என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கெலமங்கலம் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 26). சூளகிரி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் மூர்த்தி (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியில் இருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மூர்த்தி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஓசூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் தசரதன் (வயது 27). இவர் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை யானை நடமாடியதை கண்டு பொதுமக்கள் பீதியடைந்தனர்.
    சூளகிரி:

    ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து நேற்று ஒரு யானை பிரிந்து ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம் வழியாக காமன்தொட்டி கிராமத்திற்குள் புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை யானை நடமாடியதை கண்டு பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் அந்த யானையை மீண்டும் சான மாவு காட்டுக்கு விரட்டினர்.
    வனப்பகுதியில் சந்தன மர வேர்களை தோண்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தொழுவபெட்டா காப்புக்காட்டில் உள்ள காரக்கிணறு பெல்லட்டி பாதையில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்த சந்தனமர வேர்களை தோண்டிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நலபரம்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 67), தேன்கனிக்கோட்டையை அடுத்த போப்பனூரை சேர்ந்த மல்லப்பன் (65) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் சந்தனமர வேர்கள் மற்றும் கடப்பாரை, கொடுவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு தலா, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 60). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சக்கரவர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரிகை போலீசார் ஏ.செட்டிப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மேன்சன்தொட்டியை சேர்ந்த ராஜேஷ் (வயது 30), கங்கசந்திரம் சீனிவாசன் (26), அத்திமுகம் கணேஷ் (23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அத்திமுகம் தினேஷ், சூளகிரி திவாகர், கும்பளம் லோகேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கட்டிட மேஸ்திர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி;

    வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியை கடந்த 1-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். 

    அதில் தனது மகளை வேப்பனப்பள்ளியை அடுத்த குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுரேஷ்குமார் (வயது 22) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றுள்ளார். அவரிடமிருந்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காவேரிப்பட்டணம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து 21 ஆண்டுகளாக அரசு ஆசிரியராக பணியாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999-ம் ஆண்டு ஆசிரியர் பணி பெற்றார். பின்னர், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளிபுதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பணியில் இருந்தார்.

    இந்தநிலையில் அவர், போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019-ம் ஆண்டு குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    அதில், ராஜேந்திரன், 10-ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்தது. மேலும், போலியாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் கலாவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம் புகார் அளித்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜேந்திரன் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த அவரை காவேரிப்பட்டணம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நடிகர் கமலஹாசன் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்கிறார். அதனை நினைத்தால் சிரிப்பு வருகிறது என்று கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள உத்தனப்பள்ளி மற்றும் அகரம் முருகன் கோவில் ஆகிய இடங்களில் அதிமுக கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது கமல்ஹாசன் கூட அரசியலுக்கு வந்துள்ளார். அவர் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்கிறார். அதனை நினைத்தால் சிரிப்பு வருகிறது. கமல்ஹாசன், கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்லவேவில்லை,

    அப்படி என்றால் கருணாநிதி எவ்வளவு மோசமான ஆட்சியை செய்துள்ளார்? அந்த கருணாநிதியின் மகன் நம்மை எதிர்த்து நிற்கிறார். எனவே அவர் நமக்கு தேவையில்லை. கமலஹாசனின் கூற்றுப்படியும் அவர் தேவையில்லை.

    எம்.ஜி.ஆர் ஆட்சி வேண்டும் என்றால் நாம் தான் வரவேண்டும்.

    கமலஹாசனுக்கு அரசியலில் தகுதி கிடையாது. அவர் தனிமனித வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர். தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கம் இல்லாத ஒரு மனிதன் பொது வாழ்க்கையில் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    கந்திகுப்பம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பர்கூர்:

    கந்திகுப்பம் அடுத்த மணியம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 72). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஆண்டியூரான் கொட்டாயை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 35). இவருடைய மகன் பாலாஜி (18). இவர் நாட்டாகவுண்டனூரில் உள்ள தனது பாட்டி பூஞ்சோலையின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு உள்ள நண்பர் உதயகுமார் வீட்டினுள் அவர் சென்று விட்டு, வெளியில் வரும்போது வீட்டின் வெளியே தொங்கி கொண்டிருந்த மின்சார வயரை தெரியாமல் தொட்டு விட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பாலாஜி துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தந்தை வேடியப்பன் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே உள்ள வீராட்சி குப்பம் புதுரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று கல்லாவியில் இருந்து வீராட்சி குப்பத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் மொபட்டில் வைத்திருந்த நீளமான மூங்கில் குச்சி எதிரில் வந்த அரசு பஸ் மீது மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரம் பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×