என் மலர்
உள்ளூர் செய்திகள்

தார் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதி
- தார் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேட்டமங்கலம், கோம்புப் பாளையம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தார் சாலையில் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் பறிக்கப்பட்டதால் தார் சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் குழாய்கள் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது. இதனால் குடியிருப்பு வீடுகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் குடிநீர் குழாயை உடைத்த ஒப்பந்ததாரர் உடனடியாக தார் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






