என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் சசிகலா ஓசூரில் தங்குகிறாரா? என்பதற்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பி.பழனியப்பன் பதில் அளித்துள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே நேற்று கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு தலைமை தாங்கினார்.

    இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சசிகலா, விரைவில் வருவது நல்ல செய்தியாகும். கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் அ.ம.மு.க.வினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

    சசிகலாவை தமிழகமே திரண்டு வந்து வரவேற்க காத்திருக்கிறது. இந்த 2021-ஆம் ஆண்டு அ.ம.மு.க.விற்கும், தமிழக மக்களுக்கும் நிச்சயம் நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும். சசிகலா, எந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை,

    எனவே, அவர் விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா? அல்லது வேறெங்கு தங்குவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அப்போதைய கால, சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும். சசிகலா, அ.தி.மு.க.வில் சேருவாரா அல்லது அ.ம.மு.க.வில் தொடர்வாரா? என்பது அவர் வரும்போது தான் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    சூளகிரி அருகே வேன் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாதர்சனப்பள்ளியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22), வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி-சூளகிரி சாலையில் பீரேபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் விக்னேஷ் பலத்தகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    நாகரசம்பட்டி போலீசார் அகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 35), வரதராஜன் (46), கோவிந்தன் (40), விக்னேஷ் (30), தசராமன் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
    ராயக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி அமுதா (வயது 45). கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 6-ந் தேதி அமுதா எலிக்கு வைக்கும் பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து பெண்ணின் தம்பி பழனிவேல் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போச்சம்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    போச்சம்பள்ளி போலீசார் போச்சம்பள்ளி- சந்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற போச்சம்பள்ளி புளியம்பட்டி பக்கமுள்ள திருவயலூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 52) என்பவரை கைது செய்தனர். பாரூர் போலீசார் மஞ்சமேடு பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற மஞ்சமேட்டை சேர்ந்த பழனி (48) என்பவரை கைது செய்தனர்.

    கெலமங்கலம் போலீசார் அக்கொண்டப்பள்ளி பஸ்நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கெலமங்கலம் அண்ணா நகர் பழனி (38) என்பவரை கைது செய்தனர். ஊத்தங்கரை போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற ஊத்தங்கரையை சேர்ந்த சல்மான்கான் (27) என்பவரை கைது செய்தனர். காவேரிப்பட்டணம் போலீசார் கொசமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற கிருஷ்ணகிரி மேல் தெரு வினோத்குமார் (38) என்பவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் 5 ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மேல்கரடிகுறியை சேர்ந்த சுரேஷ் (24) என்பவரை கைது செய்தனர்.
    வேப்பனஹள்ளி அருகே எருது விடும் விழா நடந்து. அப்போது வீட்டு சுவரில் நின்று சுமார் 15க்கும் மேற்பட்டோர் பார்த்துக்கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் இறந்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.

    இந்த எருது விடும் விழாவை காண வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர், பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் திரண்டு வந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உமாசேகர் என்பவரின் வீட்டு சுவரில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று எருது விடும் விழாவை பார்த்தனர். மேலும் கீழ்பகுதியிலும் சுமார் 20 பேர் நின்று வேடிக்கை பார்த்தனர்.

    அந்த வீட்டின் சுவர் மீது இளைஞர்களும், பொதுமக்களும் ஏறி நின்றதால் திடீரென கட்டிடம் அதிக பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.

    அப்போது கட்டிடத்தின் மேற் கூரையில் இருந்த 15-க்கும் மேற்பட்டோர் அப்படியே கீழே விழுந்தனர். மேலும் கட்டிடத்தின் கீழே நின்றிருந்த சிலரும் காயம் அடைந்தனர்.

    இதில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நின்ற 9 வயது சிறுமி மேகாஸ்ரீ மற்றும் முனிபாலா (62) ஆகிய 2 பேரும் இடி பாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

    இதில் கீதா (35), லாவண்யா (24), ஷோபா, ராமமூர்த்தி (20), நாகம்மா(35), அக்‌ஷயா (7), அருண் (24), நந்தினி (10), லோகேஷ் (10), அஸ்வதம்மா(60), ஜீவா (6), கலைவாணி (13), ராமரத்தினம் (38), லதா (35), நதியா (8) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர்,டி.எஸ்.பி. சரவணன், வேப்பனஹள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மற்றும் வேப்பனஹள்ளி தொகுதி முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.

    மேலும் எருதுவிடும் விழாவை முறையான அனுமதி பெறாமல் நடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த பத்மநாதன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் 5 பேரும் கிருஷ்ணகிரி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் எருது விடும் விழாவை நடத்திய ஊர் தலைவர்கள் நாகராஜ், மற்றும் சிவா ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சியப் போக்கு காரணமாக அவர் இறந்ததாக கூறிய உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓசூர்:

    ஒசூர் அரசு மருத்துவமனை கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த மாதம் 30- ந் தேதி அன்று ஒசபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 26) என்பவர் பிரசவத்துக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், குழந்தையின் தலையை துண்டித்து வெளியே எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரசவத்தில் தாய் இறந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஓசூர் அடுத்த தொடுதேப் பள்ளியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பவித்ரா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 3-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பவித்ராவுக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் டாக்டர்கள் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை பவித்ராவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். பிறகு இரவு 7 மணியில் பவித்ராவின் உடல்நிலை மோசமானது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதை கேள்விப்பட்ட பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் அலட்சியப் போக்கு காரணமாக பவித்ரா இறந்து விட்டதாக குற்றம்சாட்டி, திடீரென ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அவர்களிடம் மருத்துவமனை முதன்மை அலுவலர் பூபதி, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பவித்ராவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்,

    பர்கூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    பர்கூர் போலீசார், பூமாலை நகர் பகுதியில் உள்ள கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது 25), வல்லரசு (22), வேலு (35), மணி (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சென்னம்மாள் (வயது 24). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். தனக்கு வேலை இருப்பதாக மாரியப்பன் கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சென்னம்மாள் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தனது தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னம்மாளின் அண்ணன் பெரியண்ணன் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    குருபரப்பள்ளி போலீசார், பந்தாரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றபோது அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் வெங்கட்டப்பன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரிகை போலீசார் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கோவில் தெருவை சேர்ந்த கிரண்குமார் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை விற்ற சுரேஷ்குமார் (41), பாகலூர் பாஸ்கர் (52), கமக்காலப்பட்டி மந்திரி (52), அரசம்பட்டி சந்தோஷ் (38), தேன்கனிக்கோட்டை அருகே மேல்கொட்டாய் சிவக்குமார் (55) என 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த மேலேரிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) கட்டிட மேஸ்திரி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுரேஷ் தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கெலமங்கலம் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 26). சூளகிரி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் மூர்த்தி (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியில் இருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மூர்த்தி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×