என் மலர்
கரூர்
- கரூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில்ம களிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது
- கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி சார்பில் வளர்பிறை, அப்பாஸ், அல்லி, ரோஜா, ரோஜா, சர்க்கரை பாவா, அன்னை இந்திரா, ஆலீப் , துளசி, ஜாம்யாலம், ரோஜா, ஹாஸ்லீன், ஹக் ஆகிய பள்ளப்பட்டியை சேர்ந்த 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார். பள்ளப்பட்டி இந்தியன் வங்கி மேலாளர் வாலண்டினா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குளித்தலையில் பெண் பலியான விபத்தில்,லட்சக்கணக்கான பணம் சிதறி கிடந்தது
- சிதறி கிடந்த லட்சக்கணக்கான பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் சேமலாதேவி(வயது 40). இவரின் கணவர் ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். சேமலாதேவியின் உறவினர் வெங்கடேஷ் என்பவரது மனைவி சித்ரா(வயது 30). இவர்கள் இருவரும் ஒரு ஸ்கூட்டரில் தண்ணீர் பள்ளி சென்று விட்டு கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அதே வேளையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா முருங்கை கிராமம் பூட்டி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் சஞ்சீவி(வயது 23), அதே ஊரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மகன் சுதீப்(வயது 27) ஆகிய இருவரும் ஒரு ஃபோர்டு காரில் குளித்தலை வழியாக திருச்சி சென்று கொண்டிருந்தனர். காரை சஞ்சீவி ஓட்டி வந்துள்ளார். கார் குளித்தலை அருகே தனியார் பள்ளி அருகில் வரும்போது, கார் டயர் திடீரென வெடித்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார், சேமலாதேவி, சித்ரா வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கார் மற்றும் ஸ்கூட்டர் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சேமலாதேவி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.ஸ்கூட்டி பின்னால் அமர்ந்து வந்த உறவினர் சித்ரா படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்தில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிதறி கிடந்துள்ளது.விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாலகுமார் மற்றும் மருத்துவ உதவியாளர் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த 3 லட்சத்து 83 ஆயிரத்து 370 ரூபாய் மற்றும் செல்போன்கள், 11 பேங்க் பாஸ் புத்தகங்கள், 12 ஆதார்கார்டுகள், 6க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், ஆகியவற்றை கைப்பற்றி மருத்துவமனையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.ஃபோர்டு காரில் வந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ரோட்டில் சிதறி கிடந்த பணம் மற்றும் பொருட்களை, 108 வாகன ஓட்டுநர், உதவியாளர் எடுத்து உறவினரிடம் ஒப்படைத்ததை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட உள்ளது
- போட்டியில் கலந்து கொள்ள கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு விடுத்தார்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை 18-ம் தேதி "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இப்போட்டியில்முதன்மைக் கல்வி அலுவலரால்தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதற்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தார் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேட்டமங்கலம், கோம்புப் பாளையம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தார் சாலையில் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் பறிக்கப்பட்டதால் தார் சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் குழாய்கள் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது. இதனால் குடியிருப்பு வீடுகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் குடிநீர் குழாயை உடைத்த ஒப்பந்ததாரர் உடனடியாக தார் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு மின் ஆட்டோ வழங்கப்பட்டது
- மனு செய்த ஒரே வாரத்தில் கலெக்டர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மின் ஆட்டோ வழங்கினார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, பள்ளபட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளி திருநாவுக்கரசு மின் ஆட்டோ வாங்குவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். ஒரே வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசின் மானியமாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரமும், பள்ளப்பட்டி இந்தியன் வங்கி கிளை சார்பாக ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் கடன் உதவியுடன் மொத்தம் ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் மின் ஆட்டோ வழங்கப்பட்டு உள்ளது.
பின்னர் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் முதன் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளியாக தேர்வு செய்தமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளபட்டி இந்தியன் வங்கி மேலாளர் வாலண்டினா, ஆகியோர் உடன் இருந்தனர்.
- விதைக்கான விதிகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என விதைச்சான்று அதிகாரி தெரிவித்துள்ளார்
- பயிர்களின் ஆதார நிலை விதைகளின் இனத்தூய்மை 99 சதவீதம் இருக்க வேண்டும்.
நொய்யல்,
விதைச்சான்று உதவி இயக்குநர் மணிமேகலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் விதை மூட்டைகளில் விதை உற்பத்தியாளர்கள் அட்டை, விதைசான்று துறை வழங்கிய சான்று அட்டை என இரு அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். சான்று அட்டையில் விதையின் ரகம், நிலை, விதைச்சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதிநாள், அளவு உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். பயிர்களின் ஆதார நிலை விதைகளின் இனத்தூய்மை 99 சதவீதம் இருக்க வேண்டும். சான்று விதைகளின் இனத்தூய்மை 98 சதவீதம் இருக்க வேண்டும். சான்று அட்டை பொருத்திய விதைகளை பயிரிடுவதால் அதிக முளைப்புத் திறன், சீரான வளர்ச்சி, கலப்படம் இல்லாத விதைகள், ஒரே நேரத்தில் அறுவடை செய்து அதிக மகசூல் பெறலாம். எனவே விவசாயிகள் சான்று அட்டை பொருத்திய விதிகளையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் வாகன சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், குட்டக்கடை, காகிதபுரம், வேலாயுதம்பாளையம், புகளூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது, வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.
அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்கின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும். எனவே போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கரூர் மாவட்ட விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டால் மண்வளம் மேம்படும் என வேளாண் அறிவியல் விஞ்ஞானி தெரிவித்தார்
- ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பசுந்தாள் உரப்பயிர்கள் எல்லா வகை மண்ணுக்கும் ஏற்றது. ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. தண்ணீர் பாய்ச்சும் போது செழிப்பாக வளரும். விதைத்த 25 முதல் 45-வது நாளில் பூக்க ஆரம்பித்ததும் வயலில் மடக்கி உழ வேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 5 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைக்கும்.களிமண், களர் மண், உவர் நிலம், நீர் தேங்கும் நிலம் போன்றவற்றில் வளரக் கூடியது. விதைத்து 35-45 வது நாளில் பூக்க ஆரம்பித்ததும் 4.5 முதல் 8 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைக்கும்.
பசுந்தாள் உர விதைகளை நிலத்தை நன்றாக புழுதியாக்கிய பின்னர் விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக செழித்து வளரும். பசுந்தாள் உரப்பயிரானது மண் கட்டமைப்பு மற்றும் நிலப்பண்பாட்டை மேம்படுத்துகிறது. நிலத்தை உழும் போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வருகிறது. காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. விவசாயிகள் தங்கள் வயல்களில் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு மண் வளத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய கரூர் சத்துணவு பெண் ஊழியர்
- மகன் பாடம் கற்று தந்ததாக பெண் பெருமிதத்துடன் கூறினார்
கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஹீலா பானு (வயது 51). இவர் பூவம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு 9-ம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தால், 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனிதேர்வராக தேர்வு எழுத விண்ணப்பித்து, தேர்வு எழுதியுள்ளார். இதில் ஆங்கிலம், சமூக அறிவியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் தோல்வி அடைந்து இருந்தார். இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் துணைத்தேர்வில் தோல்வி அடைந்த 3 பாடங்களுக்கு விண்ணப்பித்தார். பின்னர் அதில் தமிழ், கணிதம் ஆகிய தேர்வு எழுதினார். நேற்று கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் பாடத்தேர்வையும் எழுதி உள்ளார்.இதுகுறித்து ராஹீலா பானு கூறும்போது, நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுத எனது மகன் சாகுல் அமீது, பல்வேறு முயற்சிகளை எடுத்து எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து, தேர்விற்கு விண்ணப்பித்து கொடுத்தார் என்றார்.
- குளித்தலை அருகே அரசு தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்
- ரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் குளித்தலை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தோகைமலை, கழுகூர் ஊராட்சி கன்னிமார் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தையும், தொடர்ந்து நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட நங்கவாரத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தையும், சிவாயம் ஊராட்சி இரும்பூதிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கூடலூர் ஊராட்சி பொம்மநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், கீழவெளியூர் ஊராட்சி கீழவெளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடுதிரை வகுப்புகளை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்,உடன் குளித்தலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூரியனூர் சந்திரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, செயல் அலுவலர் வேல்முருகன், நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் முத்து என்கின்ற சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி வை.புதூர் பெரியசாமி, குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன் கழுகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, தோகைமலை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சசிகுமார், பொதுக்குழு உறுப்பினர் தர்மர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், ஒப்பந்தக்காரர் வேலுச்சாமி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்,ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன திட்டம் பயன் குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடைபெற்றது
- ரூ.4.00 கோடிக்கான கடன் அனுமதி
கரூர்,
யூகோ வங்கிகடந்த 30-ம் தேதி அன்று, கரூர் மாநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சென்றடைதல் திட்டத்தை நடத்தியது.இக்கூட்டத்தில் யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர்ஜி.ஜோதிஷ் மற்றும் யூகோ வங்கியின் கோவை எஸ்எம்இ-ஹப் தலைவர் ராம் பிரகாஷ் மிஸ்ரா, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.எஸ் சங்கரலிங்கம் மற்றும் கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அன்போலி ஆர். காளியப்பன் மற்றும் ஸ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தின் தலைமை வழிகாட்டியான, பி.அசோக் சங்கர், இயக்குநர் கிசின் டெக் ஆகியோர் கலந்து கொண்டனர்.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியில் வங்கியின் பங்கு பற்றி பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினர்.ஏற்றுமதி துறை தொழில் முனைவோர் மற்றும் யூகோ வங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். கிளை மேலாளர்கே.வினோத் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பிரிவுகளுக்கு இருக்கும் பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கினார். பங்கேற்பாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.மண்டல மேலாளர்ஜி.ஜோதிஷ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4.00 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார்.
- கரூர் மாவட்டத்தில் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை
- வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்
கரூர்,
கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,கரூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்டை குழந்தைகள் பல்துலக்கும் பேஸ்ட் என தவறாக கருதி உபயோகப்படுத்தும் அபாயம் உள்ளது.இதற்கு, எதிர்வினை மருந்து இல்லாததால் மத்திய, மாநில அரசுகள் இதனை தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்துள்ளது.எனவே மஞ்சள் பாஸ்பரன் எலி பேஸ்ட்டை (ரேட்டல்) விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்குபொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனே மாவட்ட நிர்வாகம் அல்லது அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம். பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர கடை விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலிபேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால், பூச்சி மருந்து 1968ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






