search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைப்பு
    X

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைப்பு

    • கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்துள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.12 அடியாக உள்ளது. அணைக்கு 1639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1550 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது. அணைக்கு 1849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 129 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணை நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 18 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சூறை காற்றுக்கு அகஸ்தீஸ்வரம், வடுவன் பற்று பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்கம்பங்கள் சேதமானதையடுத்து நேற்று இரவு தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. நள்ளிரவு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×