என் மலர்
கரூர்
- அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
- இளநிலை உதவியாளர் சிவா அடிக்கடி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறுவார்.
கரூர்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் சிவா (வயது 43) தனது பணியை ராஜினாமா செய்தார்.
இளநிலை உதவியாளர் சிவா அடிக்கடி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறுவார். 20 நாள் மருத்துவ விடுப்பில் இருந்து அவர் திரும்பிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேர் உடல்களை மீட்டனர்.
காரில் வந்தவர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோரும் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
செல்வராஜ் குடும்பத்தினர் ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- கழுத்தறுக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குளித்தலை:
கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பழகியதாக தெரிகிறது. நேற்று இரவு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தனியாக வரவழைத்ததோடு காட்டுப் பகுதியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
மாணவி அலறியடித்து தப்பி வீட்டிற்கு வந்தார். தனது தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து பாலவிடுதி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாணவனை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுத்தறுக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கரூரில் 13 வயது சிறுமி பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவின் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி 2வது தளத்தில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கால்கள் செயல்படாமல் போய் விட்டதாக அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
- ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை.
கரூர்:
கரூர்-திருச்சி ரெயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனை அப்பகுதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கலியமூர்த்தி பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறுதி செய்து கொண்டு, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அதனை விரைவாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் சீரமைக்கும் இடத்திற்கு அருகிலும், வாஸ்கோடகாமா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் மாயனூர் ரெயில் நிலையத்திலும், கரூர்-திருச்சி பயணிகள் ரெயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டன.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு தண்டாவாளம் சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன. ரெயில்வே பாதையில் ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் கரூர்-திண்டுக்கல் ரெயில் பாதையில் மர்ம நபர்கள் இரும்பு துண்டு வைத்து தண்டாவாளத்தை சேதப்படுத்திய நிலையில், இன்று தண்டாவாளத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சதி செயல் உள்ளதா என ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). இவருக்கு தமிழரசி (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி சிகரெட் இல்லை என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, மதுபாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசினார். மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால் முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தான்தோன்றிமலை போலீசார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- இன்று நீர் வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 371 கன அடியாக உயர்ந்தது.
- தண்ணீர் முழுவதும் காவிரியில் 4121 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.
கரூர்:
கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டு உள்ளது. இங்கு மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.
இங்கு தண்ணீர் திறந்து விட்டால் கரூர், திருச்சி, தஞ்சையை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
நேற்று மாயனூர் கதவணைக்கு 371 கன அடி நீர் வந்தது. இந்த நிலையில் இன்று நீர் வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 371 கன அடியாக உயர்ந்தது. இதனால் மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இந்த தண்ணீர் முழுவதும் காவிரியில் 4121 கனஅடி, தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.
கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாகுபடி வயல்கள் பாதிக்கப்படும் என்பதால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
- அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மத்திய அரசின் நிறுவனம். அந்த நிறுவனம் தான் யாரெல்லாம் மின் உற்பத்தி செய்கிறார்களோ அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார்கள்
தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
அதனால், தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் கடந்த 7-ந்தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இழிவுபடுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கரூரை சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன் கடந்த 7-ந்தேதி அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை தொடர்ந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கரூர் தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் சீமான் மீது அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வெண்ணமலையில் பொதுமக்களை சீமான் சந்திக்க இருக்கிறார்.
- சீமான் தங்கியிருக்கும் ஓட்டல் முன் போலீசார் குவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதம்.
வெண்ணமலை கோவில் நில பிரச்சனை சம்பந்தமாக மக்களை சந்திக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்தார். இதற்கான கரூர் சென்ற அவர் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த ஓட்டல் முன் திடீரென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களை சீமான் சந்திப்பதை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் குவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த தகவல் அறிந்ததும் சீமான் தங்கியுள்ள ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவியத் தொடங்கினர். சீமானை இவர்கள் சந்திக்க சென்றதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே வாக்குவாத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் பால சுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறிநிலைத்துறை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்பாக வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் கடந்த மாதம் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வியாபாரிகளை சந்திப்பதற்காக சீமான் கரூர் சென்றுள்ளார். சீமானை சந்திக்க பொதுமக்களும் கூடியிருந்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கூடியிருந்தனர். இந்த நிலையில்தான் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார்.
- எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களை கண்டால் இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று ஆதங்கப்பட வைக்கிறது.
ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. மாணிக்கம் திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டித்திற்குள் குழந்தைகள் கற்பிப்பதற்காக வரையப்படு இருந்த தேசிய கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டு இருந்தன.
கொய்யா பழத்துக்கு கோய்யா பலம், வெண்டைக்காய்க்கு வெட்டககாய், வாழை பழத்துக்கு வாழைபலம், தர்பூசனிக்கு தர்புசணி என்று எழுதப்பட்டு இருந்தது. ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டு இருந்தது.
இதனை கண்ட எம்எல்ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இப்படியா தவறாக எழுதுவது என்று பெற்றோர் ஆதங்கப்பட்டனர். இதையடுத்து அவற்றை திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
- நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
வேலாயுதம்பாளையம்:
அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த நாளில், படித்த புத்தகங்கள், கணக்கு வழக்கு எழுதிய டைரிகள், வாகனங்கள், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜை செய்கின்றனர். அந்த பூஜையில் பொரி, முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது. கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்து நேரடியாக, 64 என்ற நெல் ரகங்களை வாங்கி, அதில் இருந்து அரிசி எடுத்து, அதில் சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து காய வைத்து, சர்க்கரை, சோடா சேர்த்து, பொரி தயாரிப்பதை 'ஓருப்பு பொரி' என்கின்றனர்.
அதேபோல் சிகப்பு அரிசியை வாங்கி, அதில் பொரி தயாரிப்பதை 'சிகப்பரிசி பொரி' என்கின்றனர். தவுட்டுப்பாளையம் அருகே சுல்தான்பேட்டையில், விறகுகளில் நெருப்பு மூட்டி செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால், மக்கள் அடுப்பு பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர்.
இதுகுறித்து பொரி தயாரிக்கும் ராமசாமி என்பவர் கூறியதாவது:-
நாங்கள் தயாரிக்கும் பொரி சுவையாக இருக்கும். இதை சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மூன்று தலைமுறையாக பொரி தயாரித்து வருகிறோம். கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால், சுவை மிகுந்தது. கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.
நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால், பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோவில், வீடு , கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர். கையால் தயாரிக்கப்படும் பொரி வகை, உடல் நலத்திற்கு ஏற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.






