என் மலர்tooltip icon

    கரூர்

    • கரூரில் தனியாக நடந்து சென்றவரிடம் தங்க செயின் பறிப்பு
    • பெயிண்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்

    கரூர், 

    கரூர், ரத்தினம் சாலையை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 39) கூலி தொழிலாளி. இவர் திருமாநிலையூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருமாநிலையூர் தெற்கு தெருவை சேர்ந்த பெயிண்டர் ராமன் (வயது 33) என்பவர், பாலமுருகன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து, பாலமுருகன் கொடுத்த புகார்படி, தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிந்து , பெயிண்டர் ராமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • கரூர் மாவட்டம் புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது
    • ஆனி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். ஆறுநாட்டார் மலை என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும், புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான், சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகிய சுவாமிகளின் போற்றி பாடியபடி புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

    • புகழூர் நகராட்சியில் சமுதாய சுகாதார வளாகம் திறக்கப்பட்டது
    • ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் காலனி பகுதியில் சமுதாய சுகாதார வளாகம் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி கமிஷனர் கனிராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சாரல் மழை பெய்தது
    • குளிர்ந்த மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நன்செய்புகளூர், கட்டிபாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், கொங்கு நகர், ஆலமரத்து மேடு, அண்ணா நகர், காந்தி நகர், காகிதபுரம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று, பலத்த இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், சாரல் மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • கரூர் மாவட்டத்தில் கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
    • 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனரின் டிஜிட்டல் சர்வே நடவடிக்கையை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் கடந்த 10 நாட்களாக க.பரமத்தி அடுத்த புதுக்கநல்லி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 00-க்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர், லாரி, கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-குவாரிகளை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் குவாரிகளில் டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் அளவீடுகளில் முரண்பாடு உள்ளது. குவாரி உரிமையாளர்களை நேரில் வைத்துக் கொண்டு அளவீடுகள் செய்யாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இந்த போராட்டம் காரணமாக கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பெரு நிறுவனங்கள் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தேவையான மூலப்பொருட்களான ஜல்லிக்கற்கள் குவாரிகள் மூலமாக செல்வதால் அந்த வேலைகளிலும் தடை ஏற்படும். எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எங்களது சங்கம் துணை நிற்காது. கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களில் உடன்பாடு இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையில்லா சான்று வாங்கி தான் தொழில் நடத்துகிறோம். ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குறைகளை இப்போது கூறுகின்றனர் என்றார்.

    • மன நலம் பாதித்த வாலிபர் மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் கடவூர் அருகே உள்ள மணக்காட்டுநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாநாயக்கர். இவரது மகன் சின்னச்சாமி (வயது 33). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சின்னச்சாமி வெகுநேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து சின்னச்சாமியின் ெபற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னச்சாமியின் தாய் பிச்சையம்மாள் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சின்னச்சாமியை தேடி வருகின்றனர்.

    • பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

    கரூர்

    கரூர் தெற்கு காந்திகிராம் ஜே.ஜே. நகர் பகுதியில் பசுபதிபாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 23), ரவிச்சந்திரன் (43), பிச்சைமுத்து (41) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளித்தலை நகர புறவழிச்சாலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
    • அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளனர்

    கரூர்

    குளித்தலையில் அண்ணா நகர் பகுதியில் குளித்தலை நூலகம் முதல் ரெயில்வே கேட் வரை செல்லும் நகர புறவழிச்சாலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் தற்போது நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலையில் நடைபாதை அமைக்கும் இடத்தில் சாலையோரம் பல்வேறு மரங்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்க்கப்பட்டு தற்போது இந்த மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளது.இந்தநிலையில் அந்த பகுதியில் நடைபாதை பணிகள் நடப்பதால் அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் சில மரங்களில் குறியீடு இடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்த நபர்கள் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பால் ஊற்றி மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் மரங்களை வெட்டாமல் பணிகள் மேற்கொள்ள அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் கரியாம்பட்டி, சேமங்கி, அத்திப்பாளையம், உப்புபாளையம் புன்னம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தோட்டத்தில் ரத்தக்காயத்துடன் விவசாயி பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள திருமாணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவா் ராஜலிங்கம் (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லையாம். இதையடுத்து ராஜலிங்கத்தின் மகன் ரத்தினவேல் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, ராஜலிங்கம் கிணற்றின் அருகே ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க.கல்வெட்டில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
    • நகராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஹைஸ்கூல்மேடு பகுதியில் புகழூர் நகர திமுக சார்பில் திமுக கொடிகம்பம் மற்றும் உயரமான கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டில் கரூரில் நடைபெறும் கரூர் மாற்றுத்திற்கான மாநாடு மற்றும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதற்கான விளம்பர வால்போஸ்டரை பாஜகவினர் ஒட்டி இருந்தனர்.இதுகுறித்து புகழூர் நகராட்சித் தலைவரும், நகரக் கழக செயலாளருமான சேகர் என்கிற குணசேகரனுக்கு அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தகவல் தெரிவித்தனர். உடனே ஏராளமான திமுகவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்குள்ள திமுக கல்வெட்டில் பாஜகவினர் விளம்பர வால்போஸ்டர் ஒட்டி இருப்பது தெரிய வந்தது.இது குறித்து உடனடியாக மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான் மற்றும் திமுகவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மூலம் உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கல்வெட்டில் வால் போஸ்டர்களை ஒட்டிய சம்மந்தப்பட்டவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்கள் ஒட்டிய போஸ்டர்களை அவர்கள் மூலம் சுத்தம் செய்ய வைத்தனர். இதனால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கரூரில் நடந்த மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
    • கர்நாடகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லக் கூடாது என கூறினார்.

    கரூர்:

    கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் கரூர் மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசியல் கெட்டு போய் இருக்கிறது என்றால் அதற்கும் மையப்புள்ளியாக கரூர் மாறியிருந்தது. ஓட்டுக்கு பணம் என்ற அவமானம் கரூரில் எப்போதும் இருந்தது. அதற்கு இங்குள்ள அரசியல் காரணம்.

    ஆன்மிகத்திற்கு பெயர் போன மண், தற்போது அரசியல்வாதிகளின் சில பேரின் கெட்ட செயலால் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஊராக கரூர் மாறியிருக்கிறது. இழந்த பெருமையை கரூர் திரும்ப எடுக்க வேண்டும். இதனால் தான் பா.ஜ.க. மாநாடு மாற்றத்திற்கான மாநாடு என பெயர் வைத்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்கிறார்கள். தற்போது கூட்டத்திற்கும் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் தி.மு.க. முழுவதுமாக அழியும் நேரம் வந்துவிட்டது. எங்கேயும் தி.மு.க.வின் அடிச்சுவடி தெரியாத இல்லாத கரூர் மாவட்டமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

    தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழகத்திற்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க்கட்சி கூட்டத்திற்கு கர்நாடகாவிற்கு வரும் 11-ம் தேதி செல்வார் என பார்ப்போம். முதலமைச்சர் கர்நாடகாவிற்கு சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்குள் வரமாட்டார். வருவதற்கும் நாங்கள் விடமாட்டோம். தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கூறிய பிறகும், அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு தமிழ் இனத்தை அடமானம் வைத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக முதலமைச்சர் சென்றால் பா.ஜ.க. அதனை பார்த்துக்கொண்டு இருக்காது. கோட்டையை முற்றுகையிடுவது மட்டுமில்லை. நீங்கள் எப்படி கோட்டைக்குள் செல்கிறீர்கள் என பார்ப்போம். தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×