என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதறி கிடந்த லட்சக்கணக்கான பணத்தை ஒப்படைத்த டிரைவர்
- குளித்தலையில் பெண் பலியான விபத்தில்,லட்சக்கணக்கான பணம் சிதறி கிடந்தது
- சிதறி கிடந்த லட்சக்கணக்கான பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் சேமலாதேவி(வயது 40). இவரின் கணவர் ஜெகதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். சேமலாதேவியின் உறவினர் வெங்கடேஷ் என்பவரது மனைவி சித்ரா(வயது 30). இவர்கள் இருவரும் ஒரு ஸ்கூட்டரில் தண்ணீர் பள்ளி சென்று விட்டு கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அதே வேளையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா முருங்கை கிராமம் பூட்டி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் சஞ்சீவி(வயது 23), அதே ஊரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மகன் சுதீப்(வயது 27) ஆகிய இருவரும் ஒரு ஃபோர்டு காரில் குளித்தலை வழியாக திருச்சி சென்று கொண்டிருந்தனர். காரை சஞ்சீவி ஓட்டி வந்துள்ளார். கார் குளித்தலை அருகே தனியார் பள்ளி அருகில் வரும்போது, கார் டயர் திடீரென வெடித்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார், சேமலாதேவி, சித்ரா வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கார் மற்றும் ஸ்கூட்டர் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சேமலாதேவி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.ஸ்கூட்டி பின்னால் அமர்ந்து வந்த உறவினர் சித்ரா படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்தில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிதறி கிடந்துள்ளது.விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாலகுமார் மற்றும் மருத்துவ உதவியாளர் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த 3 லட்சத்து 83 ஆயிரத்து 370 ரூபாய் மற்றும் செல்போன்கள், 11 பேங்க் பாஸ் புத்தகங்கள், 12 ஆதார்கார்டுகள், 6க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், ஆகியவற்றை கைப்பற்றி மருத்துவமனையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.ஃபோர்டு காரில் வந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ரோட்டில் சிதறி கிடந்த பணம் மற்றும் பொருட்களை, 108 வாகன ஓட்டுநர், உதவியாளர் எடுத்து உறவினரிடம் ஒப்படைத்ததை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






