என் மலர்
மதுரை
- கள்ளந்திரி-திருமங்கலத்துக்கு வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும்.
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி இருப்பினும் தேனி மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைய வாய்ப்புள்ளது என நீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
மேலும் அணைக்கு நீர்வரத்து 2,693 கன அடியாகவும், வெளியேற்றம் 69 கன அடியாக உள்ளது. மேலும் முல்லைப் பெரியாறில் வினாடிக்கு 1,855 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 127 அடியாக உள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் குறிப்பாக மேலூர், பேரணை,கள்ளந்திரி, திருமங்கலம், 58 கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது ஒரு நியாயமான கோரிக்கை தான்.
கள்ளந்திரி பகுதியில் 45,000 ஏக்கர் இரு போக பாசனத்திற்கும், மேலூர் பகுதியில் 86,000 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும், திருமங்கலம் 19,500 ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க விவசாயி கள் கோரிக்கை வைத்துள் ளனர்.
வைகையில் 6000 கன அடி தண்ணீர் இருக்கும் பொழுது கள்ளந்திரி, மேலூர் போன்ற பகுதிக ளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 9000 கன அடி உள்ளது. அதனால் கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம், 58 கால்வாய் ஆகியவற்றிக்கு சேர்த்து தண்ணீரை திறந்து விடலாம். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து திறக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரியார் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர்.
மதுரை
மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45), ஆட்டோ டிரைவர். பெரியார் பஸ் நிலையம் அருகே இவர் நின்றிருந்தபோது சிறுவன் உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து திடீர் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்துச்சென்ற திடீர் நகர் சதீஷ்குமார் (21), குடிசை மாற்று வாரிய குடியிருப்புசேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21) ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் பத்ரு ஹரி (20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மதுரை கிழக்கு தொகுதியில் 78 புதிய சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.
- இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகராட்சி 1-வது மண்டல அலுவல கத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா,மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநக ராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி கலெக்டர் சவுந்தர்யா, மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதி வாளர் குருமூர்த்தி, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் சரவணன், டி.ஆர்.ஓ. சக்திவேல், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர்கள் ரோகினி பொம்மத்தேவன், செல்வ கணபதி, ராமமூர்த்தி, பால் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதே இந்த அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த தொகுதியில் ஒரு கோடியே ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக 78 சாலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் நடை பெறும். விடுபட்ட பகுதிகளில் 200 மீட்டர் பாதாள சாக்கடை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.
எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் மக்கள் திட்டங்களை நிறைவேற்று வதில் மிகுந்த அக்கறை உள்ள அரசாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் அரசு இருக்கிறது.
மேலமடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டு புதிய சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு தொகுதியில் உள்ள 7 கண்மாய்களில் நடை பாதை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த பணிகளும் நடைபெற உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் தேவையை அறிந்து பணி செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தி.மு.க. பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், பகுதி செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் அருகே தச்சம்பத்து-நெடுங்குளம் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது தச்சம்பத்து கிராமம். இங்கிருந்து நெடுங்குளம் செல்லும் சாலை ஏற்கனவே மேடு பள்ளங்களுடன் போக்குவ ரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வந்தன. இதனால் மண் நிரம்பி கிடந்தது. தோண்டிய பள்ளங்கள் முறையாக மூடப்பட வில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சாலை முழுவதுமாக சேறும் சகதியாக மாறி காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமமான நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மாற்றுப் பாதையில் சோழவந்தான் சென்று நெடுங்குளம் செல்ல வேண்டுமானால் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஆகையால் அதிகாரிகள் உடடினயாக இந்த பகுதியை பார்வையிட்டு சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரை நகரில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.
மதுரை
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புத்தாடை மற்றும் தீபாவளிக்கு தேவை யான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு மதுரைக்கு வருகின்றனர்.
முக்கிய விற்பனை இடங்களாக இருக்கக்கூடிய விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதி களில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் வந்து செல்வதினால் இந்த பகுதியில் திருட்டை கண் காணிக்கவும், பொது மக்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வருவதற்கு ஏதுவாகவும் 50 இடங்களில் 85 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகை யில், பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி தீபாவளி பொருட்களை வாங்கி செல்வதற்கு சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், குற்றப்பிரிவு போலீசார் என ஆயி ரத்துக் கும் மேற்பட்டோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.
உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி யாரும் பொதுமக்களின் பொருட்களை திருடன் முயற்சித்தால் அவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மேலும் பழைய குற்ற வாளிகளை கண்காணிப்பு காமிரா மூலம் கூட்டத்தை பயன்படுத்தி திருடன் முயற்சிக்கின்றனாரா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நவீன மய மாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரின் 32 முக்கிய சந்திப்புகளில் ஏற்கனவே உள்ள தானியங்கி சிக்னல்களை போல் இதிலும் டிஜிட்டல் நேரம் காட்டப்பட்டு கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்.
- மின்விளக்குகள் எரியாததால் திருப்பரங்குன்றம் நிலையூர் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர், கைத்தறிநகரில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து நாள் ேதாறும் ஏராளமானோர் வேலைக்கு நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவி கள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து நிலையூர் செல்லும் மெயின்ரோடு பெரும் பாலான நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும். தற்போது இந்த ரோட்டில் மின்விளக்கு களும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருப்ப ரங்குன்றம்-நிலையூர் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் பெண், குழந்தைகளுடன் செல்வோர்கள் அச்சத்து டன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், வழிப் பறி, பணம் பறிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபடு கின்றனர். போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.
எனவே திருப்பரங் குன்றம்-நிலையூர் ரோட்டில் மின்விளக்குகள் பழுதை சரி செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
- நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது சேதமடைந்து உள்ளது.
குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது அறு வடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் அழுகியது. இத னால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில் கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி நடந்தது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப் பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டதின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறை களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவ லக வேலை நாட்களில் விலையின்றி கொள்ளலாம். பெற்று விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்க ளுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி, துணை, இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
- மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரெயில் திரு நெல்வேலியில் இருந்து பய ணத்தை துவக்கி திருநெல்வே லியில் முடிக்கும்.
ஆனால் இந்த சிறப்பு ரெயில் சென்னை எழும்பூ ரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பய ணத்தை முடிக்கிறது. இதன்படி (நவம்பர் 9) நாளை சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூ ரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் திரு நெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திரு நெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும் பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
- வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் பல மாதங்களாக வீட்டில் யாரும் வசிக்காமல் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.
- எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் யாரும் செல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மதுரை:
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழை தண்ணீர் சாலைகளிலும், முக்கிய பகுதிகளிலும் சூழ்ந்து காணப்பட்டது. இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை நீடித்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
இதற்கிடைய தொடர் மழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதியான காக்காதோப்பு பகுதியில் பழமையான 2 மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் பல மாதங்களாக வீட்டில் யாரும் வசிக்காமல் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.
இந்த நிலையில் மழை காரணமாக அந்த வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது, நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாலும், எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் யாரும் செல்லாததாலும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் திலகர் திடல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கட்டிட இடிபாட்டுக்குள் யாரும் சிக்கி உள்ளார்களா என்று தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக யாரும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பகுதியில் பழமையான 2 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது.
- மதுரையில் ஒருசில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் லேசான வெயில் அடித்த போதிலும், மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பெய்யும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அதேவேளையில் இந்த தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளையும் தொடங்க விவசாயிகள் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. இரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நீண்ட நேரம் பெய்த மழை காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைப் பள்ளங்களிலும் மழை நீர் தேங்கியதால் மதுரையில் முக்கிய சாலைகளில் கூட குளம் போல தண்ணீர் தேங்கியது.
இதனிடையே அதிகாலையிலும் மழை தொடர்ந்து பெய்தது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், கூடல்நகர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
மதுரையில் இன்று காலை பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மாணவ, மாணவிகள் வீடுகளில் முடங்கினர்.
ஆனால் காலை 7.30 மணிவரை அறிவிப்பு வராததால் மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களும் போவரத்து நெரிசலில் சிக்கியதால் பள்ளி மாணவ-மாணவிகள் காலதாமதத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.
இதற்கிடையே மதுரையில் ஒருசில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.
- மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
மதுரை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மகாலில் மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியை ஐ.எப்.எப். செயலாளர் ஜெகந்நாதன், எம்.டி.ஐ.எப்.எப். செயலாளர் தனசேகரன் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் மிஸ்டர் மதுரையாக அகதியன் வெற்றி பெற்றார். மதுரை சிறந்த ஜிம் விருதை அண்ணாநகர் நியூ வேர்ல்ட் ஜிம் உரிமையாளர் தனசேகரனுக்கு கிடைத்தது. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை மனோஜ்குமார் தட்டி சென்றார்.
மதுரை மாவட்ட சிறுபான்மை தலைவர் முன்னாபாய், தொழிலதிபர் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.






