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
சிவகங்கை மகாபிரபு சிவாச்சாரியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் கந்தசாமி பிள்ளை குடும்பத்தினர் முன்னிலையில் யாக பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
4 கால யாக பூஜைகள் முடிவடைந்து கடம் புறப்பாடாகி கலசத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மன்னாடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாடிப்பட்டி பகுதியில் அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
- நீரேத்தான், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் பனிபொழிவு காணப்பட்டது.
வாடிப்பட்டி
இன்று ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் சிறுமலை பகுதியில் மலை முழுவதும் தெரியாதபடி பனிபொழிவு அதிகமாக இருந்தது.
வாடிப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. பின் சாறல் மழையும் பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் விராலிப் பட்டி, செம்மினிப்பட்டி, கச்சை கட்டி, குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பனிபொழிவு காணப்பட்டது.
இதனால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, வாடிப்பட்டி நகர்புறசாலை முழுவதும் தெரியாதபடி பனிமூட்டம் அடர்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதினார்.
- ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப் ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதங்கள் அனுப்பி உள் ளார்.
இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில் "பரிக்சா பே சர்ச்சா" எனும் ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தி யாவிற்காக எனும் முகப்பு தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம் பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரிடம் கடிதம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- விஜய் தோன்றும் முதல் காட்சியில் திரையரங்குக்குள் ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்தது.
- ரசிகர்கள் விஜய் வாழ்க, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.
மதுரை:
நடிகர் விஜய் நடித்து, டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 41 திரையரங்குகளில் லியோ திரைப்படம் இன்று வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே 4 மணி காட்சியை காட்சிகள் காண ரசிகர்கள் எடுத்த டிக்கெட்டுகள் அனைத்தும் காலை 9 மணிக்கு காண்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
அதன்படி மதுரையில் வெற்றி, தங்கரீகல், கோபுரம் சினிமாஸ், சோலைமலை, பழனி ஆறுமுகா, ஜெயம், தமிழ் ஜெயா உள்ளிட்ட 41 திரையரங்குகளிலும் முதல் காட்சியை 20 ஆயிரத்து 171 பேர் காண்பதற்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல் காட்சியை காண அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர்.
இது ரசிகர்களின் காட்சி என்பதால் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் கட்-அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், கலர் பேப்பர் வெடி வெடித்தும் கொண்டாடினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் திரையரங்குகள் உள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலையில் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் ஒன்று திரண்ட விஜய் ரசிகர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் விஜய் மக்கள் இயக்க கொடிகளை கட்டிக்கொண்டு தியேட்டர்களை நோக்கி ஊர்வலமாக ஆராவாரத்துடன் சென்றனர்.
திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் காட்சியில் திரையரங்குக்குள் ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்தது. அப்போது ஆரவாரம் செய்த ரசிகர்கள் விஜய் வாழ்க, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.






