என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன.
    • திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகளை பார்வையிடும் அவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர்.

    விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், தாமிரபரணி, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.75 வீதமும், சிறப்பு கட்டணம் ரூ.300 வீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன. கோடை விடுமுறை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களான சபரிமலை சீசன் எனப்படும் சீசன் காலங்கள் ஆகும். கன்னியாகுமரியில் தற்போது இந்த சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் களை கட்டியுள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 1 லட்சத்து 90 ஆயிரத்து 200 பேர் பார்த்து ரசித்து உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    • மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இரணியல்:

    மதுரை பில்லாபுரம் துளசிராம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55), தச்சுதொழிலாளி. இவரது மனைவி சித்ரா (50). இவரது மகன் மாதேஸ்வரன் (23). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பாக்கியராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்பொழுது மாரியப்பன்-சித்ரா தம்பதியினர் குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் மாரியப்பனிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் மாரியப்பனால் பணத்தை திரும்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் மாரியப்பன் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வந்துள்ளார். அப்போது அவர் மாரியப்பனின் வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அப்போது வீட்டின் கதவு வழியாக பார்த்தபோது மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னையில் உள்ள அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னையில் இருந்து மாதேஸ்வரன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார். மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரணியல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குளச்சல்:

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.

    நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,

    இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளைமீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சில விசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும், மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும் இருந்தது
    • நாகர்கோவிலில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    நாகர்கோவில்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நெல்லூர்-மசூலிபட்டினம் இடையே 5-ந்தேதி கரையை கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    குமரி மாவட்டத்திலும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், மயிலாடி பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது.

    இடிச்சத்தம் காதை பிளக்கும் வகையிலும், மின்னல் கண்ணை பறிக்கும் வகையிலும் இருந்தது. கனமழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    அதன் பிறகு மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருக்கிறது. பூதப்பாண்டி, களியல், சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், மாம்பழத்துறையாறு, ஆரல்வாய்மொழி, அடையா மடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய் தது.

    நாகர்கோவிலில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.18 அடியாக உள்ளது. அணைக்கு 425 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 403 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.53 அடியாக உள்ளது. அணைக்கு 225 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.84 அடியாக உள்ளது. அணைக்கு 119 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 15.94 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணையின் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 3.8, பெருஞ்சாணி 2.2, சிற்றார் 1-2, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 15.2, களியல் 25, கன்னிமார் 4.6, கொட்டாரம் 23.6, குழித்துறை 29.6, மயிலாடி 55.4, நாகர்கோவில் 34.2, புத்தன்அணை 1.8, சுருளோடு 5, தக்கலை 7, குளச்சல் 24.8, இரணியல் 13.2, பாலமோர் 7.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 20.4, கோழிப்போர்விளை 5.4, அடையாமடை 21.2, குருந்தன்கோடு 13.4, முள்ளங்கினாவிளை 21.6, ஆணை கிடங்கு 3.2, முக்கடல் 4.6.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை:

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின் (வயது 19), கூலி தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்தவர் வினித் (20), பிளம்பிங் தொழிலாளியும் நண்பர்கள்.

    வினித்துக்கு செல்போன் வாங்குவதற்காக நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காப்பிக்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டி சென்றார். அவர்கள் இருவரும் காப்பிக்காடு பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்று செல்போன் ஆர்டர் செய்தனர்.

    பின்னர் குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வந்தபோது எதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே விபின் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வினித் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை வினித் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர் வீட்டுக்கு சென்ற வாலிபர்கள் வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
    • மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.

    நாகர்கோவில்:

    தென்னிந்திய திருச்சபை சார்பில் நாகர்கோவிலில் வைத்து ஏழு ஏழை பெண்களுக்கான திருமண நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.

    திருச்சபையின் பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த "நம்ம வீட்டு கல்யாணம்" திருச்சபையின் சார்பில் ஏழு நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருச்சபையின் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    தென்னிந்திய திருச்சபை பேராயர் செல்லையா நடத்தி வைத்த இந்த திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.

    • பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
    • பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இக்குழு கூட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார்.

    பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பிஜி பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவைகளை மக்களிடம் மேலும் எடுத்து செல்வது மற்றும் சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.
    • கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குமரி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்க ப்பட்ட மனுவில், மர்மமாக இறந்த குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மரப்பாலம் மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ஊட்டுவாழ் மடம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிரவாகிகள் சந்துரு, ராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், இளைஞரணி செயலாளர் அட்சயா கண்ணன், மண்டல செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, முருகேஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் வைகுண்ட மணி நிர்வாகிகள் வேலாயுதம், வெங்கடேஷ், ரபீக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

    • போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    ஆதித்தமிழர் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையிலான நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு அவரது இணையதள பதிவில் "சேரி மொழியில் பேச முடியாது" என பதிவிட்டிருந்தார். சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர தெற்கு பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி அமைக்கும் பூத் முகவர்கள் கூட்டம் தெற்கு பகுதி செயலாளர் வக்கீல் முருகேஷ்வரன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மகளிர் அணி இணை செயலாளருமான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் சுகுமாரன், மாநில நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், வக்கீல் சிவ செல்வராஜன், சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெயகோபால், ஜெவின் விசு, ஸ்ரீலிஜா, வட்ட செயலாளர்கள் ராஜாராம், ஜெயராஜ், முருகன், பாலசுந்தர், ராஜகோபால், சதீஷ், ராம்ஜி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×