என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டால் மண்வளம் மேம்படும்-வேளாண் அறிவியல் விஞ்ஞானி தகவல்
- கரூர் மாவட்ட விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டால் மண்வளம் மேம்படும் என வேளாண் அறிவியல் விஞ்ஞானி தெரிவித்தார்
- ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பசுந்தாள் உரப்பயிர்கள் எல்லா வகை மண்ணுக்கும் ஏற்றது. ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. தண்ணீர் பாய்ச்சும் போது செழிப்பாக வளரும். விதைத்த 25 முதல் 45-வது நாளில் பூக்க ஆரம்பித்ததும் வயலில் மடக்கி உழ வேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 5 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைக்கும்.களிமண், களர் மண், உவர் நிலம், நீர் தேங்கும் நிலம் போன்றவற்றில் வளரக் கூடியது. விதைத்து 35-45 வது நாளில் பூக்க ஆரம்பித்ததும் 4.5 முதல் 8 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைக்கும்.
பசுந்தாள் உர விதைகளை நிலத்தை நன்றாக புழுதியாக்கிய பின்னர் விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக செழித்து வளரும். பசுந்தாள் உரப்பயிரானது மண் கட்டமைப்பு மற்றும் நிலப்பண்பாட்டை மேம்படுத்துகிறது. நிலத்தை உழும் போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வருகிறது. காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. விவசாயிகள் தங்கள் வயல்களில் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு மண் வளத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






